கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
காத்தடும் தமிழர் நாட்டில்
கயமையை துறத்தி மாய்த்து
சாத்திரம் சடங்கு நோயை
சலிக்காமல் மிரட்டி ஓட்டும்
பாத்திறத் தந்தை எங்கள்
பெரியாரின் தொண்டைப் பற்றி
பூத்திடும் ஒதுக்கீடு மேன்மைப்
பேறுவீர மணியே வாழ்க!
சிறுவனாய் வளரும் போதே
சேரிடம் சேர்ந்த செம்மல்
மருவிலா சேவை காக்கும்
மாண்புறு தமிழர் தலைவர்
பெரியாரின் வடிவாய் இன்றும்
புகழேணி தாங்கும் நெஞ்சம்
வறியவர் வாழ்வு ஓங்க
வாழும்வீர மணியே வாழ்க!
உலகினில் பறந்து சுற்றி
ஒப்பிலா பெரியார் கொள்கை
பலமோடு பரப்பி எங்கும்
பகுத்தறிவு ஓங்கச் செய்தார்
தலைநகர் தில்லி இன்று
தந்தையின் கொள்கை செப்பும்
கலைஉயர் கோட்டம் கண்ட
கோவீர மணியே வாழ்க!
சாதியால் தமிழன் சாகும்
சதியினைப் போக்க இன்றும்
மதிஉயர் கலப்பு மணமாம்
மாப்புரட்சி காணும் செம்மல்
விதியிலா நம்மின் பெண்கள்
வித்தக் கல்வி தந்தார்
நிதியிலாப் பிஞ்சைக் காக்கும்
நிலைவீர மணியே வாழ்க!
நதியினில் தவழும் நீராய்
நற்றமிழ் மேடைப் பேச்சு
விதிமூடம் மடமை சாய்க்கும்
சாடலில் அருவி வேகம்
மதிநல அறிவின் ஊற்றாம்
மாத்தமிழ் நூல்கள் கற்றோன்
கதியிலா நம்மொர் காக்கும்
களம்வீர மணியே வாழ்க!
ஈழத்துத் தமிழர் வாழ்வில்
இனமான உணர்வைக் கூட்டி
வேழம்நம் கலைஞர் எண்ணம்
வேதனை போக்கும் தீரர்
காலத்தின் கொடையாம் டெசோ
கண்டனக் கணைகள் சேர்த்து
ஓலத்தின் தீர்க்கும் வீர
ஓய்விலா மணியே வாழ்க!
பகுத்தறிவு இதழ்கள் எல்லாம்
பாரினில் வழங்கும் சான்றோன்
வகுத்தநல் விடுதலை இன்றும்
வியத்தகு கொள்கைக் குன்றம்
தகுதியாய் மன்றம் கூட்டும்
தக்கநல் இராதா கூடம்
மிகுதியால் அறிவுக் கோட்டம்
மீட்டிடும் நூலகம் கண்டார்!
கழகத்தின் இரும்புக் கோட்டை
கற்பகத் தறுவே வாழ்க!
போலிமை என்றும் போக்கும்
பொன்னொளிர் தலைவா வாழ்க!
எண்பதைக் கடந்து இன்றும்
எழுச்சியின் வடிவே வாழ்க!
மாணுடம் காக்கும் பண்பே
மாசறு தொண்டே வாழ்க!
No comments:
Post a Comment