Saturday, November 12, 2011

முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் நூல் ஆய்வுரை



கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(சென்னையில் முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் ஆய்வுரை)

அறிவியக்கம் நடத்தி தமிழ் மொழிக்கு தனி அடையாளத்தை உருவாக்கி தம் வாழ்நாள் வரை கடைப்பிடித்த சாலை இளந்திரையனாரையும் சாலினி அம்மாவையும் நினைவு கூறும் வண்ணம் தமிழ் எழுதும் முறையைப் பின்பற்றி ஒருநூலையே வெளியிட்டுள்ள முத்துவிழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டனம் பழநிச்சாமியின் கொள்கை உறுதியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.யாங்கள் தாய்லாந்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாடு நடத்தியபோது கவியரங்கில் பங்கேற்று பாடிய பெருமைக்குரிய கவிஞர். பின் மலேசியா சிங்கப்பூர் சென்றுவந்த சிறப்புக்குரியவர்.கோவை என்றாலே அமரர் ஆண்மையரசு அம்மையப்பா அவர்களை மறக்க இயலாது அப்பெருமகன் மன்றத்தையும் தமிழ்ப்பணியையும் நிலைபெறச்செய்தவர்.அப் பெருமகனும் மாநாடு வந்து கலந்து கொண்டதை எண்ணிப் பெருமையுருகிறேன்.

அந்தி தீபம் நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமைதாங்கும் பெருந்தலைவர் கோபாலகிருட்டிணன் அவர்களின் தகுதிவாய்ந்த தலைமையை வணங்குகிறேன்.தலைவர் கோபாலகிருட்டிணன தகுதி வாய்ந்த மாபெரும் மனித நேய மாமணி. இன்று உயர் நிலையில் உள்ள அனைத்துப் பெருமக்களையும் வளர்த்து தமிழர்களை பெருமைப்படுத்திய ஏணி.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது யானும் தந்தையரும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இரண்டாம் மாநாடு நடை பெற்றபோது பெருமகனைக் காண அலுவலகம் சென்றோம் அன்போடு வரவேற்று உற்றுழி உதவி தமிழிற்கு தோள் கொடுத்த பெருமகன். கோயில் குளத்திற்கு அள்ளி வழங்கிய அந்த இருக்கையில் ஒரு தமிழன் அமர்ந்ததால் தமிழின் மேம்பாட்டிற்கு தமிழ் சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கியதை எளிதாக யாரும் மறக்க இயலாது. காலமான என் அருமைத் சிற்றந்தையர் இந்திய நேரடி வரித்துறையின் தலைவர் பதவி வரை உயர்வு கண்ட வா.மு.முத்துராலிங்கம் அவர்களை தலைவர் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி..

நாசே என்றாலே தன்னம்பிக்கைதான் பிறப்பெடுக்கும். தன்கடின உழைப்பால் இன்று கடல் சார் பல்கலைக் கழகம் வரை நிறுவி இங்கு கவிஞரை பாராட்ட அமர்ந்திருக்கும் நாசே இராமச்சந்திரன அவர்களையும். வழக்கறிஞர் வீரசேகரன் அவர்களையும் விழாவை சிறப்புடன் நடத்தும் ஐயா இரவீந்திரன், மற்றும் கவிஞரின் மக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.


அந்திதீபம் கவிதைநூல் 170 தலைப்புகளில் 200 பக்கங்களில் மனிதம் மொழி வாழ்க்கை என அனைத்துத் துறையிலும் தமது முத்து விழா வரைக் கண்ட அனுபவப் பிழிவை நமக்கு வழங்கியுள்ளார் கவிஞர். ஐந்தாம் வகுப்புவரை படித்து ஆடுமாடு மேய்துக்கொண்டிருந்த தாம் ஒரு தமிழ்வழித் திருமணத்தில் பேராசிரியர் ப.சு. மணீயம் அவர்களின் சொற்பொழிவே தம்மை தமிழ் வழீஈர்த்து படித்து பட்டம் பெற்று தமிழாசிரியராகப் பணிபுரிந்து இந்த நூல்களையும் இயற்றவைத்தது என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்.

ஆங்கில மோகத்தால் தமிழ் வழிக்கல்வி அழிக்கப்படுவதைக் கவிஞர் தம்கவிதையால் வன்மையாகக் கண்டிக்கிறார்.
பிறளய்த்தால் குமரிக் கண்டம் அழிந்ததுபோல்
பிறமொழியில் பாடத்தய்ப் பயிற்றி வந்தால்
திறமான தமிழ்நாட்டில் டாடி, மம்மி
திசைமாறி அம்மப்பா மறந்து போகும் (பக்:17}

தமிழ்படித்தோர்க்கே தமிழ் நாட்டினிலே முதன்மய் நிலை வேண்டும்-ஆகவே
தமிழ்ப் பள்ளிகளின் மூடு விழாக்கள் தடுக்க என்செய்தீர் (பக்:41}

தமிழ்வழி படிக்கும் மாணவருக்கு பிச்சய்போடுதல் கேவலம் – இந்தக்
தடத்தில் வருவ்வோர் பணிமுன்னுரிமய் செய்திடல் வெற்றிஊர்வலம்
அமிழ்தென இச்சட்டம் செய்தால் அங்கே கூட்டம் கூடுமே – இதய்
அருந்தமிழ்ப் பேரவய் வலுவாய் தூண்டும் ஆட்சிக் குழுவும் நாடுமா? (பக்:42}

கடுமையாகப் பாடிய கவிஞர் தனது எணபது வயதில் கண்ட தமிழ் அழிப்பால் அதிசயம் என்ற தலைப்பில் சமூக அவலத்தை கண்டு நோகிறார்.

தமிழகம் உள்ள தமிழர் எல்லாம் தமிழய்ப் படித்தால் அதிசயம்
தமிழக கோயிலில் தயக்கம் இல்லாமல் தமிழில் அருச்சனை அதிசயம்
தமிழக வழக்கு மன்றங்களிலே தம்ழில் புழங்கல் அதிசயம் (பக்:44}

அசய்வு அனும் தலைப்பில் அண்ட இயக்கத்தையே நம் கண்முன் நிறுத்துகிறார்.

உலகம் இருப்பது அசய்வாலே – சூழும்
உயிர்கள் இருப்பதும் அசய்வாலே
இலகும் அணுக்களும் அசய்வாலே
இருக்கும் கோள்களும் அசய்வாலே
இசவாய் நாளும் அசய்ந்திடுவீர் – அதற்கு
இணிக்கும் பயிற்சிகள் துணையாகும் (பக்:60}

உடற்பயிற்சியையும் தம் கவிதையாலே தருகிறார் கவிஞர். தொந்தி எமனுக்குத் தந்தி எனச் சாடுகிறார்.

முந்தி வந்திடும் தொந்தி – எமனய்
முந்தி வரச் சிய் தந்தி – அதனால்
குந்திக் குந்தி உட்கார் – வயிற்றய்க்
குனிந்து குனிந்து எக்கு (பக்:65}

இதுபோன்று உடல் பேணும் கவிதைகளை அனுபவப் பிழிவாகத் தந்துள்ளார் கவிஞர்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

என்ற குறளின் வழி முயற்சிக்கு கவிஞரின் கவிதை உள்ளத்தைத் தொடுகிறது

முயற்சி என்ற விதய் போடு
பயிற்சி என்ற செயல் பாடு
வளர்ச்சியான பயிர் விளையும் – அது
மகிழ்ச்சி உள்ள அறுவடையே (பக்:76}

மூடப்பழக்கக்கங்களை ஆங்காக்கே சாடுகிறார் கவிஞர். நல்லநேரம் என்ற தலைப்பில்

பஞ்சாங்க படிமனமே பார்த்துச் செய்தும் – பலர்
பஞ்சாய்ப் போனவர்கள் நாட்டிலுண்டு
அஞ்சாமல் உறுதியுடன் உழய்த்தவர்கள் – இந்த
அகிலமே பாராட்டும் தங்கத் தேர்கள் (பக்:89}

கோயில்கள் கட்டி என்ன?
கும்பிடு போட்டுமென்ன
கோபத்தை ஒழிக்காவிட்டால் – கண்மணி
கொஞ்சமும் பயனில்லையே! ` (பக்:97}

சகோதர உறவைப்பாட வந்த கவிஞர் அண்ணன் தம்பி எனும் தலைப்பில் தம் குடிக்கு உணர்த்துகிறார்.

உயர்ந்தவன் நானே எல்லாம் எனக்கென
ஒருவன் மாறிச் செயல்பட்டால்
ஒற்றுமய் குலயும் வெறுப்பும் கவலய்
உள்ளே புகுந்து வாட்டிடுமே (பக்:125}

மலேசியா சிங்கப்பூர் சென்ற கவிஞர் அந்நாட்டின் எழிலை நம் கண் முன் கவிதையில் நிறுத்துகிறார்.

தெங்கெண்ணெய் கொழுப்பென்று ஒதுக்கி – அங்கே
தேர்ந்திட்டார் பனயெண்ணெய் மரங்களாய்ப் புதுக்கி
அங்குரயில் குளிர்பெட்டி ஓட்டம் – நிலயம்
அடைகின்ற பொதிலே ஊர்ப்பெயர் காட்டும். (பக்:147}

வாக்களர்களுக்கு அறிவுறுத்தும் வண்ணம் அரசியல் பகுதியில் கவிதைக் கனலை கக்குகிறார்.

பதவிக்காகக் கூட்டணி சேர்தல்
பாமரத் தனத்தி மக்கள்தாம்
உதவிடும் மதுபிரி யாணி ஒதுக்கி
யோக்கியர் தேர்வதும் எப்போது? (பக்:186}

இலவசங்கள் பெறுவதே இன்பம் என்று
ஏற்ப்து இகழ்ச்சி அவ்வய் வாக்கய்த் தின்று
கய்வசங்கள் இருப்போரும் முட்டி மோதி
கருணையின்றி மாய்கின்றார் அந்தோ சேதி (பக்:189}

முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தீபம். சமுதாயக் கேடுகளை ஒழிக்கும் நெருப்பு. தமிழர்களின் சாதனைகளைச் செப்பும் சுடர்.தமிழ்ர்களின் வாழ்வியல் காக்கும் மங்கல விளக்கு.

அன்பினால் அடக்கத்தய்க் கற்றவன் சான்றோன்
ஆத்திரம் அலட்சியம் அற்றவன் சான்றோன்
நண்பினய்ப் பண்பினால் நட்டவன் சான்றோன்
நலந்தரு பழக்கமே பலமுடன் ஊக்குமே (பக்:94}

என்ற தம் கவிதை வாழ்வு வாழும் முத்துவிழாக் காணும் பெருமகன் நீடு வாழ்ந்து தமிழ்ச் சமுகத்துக்கு தொண்டாற்ற அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.

Friday, November 11, 2011

அன்னை சேது 5ஆம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்களம் அனனை சேது அறக்கட்டளையின் பொற்கிழி வழங்கு விழா


5-11-2010 அன்று காலை 10 மணிக்கு அன்னை நினைவு பொற்கிழி வழங்கு விழா மதுரையில் கல்லூரி விடுதியில் நடைபெற்றது.
சங்க கால இலக்கியங்களையும் பல்வேறு தமிழ் இலக்கியங்களையும் இந்தியில் மொழிபெயர்த்த பேராசிரியர் முனைவர் பி.கே பாலசுப்பிரமணியம் அவர்கட்கும், சிற்ப அம்பலம் தமிழ்க்கல்வி எனற் ஈராயிரம் பக்கங்கள் கொண்ட நூலை படைத்து, பதிப்பித்த சாதனையாளர் இறுதியில் இன்பத்தான் (சதானந்தம்)அவர்கடகும் ரூ.10,000 பொற்கிழி வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

திருக்குறள்செம்மல் மணிமொழியன் தலைமை தாங்கி அன்னை சேதுவின் திரூஉருவப் படத்தை திறந்துவைத்து இரண்டு அறிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கினார்.

யாதவர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இ.கி.இராமசாமி கேடயம் வழங்கினார். கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார்.மதுரை தமிழ்ச் சங்க பேராசிரியர் சின்னப்பா, முனைவர் இரா.மோகன் ஆய்வுரை வழங்கினார்.சேவைச்செம்மல் நவமணியன் அருட்தந்தை ஞான ஆனந்தராசு கவிஞர் இரவி பாராட்டுரை வழங்கினர். கவிஞர் அசோக்ராசு தொகுப்புரை வழங்கினார்.ஆவின் பொன்.மீனாட்சிசுந்தரம் நன்றி நவின்றார்

அன்னை சேதுமதியின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2011 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. முதுகுளத்தூர் மாகாதேவன் அவர்களின் மகன் குமரன், கமுதி கோடையிடி குத்தாலம் அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். புலவர் வேணு செயராமன், கவிஞர் முனியாண்டி, , மோ.அன்பழகன், செல்லம் பூசாரி, கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் சானகிசக்திவேல் குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார்.

ஆண்டநாயகபுர மண் எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண். உலகத்திற்கே இரு பெருமக்களை முத்து இராமாயி மூலம் வழங்கிய மண். ஒருவர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். உலகின் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒப்பற்ற தமிழ்த் தொண்டாற்றும் உலகத் தமிழ்த் தூதுவர். இன்னொருவர் இந்திய ஆட்சிப்பணியில் இந்திய மக்களுக்குப் பாடுபட்டுப் பணியாற்றி காலமான வா.மு முத்துராமலிங்கம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

என்ற குறளிற்கேற்ப அன்னையின் நினைவையொட்டி அங்கு வாழும் மக்களோடு உணவுண்டு மகிழ்ந்தோம்.

அருமைத்தாயர் சேதுமதி அவர்கள் தந்தையாரை மணமுடித்து மருகளாகக் குடியேறிய மண் இந்தமண். இங்குள்ள நத்தம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். நானும் இங்கு அன்னையிடம் மாணவனாக இருந்த மண் இந்தமண்ணில் தாயிடம் பயின்றவர்கள் இன்னும் நினைவோடு கூறுவது மகிழ்வாக இருக்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் அனைத்திலும் வெற்றிகண்டு இராமநாதபுரத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்து சென்னைக்குச் சென்று தந்தையாரின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிராக இருந்தவர். ஐந்து மக்களைப் பெற்றெடுத்து ஐவரையும் “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிது” என்ற குறள்வழி இந்தச் சமூகத்துக்கு வழங்கிய அன்னை சேதுமதி.

வாழ்க அன்னையின் புகழ்

வளர்க அறக்கட்டளையின் தொண்டு.

Thursday, September 22, 2011

ஈழப் போரில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேவை ஐநா மன்றத்தின் குற்றவாளி கூண்டில் நிறுத்த இந்தியத் தலைமையமைச்சர் மாண்பமை மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை



கவிமுரசு. வா.மு.சே. திருவள்ளுவர்

ஈழத் துயரில் அறிஞர்களும் எழுத்தாளர்களும் உணர்வாளர்களும் பெருங்கவிக்கோ தலைமையில் ஒன்று கூடி வேற்றுமையிலும் ஈழத் துயர் நீக்க ஒற்றுமையாக உண்ணா நோண்பு இருந்து போராடியதும் தில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் மாண்பமை மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து கோரிக்கை வழங்கியதும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.

தில்லி சந்தர் மந்தர் பகுதியில் 28 – 7- 2011 அன்று காலை 8 மணிக்கு ஒன்று கூடி மாலை 5.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் ஒவ்வொருவரும் ஈழப் போரில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேவை ஐநா மன்றத்தின் அறிக்கைப்படி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என முழக்கமிட்டனர்.

சென்னையிலிருந்து 120 பெருமக்கள் சி.டி தொடர்வண்டியில் 25-7-2011 அன்று புறப்பட்டோம். தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பெருமக்கள் வருகை தந்திருந்தனர். சென்னையிலிருந்து 25 புறப்பட்டாலும் வெளியூரிலிருந்து 24 அன்றே புறப்பட்டு சோர்வில்லாமல் ஈழ மக்கள் சோர்வினை நீக்க பங்கேற்றது என்னை நெகிழச்செய்தது.

சென்னையிலிருந்து தொடர்வண்டி புறப்பட்டதும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. யாங்கள் பெயர்ப் பதிவை அனைத்துப் பெருமக்கள் இருக்கை சென்று கையொப்பம் பெற்று வருகையை உறுதிப்படுத்திக் கொண்டோம். உணர்வாளர்கள் அனைவரும் ஒருங்கிணைய தொடர் வண்டிப் பயணம் உறுதுணையாக இருந்தது. தொடர்வண்டியில் பயணித்தோர்க்கு தமிழ்ப்பணி இதழ்களும் நூல்களும் வழங்கப்பட்டன.

27ஆம் நாள் காலை புதுதில்லி நிறுத்தத்தை அடைந்தது. அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ, முகுந்தன், கிருட்டிணமூர்த்தி போன்ற பெருமக்கள் எங்களை வரவேற்று பேருந்தில் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். இன்று காலை 9-30 மணிக்கு தலைமையமைச்சரை சந்திப்பதாகக் கூறினர். யாங்கள் தயார் நிலையில் இருந்தோம். முகுந்தன் தந்தையாரை அழைத்துக் கொண்டு தங்குமிடம் வந்தார். யாங்கள் 5 பேர் ஆகையால் மூவரை தந்தையாரோடு அனுப்பி யானும் முகுந்தனும் தாணியில் சென்றோம். தலைமையமைச்சரை சந்திப்பதற்கு அனுமதி பெற்று எங்களுக்காக தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தமிழ்நாடு இல்லத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

சாலையில் சாலை நெருக்கடியால் யாங்கள் செல்வதற்குள் தலைவர் தங்கபாலு எங்கே எங்கே உள்ளீர்கள் எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். இறுதியாக முகுந்தன் என்னிடம் தொல்பேசியை கொடுத்த்விட்டார். யான் ஐயா, யாங்கள் நெருங்கி வந்துவிட்டோம் ஐயா முன்னமே புறப்பட்டு விட்டார் அங்கு வந்துவிடுவார் என்றேன். தாம் வாயிலிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார். ஒருவழியாக அனைத்துத் தடைகளயும் கடந்து தந்தையாரும் யாங்களும் தமிழ்நாடு இல்லத்தை அடைந்தோம் வாயிலில் தயாராக இருந்த தலைவர் தங்கபாலுவின் மகிழ்வுந்தோடு தலைமையமைச்சர் இல்லம் நோக்கி விரைந்து சென்றோம்.

காங்கிரசுத் தலைவர் தங்கபாலு, உலகத் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் உலகத்தமிழ்க் கவிஞர் பேரவையின் செயலாளர் கவிஞர் பனப்பாக்கம் சீத்தா,காஞ்சி மருத்துவமாமணி விம்முணா மூர்த்தி, முத்தமிழ்ப்பேரவைச் செயலாளர் முகுந்தன், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர் வா.மு.சே.திருவள்ளுவராகிய யான் அனவரும் தலைமை அமைச்சரின் வாயிலில் காவலர்கள் புறச்சோதனை முடித்து, எங்களின் அடயாள அட்டைகளின் சோதனை முடித்து உள்ளே அனுப்பினர். ஐயா அவர்கள் தன்னுடைய கைப்பையையும் கைத்தொலைபேசியையும் கொண்டுவந்ததால் ஒரு காவலர் அதைப் பெற்று அனுப்பினர்.

சோதனைக் கட்டம் முடித்து தலைமையமைச்சக இரு மகிழ்வுந்து வந்தது. அதில் யாங்கள் ஏறி சில மணித்துளிகளில் தலைமையமைச்சரின் இல்லத்தை அடைந்தோம். யாங்கள் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம், யான் செர்மனி பெர்லின் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மூன்றாம் மாநாட்டிற்கு தலைவர் தங்கபாலு அவர்களை அழைத்தையும் மலருக்கு அவர் வழங்கிய வாழ்த்தையும் நினவுபடுத்தினேன். தந்தையார் அவர்களோடு டாக்டர் பஞ்சாட்சரம் நடத்திய தமிழீழ மாநாட்டில் பங்கேற்றதை நினைவுகூர்ந்தார். தமிழகத்திலிருந்து பல தலைவர்கள் பங்கேற்றதை தந்தையார் கூறினார்.

தலைமைஅமைச்சரைக் காண காவலர் அழைத்தனர். யாங்கள் அனைவரும் தலைமையமச்சரின் அறைக்குச் சென்றோம்.தலைமையமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள வ்ருகை தந்தார். யாங்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் கூறினோம். தலைவர் தங்கபாலு அவர்கள் எங்கள் ஐவரையும் தலையமைச்சருக்கு அறிமுகப் படுத்தினார். தந்தையார் அவர்கள் ஈழப் போரில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேவை ஐநா மன்றத்தின் அறிக்கைப்படி குற்றவாளி கூண்டில் நிறுத்த இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை மடலை உலக்த் தமிழ்க் கூட்டமைப்பின் பட்டினிப் போராட்ட குழுவினர் சார்பாக வழங்கினார்.

ஈழத்தில் முள் வேலியில் துன்புறும் அவலத்தையும், இராசபக்சே அரசு எந்தவித மனித நேயமின்றி நடத்துவதையும் அமெரிக்காவில் ஐநா மன்றம் அறிக்கையின்படி போர்க்குற்றவாளியாக இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்றும்குறிப்பிட்டோம். அஞ்சா நெஞசமுடைய தந்தையார் அவர்கள் இந்தியாதான் இக் கொலைகளைச் செய்ததாக எண்ணும் அனைவரின் கருத்தையும் வெளியிட்டு அதை தஙகபாலு அவர்களும் மொழி பெயர்த்தார். தலைமையமைச்சர் அவர்கள் இந்தியாவின் சார்பில் வழங்கிய நிதி உதவிகளையும் தொடர்ந்து வெளிநாட்டு அமைச்சகம் கவனித்து வருவதையும் தலையமைச்சர் குறிப்பிட்டார்.

யான் தலையமைச்சரிடம் ” Respected Sir Your Aids were not utilized by the srilankan government to the worstly affected area of tamils still they are in bad situation” தக்க நடவடிக்கை எடுப்பதாக தலைமையமச்சர் அவர்களும், தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி கூர்ந்து கவனிக்கும் என்று தங்கபாலு அவர்களும் கூறினர்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஈழத் தமிழர்ககு இராசபக்சே அரசின் கொடுரப் போர்க்குற்றங்களை வண்ணப்படங்களுடன் ஆங்கிலத்தில் மலராகத் தொகுத்துள்ளனர். ஈழத்தமிழர் கண்ட கொடுமைகளை விளக்கும் மலராக உள்ளது. அம்மலரை தலைமையமைச்ச்ருக்கு தமிழ்ச்சங்கத் தலைவர் மீனாட்சிசுந்த்ரம் வழங்கினார்.முத்தமிழ்ப்பேரவைச் செயலாளர் பொன்னாடை போர்த்தினார்.

யான் 40 ஆண்டு கால பெருமையுடைய தமிழ்ப்பணி இத்ழை வழங்கினேன். இந்த இதழிழ் இலண்டன் ஒளிபரப்பு 4 ஒளிபரப்பிய கொடுரப் படங்களை அட்டையில் அச்சிட்டிருந்தேன், எம் அலுவலகச் சாலையோரம் வாழ்ந்து மறைந்த ஒரு அம்மையாரைப் பற்றிய கவிதை எழுதி இருந்தேன். சாலை மக்கள் வளர்ந்தால்தான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி எனக் குறிப்ட்டிருந்த்தேன். தலைமையமைச்சர் இல்லத்தில் எங்களுக்கு வடை சாம்பார் சட்டினி தேனீர் வழங்கினர்.

அறிஞர்களும், உணர்வாளர்களும், தொண்டர்களும் ஈழப்போரில் குற்றம்புரிந்த இராசபக்சேவைக் கூண்டில் ஏற்ற உண்ணாநோன்பு இருந்து தலைமையமைச்சரைத் சந்தித்து உணர்வுகளை வெளிப்படுத்தினோம், தலைமையமைச்சரை சந்தித்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அனைவருக்கும் இது குறித்த செய்தியை உலகறியச் செய்தோம். தலைமையமைசரை சந்திக்க ஏற்பாடு செய்த தலைவர் தங்கபாலு அவர்கட்கு தந்தையார் நன்றி கூறினார். அன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் இராசபக்சேவை போர் குற்றவாளியாக இந்தியா நிர்பந்திக்க வேண்டு என்ற செய்தி வெளியாகியது.

28-7-2011 அன்று காலை பட்டினிப் போராட்டம் தொடங்கியது காங்கிரசு கட்சித் த்லைவர் கே.வி. தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன்,லோக் சனசக்தி தலைவர் ராம்விலாசு பாசுவான்,திமுக துணைப் பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன், மாநிலங்கலவை உறுப்பினர் வசந்தி சுடான்லி, மற்றும் பெருமக்கள் உண்ணாநோன்பில் பங்கேற்று கண்டன உரையாற்றினர், இறுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி,கே,எசு. இளங்கோவன், பாரதீய சனதா கட்சி தில்லி துணைமேயர் அணில் சர்மா பழச்சாறு கொடுத்து உண்ணா நோன்பை முடித்துவைத்து கண்டன உரையாற்றினர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயககுநராகிய யான் நன்றியுரை கூற பட்டினிப் போராட்டம் சிறப்புடன் நடந்து முடிந்தது.

Monday, September 19, 2011

‘கவிச்சிங்கம் கண்மதியன் அன்பென்னும் உறவுக்கு உரைகல்


‘கவிச்சிங்கம் கண்மதியன் அன்பென்னும் உறவுக்கு உரைகல்
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(கவிச்சிங்கம் கண்மதியன் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கவிச்சிங்கம் கண்மதியன் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள் இனமானக் காவலர் பேராசிரியர் அவர்களின் வருகை கவிச்சிஙகம் பல்லாண்டு காலம் ஏங்கிய ஏக்கத்தின் பேறு.. கண்மதியன் அவர்கள் எங்களது குடும்ப நண்பர். தந்தையரோடு 40 ஆண்டுகாலம் தொடர்புடையவர். சென்னையில்அவரது மகன் திருமணம் வைதீக முறையில் நடந்த போது திருமணத்திற்கே செல்லாமால் புறக்கணித்த கொள்கையாளர். திருமணம் நடக்கும் நாளன்று குடும்பத்தாரைப் பணியவைத்து எம் அருமைத்தந்தையர் பெருங்கவிக்கோ, கவிக்கொண்டல் மா.செ.. முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், எழுகதிர் அருகோ ஆகியோரைக் கொண்டு தமிழ்த் திருமணத்தை நடத்தி முடித்த பெருமைக்குரிய கொள்கை மறவர். இனமானக் காவலரை திருமணத்திற்கே அழைத்து நடத்த அவர் ஏங்கிய ஏக்கம் இன்று கவிஞரின் நூல்வெளியீட்டு விழாவிற்கு பேராசிரியரின் வருகையால் மன நிறைவு பெறுகிறார்.

கண்மதியன் பன்னாட்டுத்தமிழுறவு மன்றச் செய்லாளராக மிகச் சிறப்பாக மாதக் கூட்டங்களை நடத்தியவர். மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் மாநாட்டில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பெருந்தகை. யான் உலகத் தமிழர்கள் கையேட்டையும், தந்தையாரின் பவழ விழா மலரையும் வெளியிட்டபொது அவரது உன்னதப் பேருழைப்பை எண்ணி எண்ணிப் போற்றுகிறேன்.

மலேசியா பன்னாட்டுத்ந்தமிழுறவு மன்ற 6ஆம் மநாட்டிற்கு தன் தாயரோடு வருகை தந்த பாசத்திருமகன். மாநாட்டின் ஐந்து நாட்களும் தயாரோடு அவர் வலம் வந்ததை அனைவரும் பாராட்டினர்.

தமிழ்ப்பணியின் தொடக்க காலத்திலிருந்தே எழுதிவரும் எழுச்சிக்கவிஞர், கவிஞரின் கவிதைகளை பாவேந்தர் மரபுப் பாவலர் வரிசையில் முனைவர் மறைமலை இலக்குவனார் மிகச் சிறந்த ஆய்வுரை வழங்கியுள்ளார்.

கவிஞரின் கவிதைகள் சமூகத்திற்கு அரணாக உள்ளவை. தந்தை பெரியாரைப் பற்றி பாடும்போது

“நீ பிறக்க வில்லையெனில் நிலந்திருந்த வழியேது” என தமிழகத்தின் விடிவெள்ளியை நன்றியோடு எண்ணுகிறார்.

அண்ணல் காந்தியைப் பற்றி கூறும் போது மனித தெய்வம் என்று கூறி தெய்வம் என்று கல்லையும் மண்ணையும் வணங்கும் மக்களுக்கு வழிகாட்டுகிறார்,

கோபுரத்தில் பிறந்த காந்தி
குடிசையில் வாழ்ந்து காட்டி
மாபெரும் தியாக வாழ்வில்
மனிதருள் தெய்வ மானார். (பக்:93)

தென்னாட்டு காந்தி பெரறிஞர் அண்ணாவைப் பற்றி குறிப்பிடும்போது அவரது வாழ்வையே படம்பிடித்துக் காட்டுகிறார்.

“அரிவினில் முற்றிய நெற்கதிர்
அகற்றலில் அவனோர் செங்கதிர்
பொறுமையில் தாங்கிடும் மாநிலம்- புதுமைப்
புரட்சியில் அவனோர் போர்க்களம் (பக்:181)

மகாகவி பாரதியைப் பாட வந்த கவிஞர் பாரதி தன்னிடம் கூறுவது போன்றே பாடி இன்றைய கவிஞர் நிலையைப் பாடுகிறார்.

என்னைநீ பார்த்த பின்னும்
இன்னுமா கவிதை தீட்டி
உன்னுடல் அழித்துக் கொண்டாய்?
ஊரினுக் குழைக்க வந்தாய்? (பக்:185)
இதனால்தான் கவிஞர் சில காலம் கவிதைத் துறையைத் துறந்திருந்தாரோ.

பாவெந்தனைப் பாட வந்த கவிஞர் அவரும் புரட்சிக் கவிஞரின் வழித்தோன்றல் என நிருபிக்கிறார்.

புரட்டுப் பொய்மை தம்மைப்
புரட்டித் புரட்டித் தாக்கி
விரட்டி யடித்த வேந்து
வெடிகுண் டான பாட்டு (பக்:189)

இலக்கணத் தாத்தா மே,வி.வே அவர்களைப்படும்போது

இலக்கணம் தன்னில் ஈடில் புலமை
முதிர்ச்சி பெற்ற முற்றிய செந்நெல்
அதிர்ச்சி வைத்தியம் அளித்திடும் மருத்துவர். (பக்:231)
என மனமொன்றிப் பாடுகிறார்.

அண்ணன் கவிச்சிங்கம் அவர்களைப் பற்றி யான் என் சிந்தையில் தோன்றியதை அவரே தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

முறைப்படி தமிழ்கற்ற யானோர் புலவன்
மூண்டகொடுஞ் செயலெதிர்க்கும் யானோர் தலைவன்
அறிஞர்தம் ஏவலுக்கு யானோர் இளவல்
அன்பென்னும் உறவுக்கு யானோர் உரைகல்
விதியென்று உரைப்பார்க்கு யானோர் பகைவன்! (பக்:207)

நூறு திருக்குறளுக்கு வெண்பா பாடி குறளமுதம் தந்துள்ள கவிஞர்

சொல்லுதல் யாவர்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

என்ற குறளுக்கு ஒப்ப சொல்லிய வண்ணம் தம் வாழ்க்கை வாழும் அண்ணன் கண்மதியன் அவர்கள் வாழ்வாங்கு வாழ எம் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தினர் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

Saturday, September 3, 2011

தமிழன்னை மகுடம் சூட்டப்பட்ட செய்தி


தந்தையார் கெனொசா உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்கு பெற்றதை அமெரிக்கப் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டுளன.

ஒரு தமிழ்க் கவிஞனை அமெரிக்காவில் பத்திரிக்கைகள் உலகக் கவிஞர்களுடன் இணைத்துப் பெருமைப் படுத்துவது கட்டுரையாக வெளியிடுவது சிறப்பாக அமையும்.

தமிழன்னை மகுடம் சூட்டப்பட்ட செய்தியை தங்கள் பத்திரிக்கை உலக நண்பர்களுக்கும் தங்கள் பதிவிலும் வெளியிடுவது தமிழன்னைக்கு நாம் செய்யும் சிறப்பு

மேலும், நிழற்படங்கள், செய்தி தேவைப்படின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

செய்தி உலக நண்பர்கள் மின்னஞ்சல் இருப்பின் எனக்கு அனுப்புங்கள், நானும் அவர்களைத் தொடர்பு கொள்கிறேன்.

நட்புடன்
.கவி.

Tuesday, July 12, 2011

வெல்க சமச்சீர் கல்வி


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னை 23-6-2011அன்று பூவிருந்தவல்லியில் நடைபெற்ற கவியரங்கை
தொடங்கி வைத்த தொடக்கப் பா]

மூத்த தமிழ் வாழ்வின்
முதன்மை மண்ணின் மக்காள்
காத்த தமிழ் நாட்டின்
கனிந்த கண்மணி மக்காள்
பூத்த தமிழ் நெஞ்சம்
புலர்ந்த தமிழ் நூல்கள்
ஏத்தும் எம்மொழியின் பேறே
ஏற்க என்றன் வணக்கம்|

பாக்கம் தமிழன் இவன்
பண்பார்ந்த தமிழ் அன்பன்
ஊக்கத் தமிழ் வார்ப்பின்
உயர்ந்த கவி நெஞ்சன்
பூக்கும் தமிழ்ப் பூங்கா
பூவைத் தமிழ் அங்கம்
காக்கும் தமிழர் மானம்
கவிஞனுக்கு என் வணக்கம்|

தேக்கும் மரபு வானம்
தேர்ந்த கவி ஊற்று
ஆக்கும் புயல் காற்றாம்
அரவணைக்கும் தலைமை நெல்லை
போக்கித் தமிழ்ப் பகையை
பொழிவாய் தமிழ் ஆளும்
காக்கும் இராமச் சந்திரர்
கவிவாணர்க்கு என் வணக்கம்.

வந்தோரை ஆள வைத்து
வறியாராய் தினம் நிற்கும்
சொந்தமதை உதறித் தள்ளி
சுகமாகக் கைகள் ஏந்தும்
விந்தைக் குணம் என்றால்
வின்வளர்ச்சி வரும் எங்கே
மந்திக் குணம் ஏற்று
மானமின்றி நிலம் வாழ்வோ

பெரியார் கொள்கை தம்மை
பேணியே ஏற்கா தன்மை
உரியாரை உணராப் போக்கால்
உள்ளதை இழந்து நின்றான்
பொரியை ஊதுதல் போன்றே
பொல்லாதார் கையில் உள்ளான்
நெறிமறந்த நம் மக்கள்
நிலையாதல் என் நாளோ

பாவேந்தன் தோன்றி நம்மின்
பகுத்தறிவு பாவைத் தந்தார்
நாவேந்தும் கலைஞர் நன்றாய்
நயத்தகு சமச்சீர் கண்டார்
பூவேந்தும் மழலைச் செல்வம்
புகழேந்தும் கல்வி ஒன்றாய்
சாவேந்தல் முறையோ தானா
சிந்திப்பீர் செயலாய்க் காண்பீர்

கோபுரத்து வாழும் பிள்ளை
கொட்டடியில் வாழும் கிள்ளை
மாபுகழின் கல்வி தம்மை
மாசமச் சீராய் கற்றல்
நாபுகழ் கலைஞர் சிந்தை
நசுக்குதல் முறையோ சொல்வீர்
பாபுகழ் அறிஞர் கண்ட
பயன்சமச்சீர் வீழ்தல் நன்றோ

சாத்திரம் சடங்கு மாயம்
சலிக்காமல் காணும் ஆட்சி
கோத்திரம் கோயிலில் வீணாய்
கோடிகோடி கொட்டும் ஆட்சி
காத்திடும் மழலைச் செல்வம்
கல்வியில் தடைதான் ஏனோ
மாத்திறக் கல்வி தன்னை
மதியாமல் மாய்த்தல் நன்றோ

கல்வி நிலையம் எல்லாம்
கயமைக் கீழோர் கையில்
கொள்ளை நிலையம் என்றே
கோடிகோடி சேர்க்கும் நாளில்
பள்ளீச் சமச்சீர் சாய்த்து
பருவத்தே பம்மாத்து காட்டி
கல்விப் பயனை ஏழ்மை
கிட்டாமல் செய்யும் மோசம்

எதுதமிழர் உரிமை என்றே
எழுச்சிக் கவிஞர் மக்காள்
முதுகு தெறித்து ஓடும்
முத்தமிழ்க் கவியைத் தருக
சதிவலை தகர்த்து எரிய
சமத்துவ சமச்சீர் காண்க
ஆதித்தமிழர் கவிய ரங்கை
ஆர்தெழுந்தே தொடங்கு கின்றேன்

தொடங்கிய முழக்க நாதம்
தொடர்ந்திடும் செயலாய்க் காண்க
முடங்கிய நம்மின் வீரம்
மூர்க்கமாய் கிளர்ந்து எழுக
அடக்கிய கூட்டம் ஓய
ஆவேச எழுச்சி கொள்க
தொடங்கிய சமச்சீர் காண
தொழரே வெற்றி காண்போம்|

Friday, July 1, 2011

மண்ணில் உன்நிலை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்


மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில் புதைவது மாற்றமா
சீற்றம்இன்றிதோழா
சிறுமை ஏற்பது மாற்றமா
நாற்றம்இன்றிதோழா
நலமாய் மகிழ்வது மாற்றமா
தேற்றுவோர்தம்மைத்தோழா
தெருவில் தள்ளுதல் மாற்றமா


வெற்றுக்கூச்சலைத்தோழா
வெறியாய்க் கொள்வது மாற்றமா
உற்றஉன்மொழிதோழா
உதறத் துடிப்பது மாற்றமா
கற்றஉன்வழிதோழா
கதற வைப்பது மாற்றமா
முற்றும்முழுமதிதோழா
மூடியே வைப்பது மாற்றமா

பற்றிலான்வாழ்வைத்தோழா
பகடியம்செய்வதுமாற்றமா
வெற்றியின்மாளிகைதோழா
வேரோடுசாய்ப்பதுமாற்றமா
கற்றவர்கல்வியைத்தோழா
கடிந்து முடிப்பது மாற்றமா
உற்றவர்உரிமையைத்தோழா
உலகில் மாய்ப்பது மாற்றமா

கூற்றுவன்மடமைமூடம்
குனிந்து ஏற்றதன் சோகம்
வேற்றுமைசோதிடக்கயமை
வேதனைதந்தமாயம்
நாற்றங்கால் பகுத்தறிவுக் கொள்கை
நயத்தகு பெரியார் எங்கே
மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில்உன்நிலைஎன்ன?