

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்
(சென்னையில் முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் ஆய்வுரை)
அறிவியக்கம் நடத்தி தமிழ் மொழிக்கு தனி அடையாளத்தை உருவாக்கி தம் வாழ்நாள் வரை கடைப்பிடித்த சாலை இளந்திரையனாரையும் சாலினி அம்மாவையும் நினைவு கூறும் வண்ணம் தமிழ் எழுதும் முறையைப் பின்பற்றி ஒருநூலையே வெளியிட்டுள்ள முத்துவிழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டனம் பழநிச்சாமியின் கொள்கை உறுதியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.யாங்கள் தாய்லாந்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாடு நடத்தியபோது கவியரங்கில் பங்கேற்று பாடிய பெருமைக்குரிய கவிஞர். பின் மலேசியா சிங்கப்பூர் சென்றுவந்த சிறப்புக்குரியவர்.கோவை என்றாலே அமரர் ஆண்மையரசு அம்மையப்பா அவர்களை மறக்க இயலாது அப்பெருமகன் மன்றத்தையும் தமிழ்ப்பணியையும் நிலைபெறச்செய்தவர்.அப் பெருமகனும் மாநாடு வந்து கலந்து கொண்டதை எண்ணிப் பெருமையுருகிறேன்.
அந்தி தீபம் நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமைதாங்கும் பெருந்தலைவர் கோபாலகிருட்டிணன் அவர்களின் தகுதிவாய்ந்த தலைமையை வணங்குகிறேன்.தலைவர் கோபாலகிருட்டிணன தகுதி வாய்ந்த மாபெரும் மனித நேய மாமணி. இன்று உயர் நிலையில் உள்ள அனைத்துப் பெருமக்களையும் வளர்த்து தமிழர்களை பெருமைப்படுத்திய ஏணி.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது யானும் தந்தையரும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இரண்டாம் மாநாடு நடை பெற்றபோது பெருமகனைக் காண அலுவலகம் சென்றோம் அன்போடு வரவேற்று உற்றுழி உதவி தமிழிற்கு தோள் கொடுத்த பெருமகன். கோயில் குளத்திற்கு அள்ளி வழங்கிய அந்த இருக்கையில் ஒரு தமிழன் அமர்ந்ததால் தமிழின் மேம்பாட்டிற்கு தமிழ் சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கியதை எளிதாக யாரும் மறக்க இயலாது. காலமான என் அருமைத் சிற்றந்தையர் இந்திய நேரடி வரித்துறையின் தலைவர் பதவி வரை உயர்வு கண்ட வா.மு.முத்துராலிங்கம் அவர்களை தலைவர் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி..
நாசே என்றாலே தன்னம்பிக்கைதான் பிறப்பெடுக்கும். தன்கடின உழைப்பால் இன்று கடல் சார் பல்கலைக் கழகம் வரை நிறுவி இங்கு கவிஞரை பாராட்ட அமர்ந்திருக்கும் நாசே இராமச்சந்திரன அவர்களையும். வழக்கறிஞர் வீரசேகரன் அவர்களையும் விழாவை சிறப்புடன் நடத்தும் ஐயா இரவீந்திரன், மற்றும் கவிஞரின் மக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.
அந்திதீபம் கவிதைநூல் 170 தலைப்புகளில் 200 பக்கங்களில் மனிதம் மொழி வாழ்க்கை என அனைத்துத் துறையிலும் தமது முத்து விழா வரைக் கண்ட அனுபவப் பிழிவை நமக்கு வழங்கியுள்ளார் கவிஞர். ஐந்தாம் வகுப்புவரை படித்து ஆடுமாடு மேய்துக்கொண்டிருந்த தாம் ஒரு தமிழ்வழித் திருமணத்தில் பேராசிரியர் ப.சு. மணீயம் அவர்களின் சொற்பொழிவே தம்மை தமிழ் வழீஈர்த்து படித்து பட்டம் பெற்று தமிழாசிரியராகப் பணிபுரிந்து இந்த நூல்களையும் இயற்றவைத்தது என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்.
ஆங்கில மோகத்தால் தமிழ் வழிக்கல்வி அழிக்கப்படுவதைக் கவிஞர் தம்கவிதையால் வன்மையாகக் கண்டிக்கிறார்.
பிறளய்த்தால் குமரிக் கண்டம் அழிந்ததுபோல்
பிறமொழியில் பாடத்தய்ப் பயிற்றி வந்தால்
திறமான தமிழ்நாட்டில் டாடி, மம்மி
திசைமாறி அம்மப்பா மறந்து போகும் (பக்:17}
தமிழ்படித்தோர்க்கே தமிழ் நாட்டினிலே முதன்மய் நிலை வேண்டும்-ஆகவே
தமிழ்ப் பள்ளிகளின் மூடு விழாக்கள் தடுக்க என்செய்தீர் (பக்:41}
தமிழ்வழி படிக்கும் மாணவருக்கு பிச்சய்போடுதல் கேவலம் – இந்தக்
தடத்தில் வருவ்வோர் பணிமுன்னுரிமய் செய்திடல் வெற்றிஊர்வலம்
அமிழ்தென இச்சட்டம் செய்தால் அங்கே கூட்டம் கூடுமே – இதய்
அருந்தமிழ்ப் பேரவய் வலுவாய் தூண்டும் ஆட்சிக் குழுவும் நாடுமா? (பக்:42}
கடுமையாகப் பாடிய கவிஞர் தனது எணபது வயதில் கண்ட தமிழ் அழிப்பால் அதிசயம் என்ற தலைப்பில் சமூக அவலத்தை கண்டு நோகிறார்.
தமிழகம் உள்ள தமிழர் எல்லாம் தமிழய்ப் படித்தால் அதிசயம்
தமிழக கோயிலில் தயக்கம் இல்லாமல் தமிழில் அருச்சனை அதிசயம்
தமிழக வழக்கு மன்றங்களிலே தம்ழில் புழங்கல் அதிசயம் (பக்:44}
அசய்வு அனும் தலைப்பில் அண்ட இயக்கத்தையே நம் கண்முன் நிறுத்துகிறார்.
உலகம் இருப்பது அசய்வாலே – சூழும்
உயிர்கள் இருப்பதும் அசய்வாலே
இலகும் அணுக்களும் அசய்வாலே
இருக்கும் கோள்களும் அசய்வாலே
இசவாய் நாளும் அசய்ந்திடுவீர் – அதற்கு
இணிக்கும் பயிற்சிகள் துணையாகும் (பக்:60}
உடற்பயிற்சியையும் தம் கவிதையாலே தருகிறார் கவிஞர். தொந்தி எமனுக்குத் தந்தி எனச் சாடுகிறார்.
முந்தி வந்திடும் தொந்தி – எமனய்
முந்தி வரச் சிய் தந்தி – அதனால்
குந்திக் குந்தி உட்கார் – வயிற்றய்க்
குனிந்து குனிந்து எக்கு (பக்:65}
இதுபோன்று உடல் பேணும் கவிதைகளை அனுபவப் பிழிவாகத் தந்துள்ளார் கவிஞர்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
என்ற குறளின் வழி முயற்சிக்கு கவிஞரின் கவிதை உள்ளத்தைத் தொடுகிறது
முயற்சி என்ற விதய் போடு
பயிற்சி என்ற செயல் பாடு
வளர்ச்சியான பயிர் விளையும் – அது
மகிழ்ச்சி உள்ள அறுவடையே (பக்:76}
மூடப்பழக்கக்கங்களை ஆங்காக்கே சாடுகிறார் கவிஞர். நல்லநேரம் என்ற தலைப்பில்
பஞ்சாங்க படிமனமே பார்த்துச் செய்தும் – பலர்
பஞ்சாய்ப் போனவர்கள் நாட்டிலுண்டு
அஞ்சாமல் உறுதியுடன் உழய்த்தவர்கள் – இந்த
அகிலமே பாராட்டும் தங்கத் தேர்கள் (பக்:89}
கோயில்கள் கட்டி என்ன?
கும்பிடு போட்டுமென்ன
கோபத்தை ஒழிக்காவிட்டால் – கண்மணி
கொஞ்சமும் பயனில்லையே! ` (பக்:97}
சகோதர உறவைப்பாட வந்த கவிஞர் அண்ணன் தம்பி எனும் தலைப்பில் தம் குடிக்கு உணர்த்துகிறார்.
உயர்ந்தவன் நானே எல்லாம் எனக்கென
ஒருவன் மாறிச் செயல்பட்டால்
ஒற்றுமய் குலயும் வெறுப்பும் கவலய்
உள்ளே புகுந்து வாட்டிடுமே (பக்:125}
மலேசியா சிங்கப்பூர் சென்ற கவிஞர் அந்நாட்டின் எழிலை நம் கண் முன் கவிதையில் நிறுத்துகிறார்.
தெங்கெண்ணெய் கொழுப்பென்று ஒதுக்கி – அங்கே
தேர்ந்திட்டார் பனயெண்ணெய் மரங்களாய்ப் புதுக்கி
அங்குரயில் குளிர்பெட்டி ஓட்டம் – நிலயம்
அடைகின்ற பொதிலே ஊர்ப்பெயர் காட்டும். (பக்:147}
வாக்களர்களுக்கு அறிவுறுத்தும் வண்ணம் அரசியல் பகுதியில் கவிதைக் கனலை கக்குகிறார்.
பதவிக்காகக் கூட்டணி சேர்தல்
பாமரத் தனத்தி மக்கள்தாம்
உதவிடும் மதுபிரி யாணி ஒதுக்கி
யோக்கியர் தேர்வதும் எப்போது? (பக்:186}
இலவசங்கள் பெறுவதே இன்பம் என்று
ஏற்ப்து இகழ்ச்சி அவ்வய் வாக்கய்த் தின்று
கய்வசங்கள் இருப்போரும் முட்டி மோதி
கருணையின்றி மாய்கின்றார் அந்தோ சேதி (பக்:189}
முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தீபம். சமுதாயக் கேடுகளை ஒழிக்கும் நெருப்பு. தமிழர்களின் சாதனைகளைச் செப்பும் சுடர்.தமிழ்ர்களின் வாழ்வியல் காக்கும் மங்கல விளக்கு.
அன்பினால் அடக்கத்தய்க் கற்றவன் சான்றோன்
ஆத்திரம் அலட்சியம் அற்றவன் சான்றோன்
நண்பினய்ப் பண்பினால் நட்டவன் சான்றோன்
நலந்தரு பழக்கமே பலமுடன் ஊக்குமே (பக்:94}
என்ற தம் கவிதை வாழ்வு வாழும் முத்துவிழாக் காணும் பெருமகன் நீடு வாழ்ந்து தமிழ்ச் சமுகத்துக்கு தொண்டாற்ற அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment