Wednesday, December 12, 2012

தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ கச் காசிம் மண்டபத்தில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை


(31-7-2012 அன்று தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ  கச் காசிம் மண்டபத்தில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய  உரை)

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே எந்தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
    வீரரின் வீரமும் வெற்றியும் நீயே
முந்தைய நாளினில் அறிவும் இலாது
    மொய்த்தநல் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாம ரைக்காடு பூத்தது போல
    செழித்த எம்தமிழே ஒளியே வாழி!

    என்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார்  பாடலைக் கூறித் தொடங்குகின்றேன்.

தமிழர் முன்னேற்றக் கழகத்தின்  சார்பில் நடைபெறும் நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் மன்றத்தின் தலைவர் சுப்பையா  அவர்களே. ஆலோசகர் தண்ணீர்மலை பொருளாலர் முனுசாமி அவர்களே. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் பெரியவர் காப்பளர் ஐயா முத்துசாமி அவர்களே  நிகழ்ச்சியை அரும் பாடுபட்டு நடத்தி வரும் எழுத்தாளர் திருஞானசம்பந்தம் இராணி அவர்களே, கடவுள் வாழ்த்துப் பாடிய கனகரத்தினம் அவர்களே திரளாகப் பங்கேற்றிருக்கும் தைப்பீங் நகரத்துப் பெருமக்ககளே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்

    யான் மலேசியா புறப்பட்டு வரும்போது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் திரு திருஞானசம்பந்தம் அவர்களைத் தொடர்பு கொள்ளூம்படி கூறினார். கோலாலம்பூர் வந்தவுடன் நண்பரிடம் தொடர்புகொண்டேன். நான் கேஎல் சென்றல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்கிறேன் சந்தியுங்கள் இங்கு வந்து விடுங்கள் என்றேன். யான் தொடர்வண்டி நிலையத்தின் பேரழகை எப்போது சென்றாலும் காண்பேன். நாளுக்கு  நாள் அதனுடைய அழகை வசதிகளை அரசாங்கம் உயர்த்திக் கொண்டே இருக்கும். நம் ஊரில் தில்லியாக இருந்தாலும் சென்னையாக இருந்தாலும் தொடர்வண்டி நிலையம் வளர்ச்சி என்பதே இல்லாமல் பராமரிப்புக்கூட பொறுப்புணர்வோடு செய்யாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்துவேன். நண்பர் எனக்குத் தொடர்பு கொண்டார் நான் வாயிலில் இருக்கிறேன் என்றேன். சந்தித்து பெருமகிழ்ச்சியடைந்தோம்.

எனக்கு நீங்கள் சென்னையில் பாராட்டு விழார நடத்தினீர்கள். சென்னையில் நான் மனைவியோடு வந்தபோது தங்களிடம் தொடர்பு கொண்டேன் அப்போது தந்தையார் ஊரில் இல்லை. தாங்கள் உணவகத்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் எழுத்தாளர்கள் நண்பர்களை அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினீர்கள் என்றார். உண்மையிலெயே எனக்கு பெருமகிழ்சிச்யாக இருந்தது. தந்தையார் 1977 ஆம் ஆண்டு  வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை வெளிநாட்டுப் பெருமக்களும் வரவேற்பு அளிப்பது என்பது பன்னாடுத்தமிழுறவு மன்றக் குறிக்கோள்களில் ஒன்று. எனக்கே நினைவில் இல்லை நினைவோடு திருஞாசம்பந்தம் கூறியது மன நிறைவைத் தந்தது. திருஞானசம்பந்தம் நிகழ்வையெல்லாம் யான் தமிழ்ப்பணியில் வெளியிட்டுள்ளதையும் கூறினேன்.

    அப்பொது நான் உங்களுக்கு மலேசியாவில் வரவேற்பு வழங்க வேண்டும் எனக் கூறினார் அதனையுடைய முயற்சிதான் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ  கச் காசிம் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,.

    நான் தைப்பிங் நகருக்கு சனவரி மாதம் பேச வந்திருந்தபோது அருமைப் பெரியார் முத்துசாமி ஒரு மலரை வழங்கினார்கள். அந்த மலரில் தோட்டப்புறப் பள்ளிகளுக்கு அவர் வழங்கிய அர்பணிப்பான சேவைகளைக் கூறியுள்ளார்கள். இந்தக் கட்டுரை முழுமையையும் தமிழ்ப்பணி மூன்று இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளேன். இவரைப் போன்ற பெருமக்களால்தான் மலேசியாவில் தமிழ் வாழ்கிறது. இவர்ளுடைய ஈகமான பணிகள்தான் இன்றும் மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் செழித்து ஒங்குகின. ஆனால் தற்போது தமிழ்ப்பள்ளிகள் குறைந்து வருகின்றன.

    ஐயா முத்துசாமி அவர்கள் துன் சம்பந்தன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டார்கள். துன் சம்பந்தம் என்ற மாபெரும் தலைவர் இலலையென்றால் மலேசியாவில் தமிழர்களுக்கு வாழ்க்கை இல்லை. தம் வாழ்நாளையே ஒப்படைத்து இன்று தமிழ்ச்சமுதாயத்தை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

    ஐயா முத்துசாமி அவகள் துன் சம்பந்தம் அவர்களோடு இணைந்து தொண்டாற்றிய பெருமகன். அவர்கள் இங்கு வந்து என்னை வாழ்த்துவதென்பது துன் சம்பந்தம் வந்து வாழ்த்துவதாகவே கருதுகிறேன். துன் அவர்களோடு ஐயா அவர்கள்  தொண்டு வாழ்வைக் குறிப்பிட்டபோது கண்கள் கலங்கின. இன்றைக்கு வானளாவ இருக்கும் தேசிய நல கூட்டுறவு சங்கம் மலேசிய மண்ணில் விரிந்து பரந்து இருப்பதற்கு வித்திட்டவர். துன் சம்பந்தம் அவர்கள். மலேசியாவில் ஒவ்வொரு தோட்டப் புறங்களுக்கும் சென்று பங்குத் தொகையைப் பெற்று மலேசியாவில் தமிழர்களைத் தலைநிமிரச் செய்ய மிகப் பெரிய திட்டத்தை வகுத்த தீர்க்கதரிசி.

    மலேசியாவின்  தோட்டப்புறங்களிளெல்லாம் இன்று தமிழ்ப்பள்ளிகள் தளிர்த்ததினால்தான். இன்றைக்கு சம்பந்தம் இராணி போன்ற பெருமக்களெல்லாம் படித்துப் பணியில் உள்ளனர். பள்ளிகள் இல்லையென்றால் நம் மக்கள் மேல்நிலையை அடைய முடியாது.

    உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். தமிழர்கள் ஆங்காங்கே தமிழையும் தமிழரையும்  பேணிப் பாதுகாக்கின்றனர். மியான்மரில் வள்ளுவர் கோட்டம் கட்டி திருக்குறளிலேயே ஒதி திருவள்ளுவரை வணங்குகின்றனர்.

    அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ச்சங்கங்கள் நிறுவி அனைத்துத் கூட்டுத் தமிழ்ச்ச்ங்கங்களையும் ஒன்றினைத்து ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய மாநாடு நடத்துகின்றனர்.

    ஐரோப்பிய நாடுகளில் ஈழ த்தமிழர்களின் புலம் பெயர்வால். தமிழுக்கு மாநாடுகளும் விழாக்களும் ஏராளம். யான் யாதும் ஊரே என்ற நூலில் அனைத்து நாடுகளிலுள்ள தமிழர்களைப் பற்றியும்  குறிப்பிட்டுள்ளேன்.
    கனடாவில் இது தமிழகமோ என வியக்கும் வண்ணம் தமிழ் இதழ்களும் தொலைக்காட்சிகளும், நடன அரங்கேற்றங்களும், மாநாடுகளும், தமிழ்க் கல்லூரிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    பெருமக்களே கற்றனைத்து ஊறும் என்ற நூலில் மலேசியாவின் சிறப்புகளையும் நான் கண்ட அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளேன். உலக நாடுகளில் கண்ட அனுபவங்களையும் தமிழ் தமிழர் சிந்தனைகளையும் எழுதியுள்ளேன்.

    தமிழினம் உலக இனம், ஆனால் அதற்கென நாடு இல்லாதது ஒரு பேரிழப்பே. ஈழம் கிடத்திருக்கும் ஆனால்  துரோகிகளின் வஞ்சகத்தல் அந்த வாய்ப்பை இழந்தொம். ஆனால் ஈழ மக்கள் பெற்றே தீருவார்கள் என்பதில் ஐயமில்லை.

    ஐயா முத்துசாமி அவர்கள் இல்லத்தில் அம்மா அவர்கள் இல்லாமை கண்டு வருந்தினேன். அம்மாவோடு  ஐயா அவர்கள் தமிழகம் வந்துள்ளார்கள், திருஞானசம்பந்தம் இராணி அவர்களும் வந்துள்ளார்கள். வருகை தந்திருக்கும் பெருமக்களே தாங்களும் தமிழகத்திற்கு வாருங்கள் வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கிறேன். பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் தங்களை வரவேற்க உள்ளது எனக் கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.
       
 

Monday, December 10, 2012

மலேசியா கெடா சுங்கைப்பட்டாணி தமிழர் சங்கத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை



 (30-7-2912 அன்று மலேசியா கெடா சுங்கைப்பட்டாணி தமிழர் சங்கத்தில் டத்தின் தாமரைச்செல்வி தலைமையில் முன்னாள் அமைச்சர் டத்தோ சுப்பிரமணியம் முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை)

மலேசியாவின் கெடா மாநில சுங்கை பட்டானியில் தமிழர் சங்கத்தில் பங்கேற்று உரையாற்றுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன். மிகக் கூறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த டத்தோ சுப்பிரமணியம் அவர்களையும் டத்தின் தாமரைச்செல்வி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். டத்தின் அவர்களின் அன்னைக்கு நூலை டத்தின் அவர்களின் அண்ணன் எழுத்தாளர் மூத்த வழக்கறிஞர் சமரசம் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்கள். நூல் முழுமையும் படித்து வியந்தேன். டத்தின் அவர்களின் பெற்றோர் தந்தை பெரியார் அவர்களைப் பின்பற்றி திராவிட உணர்வை வளர்த்ததையும் அவர்கள் சிறை சென்று தமிழுணர்வு நிலை நாட்டியதையும் படித்தபோது கண்கள் குளமாகின. தன் அண்ணன் சமரசம் அச்கத்தில் பணியாற்றியபோது விரல்கள் பாதிக்கப் பட்டதையும் குடும்பப் பொறுப்பைச் சுமந்து  அனைவரையும் உருவாக்கியதையும் நன்றியுணர்ச்சியோடு பதிவு செய்துள்ளார்கள்.

    திருவள்ளுவர் இல்லத்திற்கு திருவள்ளுவர் வருகிறார் என டத்தின் எழுதி வைத்துள்ளார்கள். வள்ளுவப் பெருமான் கூறிய அறக் கருத்துகளையும் தந்தை பெரியாரின் வழி தொடர்ந்து டத்தின்  அவர்கள் மலேசியாவில் ஆற்றும் பணி அரும் பணியாகும். முன்னாள் அமைச்சர் என்ற செருக்கே இல்லாமல் மக்களோடு மக்களாக தொண்டாற்றும் டத்தோ அவர்களயும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    மலேசியாவின்  அருகிலுள்ள பினாங்கு மாநிலம் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலா மாநிலமாகும்.சுங்கைப் பட்டாணிக்கு அருகில் உள்ள  பினாங்கில் சுவாமி இராமதாசர் என்ற பேரறிவாளி வாழ்ந்த பகுதியாகும். ஆய கலைகள் அறுபத்தி நான்களிலும் பயிற்சி பெற்ற பேரறிஞர். மலேசியா முழுமையும் மாணாக்கர்ளை உருவாக்கி மருத்துவம் கவிதை என அனைதுத் துறையிலும் பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழிற்கு இன்றும் பெரும் அரணாக உள்ளனர்.

    சுவாமி இராமதாசர் அவர்கள் தம் மணிவிழாவிற்கு தமிழகத்தில் தம் மாணவரான என் தந்தை பெருங்கவிக்கோவை 1977ஆம் ஆண்டு அழைத்திருந்தார்கள் ஒரு குரு தம் மாணவரை சிறப்பு விருந்தினராக அழைத்து மணிவிழா நடத்தியதென்பது வரலாற்றுப் பதிவாகும். என்றும் இலக்கிய உல்கில் மலேசியாவிற்கு நிலையான பெருமையாகும்.

    இன்று உலகம் முழுமையும் உலகத்தமிழ் மாநாடு நடத்துகிறோமே அதற்கும் வித்திட்டது மலேசிய மண்ணே. மலேயாப் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறையிலிருந்த தனிநாயக அடிகளாரே அந்தப் பெருமைக்குரிய பெருமகன். இவ்வாண்டு அப் பெருமகனாருக்கு நூற்றாண்டு விழா உலக்த் தமிழர்கள் அனைவரும் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டிய பேராசியப் பெருமகன். இன்றைக்கு நாம் உலகம் முழுமையும் மாநாடு நடத்திகிறோமென்றால் தனிநாயக அடிகளின் அப்பலுக்கற்ற் தூய தமிழ்ப்பணிதான் அந்தப் பெருமகனை பணியாற்றிய மலேயா பல்க்லைகழம்தான். அந்தப் பல்கலைக் கழத்தில்தான் எங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம்.டத்தோ டத்தின் அவர்க்ளையும் கேட்டுக்கொள்கிறேன்
தனிநாயக அடிகளாருக்கு நூற்றாண்டு விழா நடத்துங்கள்.

    மலேசியா மண்ணை தமிழர்களுக்கும் முழு உரிமைகளையும் பெற்றுத் தந்த துன் சமந்தன் அவர்கள். மாணிக்கவாசகம் அவர்கள் ஈகங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்வேண்டியவை.

    அவர்கள் வழியிலே மாலேசியத் திருநாட்டில் பெரும்பணியாற்றி தமிழர்களின் ஆளுமைக்கு சான்றாக வாழும் டத்தோசிறி சாமிவேலு அவர்கள்.. அவர்கள் வழி ம.இ.கா. வை வழிநட்த்தும் நம் டத்தோ டத்தின் உள்ளிட்ட அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

    டத்தின் அவர்கள் என்னை இங்கு ஒரு பொது நிகழ்சிக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கு ம.இ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பெருமக்களும் வருகைதந்து வாழ்த்தினர். எனக்கு மகிழ்ச்சியாக் இருந்தது சனநாயகத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் நாம் தமிழர்கள் என்ற உணர்வு எந்த சக்தியாலும்  பிரிக்கா வண்ணம் நிலைநாட்ட வேண்டும்.

       இலக்கிய உலகில்  மலேசியாவில் மணிமன்றம் அருந்தமிழ்த் தொண்டாற்றிய ஐயா அன்பானந்தம் அவர்களை எண்ணிப் போற்றவேண்டும் .அவர்வழி இன்றும் தமிழ்த் தொண்டு செழித்தோங்குகிறது.

    இன்றும் தோட்ப்புறத் தொழிலாளர்களுக்கு மிகப் பெரும் கொடையாக இருப்பது தேசிய நல கூட்டுறவுச் சங்கம். கோலாலம்பூரில் விசுமா துன்சம்பந்தன் மாளிகை தமிழர்களின் பெருமையை செப்பும். அதைத் தலைமைதாங்கி நடத்தும் டான்சிறி சோமசுந்தரம் அவர்களை தமிழ் உலகம் என்றும் மறக்காது. அவர் வழியில் அரும்பணியாற்றும் டத்தோ  சகாதேவன் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பெருமக்கள் மலேசியத் தமிழர்களின் வளர்ச்சித் தூண்கள்.

    உலகத் தமிழர் இயக்கம் நடத்திய அமரர் டேவிட் அவர்கள். அவரது இறப்பின் போது நான் இங்கிருந்தேன். அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். அவரி பணி மகத்தானது.

    மலேசியாவில் மிகச்சிறந்த கவிஞர் பெருமக்கள் அளப்பரிய பணியாற்றியுள்ளார்கள். அமரர் பெருமக்கள் செந்தமிழ்க் கவிமணி வி.கே.சுப்பிரமணியம், செந்தமிழ்க் கவிமணி இரா.பாண்டியன், கவிஞர் முத்துவேல்,  தமிழ்க்குயில் கலியபெருமாள் போன்ற பெருமக்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.

    இன்றும் கவிதைத் தொண்டாற்றும் தீப்பொறி பொன்னுசாமி, கவிஞர் காரைக் கிழார், கவிஞர் தமிழ்மணி வடிவேலு போன்ற எண்ணற்ற பெருமக்கள் அரிய இலக்கியத் தொண்டாற்றுகின்றனர். மலேசியக் கவிஞர்களின் ஆய்வுக் களஞ்சியம் பெருந்தொகுப்பு ஒன்றை முனைவர் முரசு நெடுமாறன் தொகுத்துள்ளார். திருக்குறள் பாடல்கள் என் மிகப் பெரிய சிறந்த தொகுப்பை தந்துள்ளார். அனைத்தும் மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்த பதிவுகளாகும்.

    தமிழ் இணையத் துறைக்கு மலேசிய முரசு முத்தெழிலன் பங்களிப்பு அளப்பரிய பங்களிப்பாகும்.

    யாங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாடு நடத்தும்போது மாநாட்டை முன்னின்று நடத்திய விக்டர் சுப்பைய, டாக்டர் தர்மலிங்கம், முனைவர் குமரன், ஆசீயமணி மாணிக்கம், பேராசிரியர் பாலசுப்பிரமணியம் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

    பெருமக்களே மலேசியாவின் அருமைப் பெருமக்களை உங்கள் முன் நினைவு கூறுவதற்கு காரணம். எங்களின் மலேசியத் தொடர்பு 77ஆம் ஆண்டு முதல் இன்று வரை பூத்துக் குலுங்குகிறது. அவர்களை நினை வு படுத்த வாய்ப்பளித்த டத்தோ அவர்களுக்கும் டத்தின் அவர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

Sunday, December 9, 2012

மலேசியா சோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் இலக்கிய உரை




(29-7-2012 அன்று சோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தில் சங்கத் தலைவர் வேணுகோபால் தலைமையில் செயளாலர்  கவிஞர்  தமிழ்மணி வடிவேலு முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் இலக்கிய உரை)

                தமிழர் சங்கத் தலைவர் வெற்றி நிச்சயம் நூலின் ஆசிரியர் வேணுகோபால் அவர்களே, மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கருத்தை பொய்ப்பிக்கும் வண்ணம் சோகூர் மாநிலத்தில் தமிழ் பயிற்றுவித்து தமிழ்ப் பட்டாதாரிகளை உருவாக்கும் அருமைக் கவிஞர் பெருமகன் தமிழ்மணி வடிவேலு அவர்களே. என் உரையைக் கேட்க வந்திருக்கும் ஆசிரியப் பெருமக்களே, சான்றோர் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
     தலைவர் வேணுகோபால் அவர்களின் வெற்றி நிச்சயம் நூலை அனைவரும் படித்திருப்பீர்கள். உண்மையிலேயெ தமிழ் இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். அவரது தந்தையார் அவர்கள் சப்பான் போரின் போது அனைவரும் உடைமைகளை விற்றுக், கொண்டிருந்த நேரத்தில் தாம் சேர்த்து வைத்திருந்த டாலர்களையெல்லாம் பரன்மேல் பாதுகாப்பாக வைத்துவிட்டு வந்தார்களாம். போருக்குப் பிறகு ஊர் திரும்பி மிகச் சிறந்த தொழில் அதிபராக மிளிர்ந்தார். என்பதை நன்றிப் பெருக்கோடு கூறியுள்ளார். தந்தையார் வழியில் மலேசியாவின் தொழில் அதிபராக, திருகோயிலின் தலைவராக, சிறந்த எழுத்தாளராக இன்றும் தளராது நடைபோடுகிறார்.
     நமது செயலாளர் தமிழ்மணி வடிவேலு அவர்கள் மலேசியா சிங்கை நாடுகளை இணைத்து மாநாட்டு மலரில் ஒரு கவிதை எழுதியுள்ளார். மிகச் சிறந்த கவிதை. மலேசிய சிங்கை ஒப்புறவுக் கவிதையாகக் கூறலாம் அந்தக் கவிதையை நான் தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளேன் உலகத்தமிழர்களின் பாரட்டுதலைப் பெற்ற கவிதை. மேலும் தொண்டின் சிகரமாக சோகூர் மாநிலத்தில் தமிழ்ப் பட்டப் படிப்பை பயிற்றுவிக்கும் அமைப்பை நிறுவி தமிழகத்திலிருந்து நூல்களையெல்லாம் வரவழைத்து இம்மாநில மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரிய தமிழ்த் தொண்டாற்றுகிறார். பேராசிரியரிடம் கல்வி பயிலும் பெருமக்கள் பலரைக்  இங்கு காணும்போது பெருமகிழ்ச்சியாக உள்ளது. பெரு முயற்சி எடுத்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள  இரு பெருமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
     நண்பர்களே தமிழர்கள் உலகம் முழுமையும் வாழக்கூடிய இனம். தமிழ் அன்றும் இன்றும் என்றும் உலக நீதியை வழங்கக் கூடிய மொழி. நாமெல்லாம் தமிழர்கள் என்பதில் பெருமையோடு நெஞ்சுயர்த்தி வாழாலாம். நம்மையும் மொழியையும் அழித்துவிடலாம் என நம் எதிரிகள் எண்ணுவர், சங்க காலம் முதல் இன்று  வரை போராடி போராடித்தான் தமிழ் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
      நம் இலக்கியங்கள் என்றும் நமக்கு பேரரணாகப் இருப்பவை. இதொ ஒரு பாடலைக் கேளுங்கள்.
     எற்றென்றும் இல்லாவிடத் தும்குடிப் பிறந்தார் 
     அற்றுத்தற் சேர்ந்தார்க்குஅசைவிடத்து ஊற்றாவார் 
     அற்றக் கடைத்தும் அகல்யா(று) அகழ்ந்தக்கால் 
     தெற்றெனத் தெண்ணீர் படும்
     பாடலின் பொருளைப் பாருங்கள். ஆற்றில் நீர்ப் பெருக்கு அற்றுப்பொய் நடப்பவர்கள் அடியைச் சுடும் கொடும் வெப்பம் நிறைந்த கோடை காலத்தில் தன் பால் ஊறிவரும் நீரால் உலகை ஊட்டுகின்றது, அவ்வாறு நற்குடியில் பிறந்தவர்கள் தம்மிடம் இல்லையென்றாலும் ஏற்றவர்க்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். ஈதலின்  வலிமையை உலகிற்கே நம் இலக்கியங்கள் பகர்கின்றன.
ஒரு பழம் பாடல் கூறும் அறத்தை நோக்குங்கள்.

ஈயெனஇரத்தல்இழிந்தன்றுஅதனெதிர் 
                                   ஈயேன்என்றல்அதனினும்இழிந்தன்று 
                                   
கொள்ளெனக்கொடுத்தல்உயர்ந்தன்றுஅதனெதிர் 

 கொள்ளேன் என்றல் அதனினும்  உயர்ந்தன்று 
பிறரை நாடி இரங்குதல் இழிவு அதைவிட இழிவு கேடபவர்க்கு இல்லை என்று கூறுதல் அதைவிட இழிவான செயல் என்று கூறுகிறது.
நம் இலக்கியங்கள் உலக நீதியையும் அறத்தையும் உலகிற்கு வழங்கியுள்ளன. உலகப் பொதுமறையைத் தந்த வள்ளுவர் கூறும் அறத்தைப் பாருங்கள்.
சாதலின் இன்னாதது இல்லை இனிது அஃது
ஈதல் இயையாக் கடை                (குறள்-230).
நம்மிடம் இருக்கும் பொருளை உலகில் நம்மோடு இருக்கும் மக்கட்கு கொடுத்து உதவும் ஈகைக் குணம் இல்லை என்றால்  அவன் சாவதே மேல் எனக் கூறுகிறார். இதை விடக் கடுமையாகக் கூற முடியாது.
நக்கீரரின் பழம் பாடல்  ஒன்று கேளுங்கள் மானிட வாழ்வியலைப்
படம் பிடித்துக் காட்டுகிறது.

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
ஒருநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கருமாப் பாக்கும் கல்லா ஒருவர்க்கும்
உண்பது தாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்குமே
செல்வத்தும் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே

செல்வர் என்பதன் பொருளே ஈதலே என்பதை அழகாக செறிவாக உணர்த்திகிறது. உண்பதும் உடுப்பதும் அனைவருக்கும் ஒன்றே என்று நயம் பட உணத்தியுள்ளதை அறியலாம்
பெருமக்களே நம்மிடம் ஏற்படும் தோல்விக்கு காரணமே பொதுமை இல்லாததுதான். அது உணர்வாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் வலியோர் எளியோரை எண்ணாமையே ஆகும்.
     வளம் மிக்கமலேசிய மக்களே என்றும்போல் மொழிக்கும் இனத்திற்கும் வழிகாட்டுங்கள். எம்முடைய 42 ஆண்டுகால தமிழ்ப்பணியை தங்களின் உறவுப் பாலமாக பயன்படுத்துங்கள் எனக் கூறி விடை பெறுகிறேன் நன்றி. வணக்கம்.
    


       

Friday, December 7, 2012

மருத்துவ மாமேதை, எளியோர் ஏந்தல் இனப் பாதுகாவலர் செ.நெ.தெய்வநாயகம்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மனிதருள் மாணிக்கமாகவும், மருத்துவ உலகில் மாமேதையாகவும் தமிழர்தம் தன்மானத்திற்குச் சான்றாகவும், விளங்கிய மருத்துவமாமணி செ.நெ. தெய்வநாயகத்தின்(70) இழப்பு தமிழர்களுக்கும், மருதுவ உலகிற்கும் பேரிழப்பாகும்.

    புகழ் வாய்ந்த தந்தை பெரியாரோடு நெறுங்கிய தொடர்புகொண்ட தமிழ்க்குடியாம் செ. நெ . நாயகம் அவர்களின் குடியில் நவம்பர் 15ஆம் நாள் தோன்றிய பெருமகன் மருத்துவ மாமணி தெய்வநாயகம் அவர்கள்.

         தம் மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கலலூரியில் படித்தவர்.வடகு அயர்லாண்டில் உள்ள சுகாட்லாந்த்தில் 18 மாதங்கள் தம் உயர் படிப்பை முடித்தவர்.எடின்பர்க் இராயல் கல்லூரியில் ஆய்வு அறிஞராகப் பணியாற்றியவர்.

    மருத்துவம் படிப்பு முடித்த தமிழர்கள் யாரையும் தமிழர்களின் வேட்டி சட்டை அடையாளத்துடன் காண முடியாது. ஆனால் மருத்துவ மாமணி அவர்கள் தமிழர் அடையாளத்துடன் புன் சிரிபோடு காட்சி தருவார்கள். மருத்துவ மாமேதையுடன் எனது சகோதரூக்காக தனிப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக காணச் சென்றோம். அருமைப் பெருந்தகை தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் பணிபுரிந்தார்கள். எங்களை அங்கு வரப் பணித்தார்கள். யாங்கள் மருத்துவம் காணச் சென்றபோது வரிசையில் வரப்பணித்து அவர்கள் ஆற்றிய சேவையை எண்ணும்போது கண்கள் குளமாகின்றன. மருத்துவ மனையிலேயே சேர்த்து அவர் வழங்கிய சிகிச்சையை எண்ணும்போது சேவையின் உருவமாகத் திகழ்கிறார். பெரிய மருத்துவ மனைகளெல்லாம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் பெருமகன் தன் மருத்துவத் துறையில் பெற்றுள்ள பேரறிவால்  எம்மை மட்டுமல்ல ஏழை எளிய மக்களை நெஞ்சக நோயிலிருந்து காப்பாற்றிய மாவீரர் இன்று நம்மிடம் இல்லை.
      உயிர்க்கொல்லி நோய்க்கு சித்த மருத்துவம் மூலம் திர்வு கண்டவர். சித்த மருத்துவத்திலும் மிகச் சிறந்த நிபுணர்.

  என்னுடைய நண்பர்கள் பலரை பெருமகனாரிடம் அனுப்பியுள்ளேன். அனைவரும் நலம் பெற்று அவரை நெஞ்சார வாழ்த்திகின்றனர்  நோய் தீர்க்கும்  மாமேதை தெய்வநாயகனார். நேர்கொண்ட பார்வை யாருக்கும், அஞ்சா மன உறம் கொண்டவர்கள். இது அவரை அறிந்தோர் அறிவர். பணியிலிருந்து விடுபட்ட பின் தியாகராயநகர் தம் இல்லத்திலும், எழும்பூர் செஞ்சிலுவைச் சங்க மையத்திலும் தன் மருத்துவப் பணியைத் தொடர்ந்தாரகள். இறுதிக் காலத்தில் எழும்பூர் மையத்தினர் அவரை புறக்கணித்தபோது வாயிலிலேயே இருக்கையைப்போட்டு ஏழைஎளிய மக்களுக்கு மருத்துவம் செய்த மாவீரர் தெய்வநாயாகனார்.

    தம் குடும்ப அறநிலையமான தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகப் பொறுப்பேற்று ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த கல்வித் தந்தை.

    தமிழர் தமிழர் சிந்தனைகளுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கியவர், ஈழத்தில் பெருங்கொடுமை நடந்தபோது கண்டனக் கூட்டங்களுக்கு தம் பள்ளியின் திடலையே வழங்கிய இனப் பாதுகாவலர்.

    மருத்துவத் துறையாக இருந்தாலும் , கல்வித்துறையாக இருந்தாலும், இனப் பாதுகாப்பாக இருந்தாலும் செ.நா. தெய்வநாயகம் தமிழர்களுக்கு முன்னோடியாக வாழ்ந்துள்ளார். அவருடைய வாழ்வு சேவை வாழ்வு.

 இந்திய அரசின் பத்மபூசன் போன்ற விருதுகளெல்லாம் எளிய மக்களுக்காக வாழ்ந்த இப் பெருமக்களுக்கு வழங்க வேண்டும் எனபது நம் வேடகை.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய                                                        மண்ணுயிர் எல்லாம் தொழும். (குறள் 268)

    என்ற வாக்கிற்கிணங்க மருத்துவ மாமணியின் பணியைத் தொழுது தமிழர்கள் அவர்தம் வாழ்வைப் பின்பற்றி வாழ்வோமாக

Thursday, December 6, 2012

பொன்மகள் மலாளா நேயம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மார்க்கம் கடந்த தொண்டு
    மனிதக் கல்வி தன்னை
தீர்க்கமாய துணிவாய்ச் செய்த
    திண்ணிய மலாளா வாழ்க!
ஊர்க்குருவி இன்று வானில்
    உன்னதத் தொண்டால் இன்று
பார்க்குருவி பறந்து தோன்றும்
    பல்லூடக மலாளா வாழ்க!

பெண்களின் கல்வி என்றும்
    பேணிடும் குடும்ப ஏற்றம்
நன்றுள மகளிர்  கற்றால்
    நாளெலாம் பெண்மை ஓங்கும்
கன்றுபோல் சொன்ன சொல்லை
    கதறியே சுட்ட தீயோர்
நன்றான மனித நேயம்
    நாட்டிடும் நாள்தான் என்நாள்?

தொட்டனைத்து ஊறும் கல்வி
    தொல்லுயர் மாந்தர் கண்ணை
மட்டிலா மலாளா தொண்டு
    மாத்துயர் போக்கும் அன்றோ!
முட்டிடும் முரட்டு மார்க்கம்
    முதுநிலை அறிவை எண்ணி
மட்டிலா சேவைக் கன்னி
    மாசிலா மலாளா வாழ்க!

எரித்திடும் தீவிர வாதம்
    எழுப்பிய மூடச் சூட்டால்
வித்திடும் செயலை என்றும்
    முனைப்புடன் உலகே சாய்க்கும்
பொறித்திட்ட ஞானக் குஞ்சாம்
    பொன்மகள் மலாளா நேயம்
நெறிகாக்கும் மகளிர் கல்வி
    நாளாகக் கொள்வோம் நன்றே!

விடுக எம் காவிரிக் கண்ணை


கவிமுரசு வா. மு. சே. திருவள்ளுவர்


இந்தியா ஒருமித்த நாடு 
                                     
இன்பம் இணைந்தே நீதேடு
                            
  சந்ததி வழிவழி நீரை
                                          
 சதிவலை பின்னுதல் தீது 
                         
முந்தைய தமிழரின் மோசம்
                                     
 முறைதனிமை காணாத சோகம்  
                           
 நிந்திக்கும் கர்நாடக மண்ணே
                                     
  நீதியை கண்டு நீதேறு!



வெடித்திடும் நிலத்தினைப் பாரு
                                     
 வேதனை பொங்கிடும் நீரால்
                               
 துடித்திடும் அவலத்தைக் காணு
                                    
 துயரினைப் போக்கிட எண்ணு
                                 
மடிதுயில் காணாத மக்கள்
                                        
மாத்தவம் வேண்டிடும் ஆறு
                        
பொடிப்பொடி ஆக்கிடும் கண்ணீர்
                                  
போதனை கேட்டுநீ மாறு!







எரித்திடும் எரிமலை வேகம் 
                           
  எழும்பிய காவிரித் தாகம்  
                         
பறித்திடும் நீர்வளம்  தன்னை 
                                        
பொசுக்கிடும் எம்மினம் உன்னை
                              
தரித்திரம் ஒளியினால் கண்டும்
                                  
தந்திடும் மின்வளம் எண்ணு  
                               
விரித்திடும் மனநலம் எண்ணி
                                   
விடுக எம்காவிரிக் கண்ணை!


திராவிடம் கூறியே எம்மோர்
                                          
 தகைமையை கண்டு நீ வாழு
  
 உறவினைப் பெருக்கிடும் ஆற்றின்
                                  
உலகத்துப்  பொதுமையை உணரு
                              
கரவினால் கயமையைத் தேடும்
                                  
 கொலைவெறித் தாண்டவம் ஏனோ
                             
 மறத்தமிழ் மக்களின் வீரம்
                                      
 மாய்த்திடும் மம தையை என்றும்!

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் அனைத்தும் புரட்சிப் பெட்டகங்கள்


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(ஐந்தாவது சித்தநெறி மாநாடு சூலை 20, 21,  – 2012 மலேசிய நாட்டில் ஆகிய நாட்கள் சோகூர் மாநகரில்  நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மலேசிய அமைசர்கள் ம.இ.க. தலைவர டத்தொ பழனிவேலு, டத்தோ சுப்பிரமணியம், பங்கேற்றனர்.ம  அகத்திய ஞானபீட நிறுவனர் தலைவர் அருள்மிகு வாலைச் சித்தர் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆன்மீகத் தென்றல் மாரியப்பன் அவர்களும் மாநாட்டுக் குழுவினரும் பெரும்முயற்சி மேற்கொண்டு அரும்பாடுபட்டு மாநாட்டை சிறப்புடன் நடத்தினர்.. அதுபோது கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

    மலேசியாவில் பத்துமலையில் அருள்மிகு வாலைச் சித்தர் அவர்களின் திருமுகம் கண்டடேன். அது போது பாம்பாட்டிச்சித்தர் பற்றி கட்டுரை வழங்கும்படி பணித்தார்கள். மலேசியா இசுலாமிய நாடாக இருப்பினும் ஆலயங்கள் எங்கு நோக்கினும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும். அண்மையில் யான் தைப்பூச நிகழ்வையும் பங்குனி உத்திர நிகழ்வையும் கண்ட போது மெய்சிலிர்த்தேன். தொடர் வண்டி பேருந்து எங்கு நோக்கினும் தமிழர்கூட்டம். ஆன்மீகம் தமிழர்களை ஒருங்கிணைக்கும் அருள்நெறியாக உள்ளது. அம்மண்ணில் தமிழகம் சிங்கை உலகமெங்கும் வாழும் அருள்ளாளர்கள் கூடுவது சாலப்பொருத்தமாகும்.

    தமிழகம் சித்தர்களின் பிறப்பிடம் உலகப் பற்றுகளை வெறுத்து உன்னதமான மாந்தநேய நெறிகளை மண்ணுக்கு உணர்த்தியவர்கள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

    என்ற வள்ளுவப் பெருமானின் குறளிற்கேற்ப ஆசைகளில் விடுபடும்போது அதிலுள்ள துன்பத்திலிருந்தும் விடுபடுகிறோம்.

    கடவுள் வழிபாட்டில் பகுத்தறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் சித்தர் பெருமக்களே. சாதி சமயம் ஆண் பேண் என்ற வேறுபாட்டை தகர்த்தெறிந்தவர்கள் சித்தர் பெருமக்களே.

இதுவரை யாம் படித்துணர்ந்த  சித்த பெருமக்களின் பெயர்களைப் பதிவு செய்வதை கடமையாகக் கருதுகிறேன்.

1, சிவவாக்கியர் 2, அழுகிணி சித்தர் 3, கடுவெளிச்சித்தர் 4, குதம்பைச் சித்தர் 5, பத்திரகிரியார் 6, பாம்பாட்டிச்சித்தர் 7, காசுபுகண்டர் 8, சங்கிலிச் சித்தர் 9, சத்தியானாதர் என்ற ஞானச்சித்தர் 10, ஏசுநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர் 11, மச்சேந்திரநாதர் என்ற நொண்டிச் சித்தர் 12, திரிகோணச்சித்தர்    13, கடேந்திரநாதர் என்ற விளையாட்டுச் சித்தர் 14, புண்ணாக்குச் சித்தர் 15, கல்லுளிச்சித்தர் 16, கஞ்சமலைச்சித்தர் 17, வகுளிநாதர் என்ற மௌனச்சித்தர்
18, ஆதிநாதர் என்ற வேதாந்தச்சித்தர் 19, காரைச்சித்தர் 20, சதோகநாதர் என்ற யோகச்சித்தர் 21, காயக் கப்பல் 22, உரோமரிசி ஞானம் 23, தடங்கண் சித்தர் 24, பட்டிணத்துச் சித்தர் ஞானம் 25, கைலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனர் 26, கொங்கெனச் சித்தர் 27, சட்டைமுனிஞானம் 28, திருவள்ளுவ ஞானம்    29, அகத்தியர் 30, திருமூல நாயனார் 31, வால்மீகி சூத்திரம்  32, இராமதேவர்   33, கருவூரார் 34, அகப்பேய்ச் சித்தர் 35, இடைக்காட்டுச் சித்தர்               36, சூரியானந்தர் சூத்திரம்.

    மேற்கூறிய சித்தர் பெருமக்களின் பாடல்கள் ஆன்மீக மருந்தாக அறிவுக்கு விருந்தாக உலகில் வலம் வருகின்றன. மாநாட்டின் தலைவர் வாலைச்சித்தர் அவர்கள் எம்மை பாம்பாட்டிச் சித்தர் பற்றி எழுதப் பணித்ததால் பாம்பாட்டிச் சித்தர் பற்றிக் காண்போம்.

    பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்தோறும் ஆடு பாம்பே, ஆடுபாம்பே என பாம்பை ஆட்டிவிப்பது போல் பாடல்கள் பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இவரின் குருவின் பெயர்  சட்டைமுனிநாதர். சீர்காழியில் உள்ள சிவனின் பெயர் சட்டையப்பர் சட்டைநாதர் என்பதாம்.

    ”குண்டலினி சக்தி வளைந்து மண்டலித்து மூலதாரத்தில் கிடைக்கும் நிலையாலும் புற்றில் ஏறுவதுபோல் சுழிமுனை நாடியில் ஏறி இந்த சக்தி உச்சி வரை வருவதாலும் அக்குண்டலினி என்ற உடல் சக்தி  புறக்குண்டலினியாகிய பிரபஞ்ச சக்தியோடு பாம்பு மண்டலத்து போல் தொடர்பு கொள்வதாலும் உஃச் உஃச் என மூச்சுக்காற்றோடு தொடர்பு கொண்டதாலும் குண்டலினி சக்தியாகியா பராசக்தியின் அருளாற்றளை பாம்பு என்று சித்தர்கள் அழைப்பது மரபு “ என அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இவர் பாடியா 129 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவரது பெரும்பகுதி பாடல்கள் யோகமேயாகும். இவரது சமாதி விருத்தாச்சலத்தில் உள்ளதாக பதிவு செய்துள்ளனர். விருத்தாச்சலம் ஊர் சென்னையிலிருந்து திண்டிவனம் விழுப்புரம் தாண்டி  திருச்சி செல்லும் தென் பகுதியில் உள்ளது.

    இனி பாம்பாட்டிச் சித்தரி பாடல்களைக் காண்போம்

    நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்தமென்றே
    நித்திய மென்றே பெரிய முத்தியென்றே
    பாடுபடும் போதுமஆதி பாதம் நினைந்தே
    பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே    (2)

ஆதியாகிய இறைவன் திருவடியை நினைத்தபடியே பன்முறை நினைந்து நினைந்து ஆடுவாயக பாம்பே எனக் குறிப்பிடுகிறார்.

    பொன்னிலொளி போல எங்கு பூரணமதாய்ப்
    பூவின்மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்
    மன்னும்பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
    வள்ளலடி வணங்கிநின் றாடுபாம்பே   (3)
  
    பொன்னின் ஒளி பூரன்மாய் அதனுள் நிறைந்துள்ளது போல், மலரின் மணம் பருவம் வரும்போது வெளிப்படுவ்து போல் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ள வள்ளல் அடியை நினைந்து ஆடு பாம்பே எனக் கூறுகிறார்.

    அண்டபிண்டந் தந்த எங்கள் ஆதிதேவனை
    அகலம லேநினைந் தன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட எத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி யாடு பாம்பே    (5)

அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்த ஆதிதேவனை எண்ணி எட்டுத் திசையும் புகழுமாறு அன்புடன் வணங்கி வாழ்த்தி பாம்பே ஏக மனதுடன் ஆடுவாயாக என மொழிகிறார். சித்தர் பெருமக்கள் அண்டத்தையும் பிண்டத்தையும் பாடி அன்றே வானவியல் தத்துவத்தை கூறியுள்ள மெய்ஞானிகள்:.

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவ னாயும்
செறிந்தவசுத் துவைப்போற்றி யாடு பாம்பே

உருவமின்மையாகவும் உருவமாகவும், தொடக்கமாகவும் முடிவாகவும், இருளாகவும் ஒளியாகவும், ஆகமமாகவும் வேதமாகவும் , குருவாகவும் சீவனாகவும்  எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பரம்பொருளை எண்ணி ஆடு பாம்பே என திருவாய் மல்ர்ந்தருளியிருக்கிறார்.

    எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
    இருந்து விளையாட் டெய்தியும் பின்னர்
    அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகிய நின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே  (9)

உயிரையும் உலகையும் படைத்து ஐந்தொழிலாகிய திருவிளையாட்டை நடத்தி பின்னர் உலகும் உயிருமாக இருந்திடும் மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டு ஆடு பாம்பே  எனப் பகர்கிறார் சித்தர் பெருமான்.

குரு வணகத்தில் பாம்பாட்டிச் சித்தர் சமூகச் சீரழிவுகளைச் சாடி புரட்சிச் சித்தராக தோன்றுகிறார்.

பொய்மதங்கள் போத்னைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்நெறியில் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி ஆடாய் பாம்பே    (11)

பொய்யான மதங்களை கற்பிக்கும் மத குருமார்களை மாற்றி நன்னெறிப்படுத்தும் மெய்குருவின் திருவடிகளைப் போற்றி ஆடுபாம்பே என புரட்சிகரமாகக் கூறுகிறார்.

உள்ளங்கையிற் கனிபொல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனம் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
களித்துக் களித்துநின்றாடாய் பாம்பே    (13)

உள்ளாதை உள்ளவாறு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் காட்டவல்ல வல்லமையான குருவை ஏற்று மகிழ்ந்து மகிழ்ந்து ஆடாய் பாம்பே என குருவின் மேன்மையை விளக்குகிறார் சித்தர்.

கூடுவிட்டு கூடுபாயுங் கொள்கை யுடைய
குருவின் வல்லபமெவர் கூற வல்லவர்
வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
மெய்க்குருவைப் பணிந்து நின்றாடாய் பாம்பே     (16)

ஓர் உடல் விட்டு வேறோர் உடல் பாய்ந்து செல்லும் வல்லமைபெற்ற பேராற்றல் குருவைப் பணிந்து ஆடு பாம்பே எனப் பகர்கிறார் சித்தர்.

ஆடு பாம்பே ஆடுபாம்பே என பாடிய பாம்பாட்டிச் சித்தர் பாம்பின் சிறப்பையும் பாடியுள்ளார்.

நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதளத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்றுவிளையாடு பாம்பே     (20)

தமிழ்கத்தில் மிகப் பரவலாக பாடும் சொற்றொடர் ”நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே”. பர்மசிவன் முடிமீதிருக்கும் நாகப்பாம்பே.நச்சுப்பை வைத்திருக்கும் நல்ல பாம்பே புற்றைக் குடைந்து பாதளத்தில் குடியேறும் பாம்பே. நாதத்திற்கு கட்டுண்டு பாடப் பாட விளையடி மேலேறும் பாம்பே என பாம்பின் சிறப்பகக் கூறுகிறார் சித்தர்.

குற்றமற்ற சிவனுக்கு குண்டல மானாய்
கறுந்திரு மாலினுக்கு குடையு மானாய்
காற்றைக்குழல் பார்வத்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே        (22)

    சிவனுக்குக் குண்டலமாகவும் திருமாலுக்குக் குடையாகவும் பார்வதிக்கு தோள் வலையமாகவும் விளங்கும் பாம்பே எங்கும் மறையாமல் மகிழ்ந்து ஆடுக என பாம்பின் சிறப்பைக் கூறுகிறார்.
  
    மூண்டெரியும் அக்கினுக்குள் மூழ்கி வருவோம்
    முந்நீருள் இருப்பினும் மூச்சு அடக்குவோம்
    தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்
    தார்வேந்தன் முன்பு நின்றாடு பாம்பே        (30)
  
    கொளுந்துவிட்டெறியும்  செந்தீயில் மூழ்கி வெளிவருவோம். ஆழமான கடலிலும் மூச்சையடக்குவோம். சீரிவரும் கடும்புலியை அடக்குவோம். வேந்தனாகிய இறைவன் முன்பு ஆடு பாம்பே என மொழிகிறார் சித்தர்.

    சிறுபுலி யனையாளி சிங்க முதலாய்ச்
    சிற்றடிக்கு குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
    வீறுபெருங் கடவுளை எங்களுடனே
    விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே   (34)

    புலி யானை சிங்கம் யாளி போன்றவற்றை சிறு உயிர்களுக்கு ஏவல் செய்யச் சொல்லுவோம்.  இறைவனோடு நாம் விளையாடுவோம் என்று ஆடு பாம்பே எனக் கூறுகிறார்.
  
    சித்தர் உரையாடலாக சில பாடல்கள் பாடியுள்ளார் அதில் ஒரு பாடலில்

    நடுவால ஆதிசேடம் தன்னை நட்டும்
    நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்
    கடுவிசங் கக்கவேயக் கட்செ விகளைக்
    கையிலெடுத் தாடுங்கள் சித்த னாரே    (39)

    அட்டபந்தத்தின் நடுவே ஆதிசேடனை நாட்டி நான்கு பக்கங்களிலும் மந்தரித்த திருநீறு தூவி நஞ்சைக் கக்கும் பாம்புகளைக் கையிலெடுத்து ஆடுங்கள். எனக் கூறுகிறார் சித்தர்.
    பொருளாசை விடுமாறு நிலையாமை குறித்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சில
  
    நாடுநகர் வீடுமாடு நற்பொறு ளெல்லாம்
    நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
    கூடுபோன பின்புவற்றால் கொள்பய னென்னோ
    கூத்தன் பதங் குறித்து நின் றாடாய் பாம்பே   (40)
  
    நாடு நகர் வீடு மாடு சிறந்தவை அனைத்தும் சாகும்போது நம்மோடு வருவதில்லை வாராத அவற்றை எல்லாம் எண்ணாமல் கூத்தாடும் இறைவனின் திருவடியை எண்ணி ஆடு பாம்பே எனக் கூறுகிறார் சித்தர்.

    மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
    மாளும்போது கூட அவர் மாள்வதில்லையே
    தக்கவுல கவனைத்தையும் தந்த கர்த்தனைத்
    தாவித்தாவித் துதித்து நின்றாடாய் பாம்பே    (48)

நாம் இறக்கும்போது குழந்தைகள், மனைவி சுற்றத்தார் யாரும் கூடவே இறப்பதில்லை ஆகவே இவ்வுலகைப் படைத்த இறைவனை எண்ணி தாவித் துதித்து நின்று ஆடு பாம்பே என்று நிலையாமையைப் பற்றி விளம்புகிறார் சித்தர்.

    கானலைமான் நீரென்று கண்டு செல்லல்போல்
    காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
    மேனிலைகண் டார்கள்வீணாய் வீம்பு பேசிடார்
    மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே    (49)

மான் கானல் நீரைக் கண்டு ஏமாறுவதுபோல் வினை வசத்தால் மூடர் தகுதியற்றதைக் கண்டு மகிழ்வர் .உலக நிலை கண்டவர்கள் மெய்யான் இறைவன் திருவடிகளையே நாடுவார் என்று ஆடுபாம்பே எனக் கூறி மகிழ்கிறார் சித்தர்.

    காமவிலக்கல் எனும் தலைப்பில் 10 பாடல்கள் உள்ளன அதில் பெண்ணாசையைக் கடுமையாக சாடியுள்ளார். பாடல்களில் சில

    வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகை
    விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
    ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
    உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே        (51)

    பெண்கள் அழகை விரும்பி மேலும் மேலும் ஆசை கொள்ளும் மாந்தர் இளவம் பஞ்சை பழமென்று காத்திருந்த கிளிபோல் உடல் தளர்ந்ததும் ஆசையை கைவிட்டு ஒடுவர் என ஆடு பாம்பே என்று பாடுகிறார் சித்தர்.

    நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
    நன்னுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்
    கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
    கோன் நிலையை யறியாரென் றாடாய் பாம்பே     (57)

    பெண்களின் எச்சிலை அமுதமென்றும் சளியுள்ள மூக்கை குமிழம்பூ என்றும் கூறுவார்கள் மடையர்கள். இறைமை நிலையை அடையமாட்டார்கள் என்று ஆடு பாம்பே. என பெண்ணாசையைச் சாடுகிறார் சித்தர் பெருமான்.

    உடலிழிவைப் பற்றி சித்தர் பெருமான் 10 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சில

ஊத்தைக் குழிதனில் மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்ந்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கும் ஆகாதென் றாடாய் பாம்பே.    (60)

மக்கிய மண் குழியில் மண்ணெடுத்து உதிரமாகிய நீரால் உண்டை சேர்த்து  குயவனார் பண்ணும் பாத்திரம் உடைந்த ஓட்டுக்குரிய மதிப்பைக் கூடப் பெறாத என ஆடு பாம்பே எனப் பாடுகிறார் சித்தர்.

பரியாசம் போலவே கடித்த பாம்பு
பல்பேரறியவே மெத்த வீங்கிப்
பரியாரம் ஒருமாது பார்த்த போது
அரைக்காசுகு ஆகாதென் றாடாய் பாம்பே        (62)

விளையாட்டாக ஓர் ஆடவன் பெண்ணும் கூடியதால் பலரும் அறியும்படி கர்ப்பமாகி வயிறு வீங்கியது.மருத்துவச்சியின் துணையால் கர்ப்பைப்பை குழந்தை கழன்று விழுந்தது.பராசத்தியாகியா மாது இதைப் பரிகாரத்தால்  உடலாகிய பை நீங்குமாறு யோகசித்தி கூடுமென்று ஆடுபாம்பே எனக் கூறுகிறார்.

நீரிலெலும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல்
நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்தனைப்
பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே    (64)

நீர்க்குமிழி போல் நீரோடு நீராக இந்த உடலும் நில்லாமல் நீங்கும் உலகில் உயிர்களைப் படைத்த இறைவனைப் பற்றி ஆடு பாம்பே என உடலழிவைப் பற்றி பாடுகிறார்.

    மனப் பற்று நீக்கலை பற்றி பல பாடல்கள் யாத்துள்ளார் சித்தர் அவற்றுள் சில.

மனமென்ன்னுங் குதிரையை வாகன மாக்கி
மதியென்னுங் கடிவாளம் வாயில் பூட்டிச்
சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித்
தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே    (78)

மனமென்னும் குதிரையைப் பூட்டி புத்தியை கடிவாளமாகப் பூட்டி, சினமென்னும் குன்றில் சீராக ஏறி சாவாரி சென்றோம் என்று ஆடு பாம்பே எனப் பாடுகிறார் சித்தர்.

ஆழிபெயர்ந் தாலுமேறு அலையும்
அடியோடு பெயர்ந்தாலும் மன்றிக் கால
ஊழிபெயர்ந் தாலுமதி யுண்மைப் படிக்கே
உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே      (85)

கடல் பெயர்ந்தாலும், மேறுமலையே அடியோடு பெயர்ந்தாலும் ஊழியாகிய காலம் பெயர்ந்தாலும் உண்மையான் அறிவு வழியில் நின்றாடாய் பாம்பே என பற்றற்று பகர்கிறார் சித்தர்.

விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்
    வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
காரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம்
    காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்
துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்
    சுற்றிவலம் வந்துநித்ய சூட்சமங் கண்டும்
உரையற்ற மந்திரம் சொல்லி மீட்டோம்
    ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே    (117)

    விரகம் எனும் குடத்தில் குண்டலிணியை இணைப்போம்.வேதாந்த வெளியாகிய் யோகத்தில் விடுவோம். வினைகளை இதற்கு இறையாக்குவோம். காலமெனும் சுடுவெளியில்  ஆடவைப்போம். குதிரையில் ஏறி உலகம் முழுமையும் வலம் வருவோம் சூட்சமத்தைக் கண்டு வாய்விட்டு உரைக்காத மவுன மந்திரம் கூறுவோம் இதனால் நான்காவதான வீட்டைப் பெறுவோம் என்று சித்தர் கூறி மனித சமுதாய மீட்சிக்கு வழி கூறுகிறார்.

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் அனைத்தும் புரட்சிப் பெட்டகங்கள். பற்றற்று வாழ நமக்குக் கிடைத்த ஞானப்பாடல்கள். முற்றும் துறந்த நிலையில் முழுமைப் பாடல்கள். ஒவ்வொன்றும் உலக ஞனத்தையும் அஞ்ஞானத்தையும் உணர்த்தும் மாமருந்துகள்..

 .