Thursday, September 22, 2011

ஈழப் போரில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேவை ஐநா மன்றத்தின் குற்றவாளி கூண்டில் நிறுத்த இந்தியத் தலைமையமைச்சர் மாண்பமை மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை



கவிமுரசு. வா.மு.சே. திருவள்ளுவர்

ஈழத் துயரில் அறிஞர்களும் எழுத்தாளர்களும் உணர்வாளர்களும் பெருங்கவிக்கோ தலைமையில் ஒன்று கூடி வேற்றுமையிலும் ஈழத் துயர் நீக்க ஒற்றுமையாக உண்ணா நோண்பு இருந்து போராடியதும் தில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் மாண்பமை மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து கோரிக்கை வழங்கியதும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.

தில்லி சந்தர் மந்தர் பகுதியில் 28 – 7- 2011 அன்று காலை 8 மணிக்கு ஒன்று கூடி மாலை 5.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் ஒவ்வொருவரும் ஈழப் போரில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேவை ஐநா மன்றத்தின் அறிக்கைப்படி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என முழக்கமிட்டனர்.

சென்னையிலிருந்து 120 பெருமக்கள் சி.டி தொடர்வண்டியில் 25-7-2011 அன்று புறப்பட்டோம். தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பெருமக்கள் வருகை தந்திருந்தனர். சென்னையிலிருந்து 25 புறப்பட்டாலும் வெளியூரிலிருந்து 24 அன்றே புறப்பட்டு சோர்வில்லாமல் ஈழ மக்கள் சோர்வினை நீக்க பங்கேற்றது என்னை நெகிழச்செய்தது.

சென்னையிலிருந்து தொடர்வண்டி புறப்பட்டதும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. யாங்கள் பெயர்ப் பதிவை அனைத்துப் பெருமக்கள் இருக்கை சென்று கையொப்பம் பெற்று வருகையை உறுதிப்படுத்திக் கொண்டோம். உணர்வாளர்கள் அனைவரும் ஒருங்கிணைய தொடர் வண்டிப் பயணம் உறுதுணையாக இருந்தது. தொடர்வண்டியில் பயணித்தோர்க்கு தமிழ்ப்பணி இதழ்களும் நூல்களும் வழங்கப்பட்டன.

27ஆம் நாள் காலை புதுதில்லி நிறுத்தத்தை அடைந்தது. அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ, முகுந்தன், கிருட்டிணமூர்த்தி போன்ற பெருமக்கள் எங்களை வரவேற்று பேருந்தில் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். இன்று காலை 9-30 மணிக்கு தலைமையமைச்சரை சந்திப்பதாகக் கூறினர். யாங்கள் தயார் நிலையில் இருந்தோம். முகுந்தன் தந்தையாரை அழைத்துக் கொண்டு தங்குமிடம் வந்தார். யாங்கள் 5 பேர் ஆகையால் மூவரை தந்தையாரோடு அனுப்பி யானும் முகுந்தனும் தாணியில் சென்றோம். தலைமையமைச்சரை சந்திப்பதற்கு அனுமதி பெற்று எங்களுக்காக தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தமிழ்நாடு இல்லத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

சாலையில் சாலை நெருக்கடியால் யாங்கள் செல்வதற்குள் தலைவர் தங்கபாலு எங்கே எங்கே உள்ளீர்கள் எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். இறுதியாக முகுந்தன் என்னிடம் தொல்பேசியை கொடுத்த்விட்டார். யான் ஐயா, யாங்கள் நெருங்கி வந்துவிட்டோம் ஐயா முன்னமே புறப்பட்டு விட்டார் அங்கு வந்துவிடுவார் என்றேன். தாம் வாயிலிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார். ஒருவழியாக அனைத்துத் தடைகளயும் கடந்து தந்தையாரும் யாங்களும் தமிழ்நாடு இல்லத்தை அடைந்தோம் வாயிலில் தயாராக இருந்த தலைவர் தங்கபாலுவின் மகிழ்வுந்தோடு தலைமையமைச்சர் இல்லம் நோக்கி விரைந்து சென்றோம்.

காங்கிரசுத் தலைவர் தங்கபாலு, உலகத் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் உலகத்தமிழ்க் கவிஞர் பேரவையின் செயலாளர் கவிஞர் பனப்பாக்கம் சீத்தா,காஞ்சி மருத்துவமாமணி விம்முணா மூர்த்தி, முத்தமிழ்ப்பேரவைச் செயலாளர் முகுந்தன், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர் வா.மு.சே.திருவள்ளுவராகிய யான் அனவரும் தலைமை அமைச்சரின் வாயிலில் காவலர்கள் புறச்சோதனை முடித்து, எங்களின் அடயாள அட்டைகளின் சோதனை முடித்து உள்ளே அனுப்பினர். ஐயா அவர்கள் தன்னுடைய கைப்பையையும் கைத்தொலைபேசியையும் கொண்டுவந்ததால் ஒரு காவலர் அதைப் பெற்று அனுப்பினர்.

சோதனைக் கட்டம் முடித்து தலைமையமைச்சக இரு மகிழ்வுந்து வந்தது. அதில் யாங்கள் ஏறி சில மணித்துளிகளில் தலைமையமைச்சரின் இல்லத்தை அடைந்தோம். யாங்கள் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம், யான் செர்மனி பெர்லின் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மூன்றாம் மாநாட்டிற்கு தலைவர் தங்கபாலு அவர்களை அழைத்தையும் மலருக்கு அவர் வழங்கிய வாழ்த்தையும் நினவுபடுத்தினேன். தந்தையார் அவர்களோடு டாக்டர் பஞ்சாட்சரம் நடத்திய தமிழீழ மாநாட்டில் பங்கேற்றதை நினைவுகூர்ந்தார். தமிழகத்திலிருந்து பல தலைவர்கள் பங்கேற்றதை தந்தையார் கூறினார்.

தலைமைஅமைச்சரைக் காண காவலர் அழைத்தனர். யாங்கள் அனைவரும் தலைமையமச்சரின் அறைக்குச் சென்றோம்.தலைமையமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள வ்ருகை தந்தார். யாங்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் கூறினோம். தலைவர் தங்கபாலு அவர்கள் எங்கள் ஐவரையும் தலையமைச்சருக்கு அறிமுகப் படுத்தினார். தந்தையார் அவர்கள் ஈழப் போரில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேவை ஐநா மன்றத்தின் அறிக்கைப்படி குற்றவாளி கூண்டில் நிறுத்த இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை மடலை உலக்த் தமிழ்க் கூட்டமைப்பின் பட்டினிப் போராட்ட குழுவினர் சார்பாக வழங்கினார்.

ஈழத்தில் முள் வேலியில் துன்புறும் அவலத்தையும், இராசபக்சே அரசு எந்தவித மனித நேயமின்றி நடத்துவதையும் அமெரிக்காவில் ஐநா மன்றம் அறிக்கையின்படி போர்க்குற்றவாளியாக இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்றும்குறிப்பிட்டோம். அஞ்சா நெஞசமுடைய தந்தையார் அவர்கள் இந்தியாதான் இக் கொலைகளைச் செய்ததாக எண்ணும் அனைவரின் கருத்தையும் வெளியிட்டு அதை தஙகபாலு அவர்களும் மொழி பெயர்த்தார். தலைமையமைச்சர் அவர்கள் இந்தியாவின் சார்பில் வழங்கிய நிதி உதவிகளையும் தொடர்ந்து வெளிநாட்டு அமைச்சகம் கவனித்து வருவதையும் தலையமைச்சர் குறிப்பிட்டார்.

யான் தலையமைச்சரிடம் ” Respected Sir Your Aids were not utilized by the srilankan government to the worstly affected area of tamils still they are in bad situation” தக்க நடவடிக்கை எடுப்பதாக தலைமையமச்சர் அவர்களும், தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி கூர்ந்து கவனிக்கும் என்று தங்கபாலு அவர்களும் கூறினர்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஈழத் தமிழர்ககு இராசபக்சே அரசின் கொடுரப் போர்க்குற்றங்களை வண்ணப்படங்களுடன் ஆங்கிலத்தில் மலராகத் தொகுத்துள்ளனர். ஈழத்தமிழர் கண்ட கொடுமைகளை விளக்கும் மலராக உள்ளது. அம்மலரை தலைமையமைச்ச்ருக்கு தமிழ்ச்சங்கத் தலைவர் மீனாட்சிசுந்த்ரம் வழங்கினார்.முத்தமிழ்ப்பேரவைச் செயலாளர் பொன்னாடை போர்த்தினார்.

யான் 40 ஆண்டு கால பெருமையுடைய தமிழ்ப்பணி இத்ழை வழங்கினேன். இந்த இதழிழ் இலண்டன் ஒளிபரப்பு 4 ஒளிபரப்பிய கொடுரப் படங்களை அட்டையில் அச்சிட்டிருந்தேன், எம் அலுவலகச் சாலையோரம் வாழ்ந்து மறைந்த ஒரு அம்மையாரைப் பற்றிய கவிதை எழுதி இருந்தேன். சாலை மக்கள் வளர்ந்தால்தான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி எனக் குறிப்ட்டிருந்த்தேன். தலைமையமைச்சர் இல்லத்தில் எங்களுக்கு வடை சாம்பார் சட்டினி தேனீர் வழங்கினர்.

அறிஞர்களும், உணர்வாளர்களும், தொண்டர்களும் ஈழப்போரில் குற்றம்புரிந்த இராசபக்சேவைக் கூண்டில் ஏற்ற உண்ணாநோன்பு இருந்து தலைமையமைச்சரைத் சந்தித்து உணர்வுகளை வெளிப்படுத்தினோம், தலைமையமைச்சரை சந்தித்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அனைவருக்கும் இது குறித்த செய்தியை உலகறியச் செய்தோம். தலைமையமைசரை சந்திக்க ஏற்பாடு செய்த தலைவர் தங்கபாலு அவர்கட்கு தந்தையார் நன்றி கூறினார். அன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் இராசபக்சேவை போர் குற்றவாளியாக இந்தியா நிர்பந்திக்க வேண்டு என்ற செய்தி வெளியாகியது.

28-7-2011 அன்று காலை பட்டினிப் போராட்டம் தொடங்கியது காங்கிரசு கட்சித் த்லைவர் கே.வி. தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன்,லோக் சனசக்தி தலைவர் ராம்விலாசு பாசுவான்,திமுக துணைப் பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன், மாநிலங்கலவை உறுப்பினர் வசந்தி சுடான்லி, மற்றும் பெருமக்கள் உண்ணாநோன்பில் பங்கேற்று கண்டன உரையாற்றினர், இறுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி,கே,எசு. இளங்கோவன், பாரதீய சனதா கட்சி தில்லி துணைமேயர் அணில் சர்மா பழச்சாறு கொடுத்து உண்ணா நோன்பை முடித்துவைத்து கண்டன உரையாற்றினர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயககுநராகிய யான் நன்றியுரை கூற பட்டினிப் போராட்டம் சிறப்புடன் நடந்து முடிந்தது.

Monday, September 19, 2011

‘கவிச்சிங்கம் கண்மதியன் அன்பென்னும் உறவுக்கு உரைகல்


‘கவிச்சிங்கம் கண்மதியன் அன்பென்னும் உறவுக்கு உரைகல்
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(கவிச்சிங்கம் கண்மதியன் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கவிச்சிங்கம் கண்மதியன் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள் இனமானக் காவலர் பேராசிரியர் அவர்களின் வருகை கவிச்சிஙகம் பல்லாண்டு காலம் ஏங்கிய ஏக்கத்தின் பேறு.. கண்மதியன் அவர்கள் எங்களது குடும்ப நண்பர். தந்தையரோடு 40 ஆண்டுகாலம் தொடர்புடையவர். சென்னையில்அவரது மகன் திருமணம் வைதீக முறையில் நடந்த போது திருமணத்திற்கே செல்லாமால் புறக்கணித்த கொள்கையாளர். திருமணம் நடக்கும் நாளன்று குடும்பத்தாரைப் பணியவைத்து எம் அருமைத்தந்தையர் பெருங்கவிக்கோ, கவிக்கொண்டல் மா.செ.. முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், எழுகதிர் அருகோ ஆகியோரைக் கொண்டு தமிழ்த் திருமணத்தை நடத்தி முடித்த பெருமைக்குரிய கொள்கை மறவர். இனமானக் காவலரை திருமணத்திற்கே அழைத்து நடத்த அவர் ஏங்கிய ஏக்கம் இன்று கவிஞரின் நூல்வெளியீட்டு விழாவிற்கு பேராசிரியரின் வருகையால் மன நிறைவு பெறுகிறார்.

கண்மதியன் பன்னாட்டுத்தமிழுறவு மன்றச் செய்லாளராக மிகச் சிறப்பாக மாதக் கூட்டங்களை நடத்தியவர். மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் மாநாட்டில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பெருந்தகை. யான் உலகத் தமிழர்கள் கையேட்டையும், தந்தையாரின் பவழ விழா மலரையும் வெளியிட்டபொது அவரது உன்னதப் பேருழைப்பை எண்ணி எண்ணிப் போற்றுகிறேன்.

மலேசியா பன்னாட்டுத்ந்தமிழுறவு மன்ற 6ஆம் மநாட்டிற்கு தன் தாயரோடு வருகை தந்த பாசத்திருமகன். மாநாட்டின் ஐந்து நாட்களும் தயாரோடு அவர் வலம் வந்ததை அனைவரும் பாராட்டினர்.

தமிழ்ப்பணியின் தொடக்க காலத்திலிருந்தே எழுதிவரும் எழுச்சிக்கவிஞர், கவிஞரின் கவிதைகளை பாவேந்தர் மரபுப் பாவலர் வரிசையில் முனைவர் மறைமலை இலக்குவனார் மிகச் சிறந்த ஆய்வுரை வழங்கியுள்ளார்.

கவிஞரின் கவிதைகள் சமூகத்திற்கு அரணாக உள்ளவை. தந்தை பெரியாரைப் பற்றி பாடும்போது

“நீ பிறக்க வில்லையெனில் நிலந்திருந்த வழியேது” என தமிழகத்தின் விடிவெள்ளியை நன்றியோடு எண்ணுகிறார்.

அண்ணல் காந்தியைப் பற்றி கூறும் போது மனித தெய்வம் என்று கூறி தெய்வம் என்று கல்லையும் மண்ணையும் வணங்கும் மக்களுக்கு வழிகாட்டுகிறார்,

கோபுரத்தில் பிறந்த காந்தி
குடிசையில் வாழ்ந்து காட்டி
மாபெரும் தியாக வாழ்வில்
மனிதருள் தெய்வ மானார். (பக்:93)

தென்னாட்டு காந்தி பெரறிஞர் அண்ணாவைப் பற்றி குறிப்பிடும்போது அவரது வாழ்வையே படம்பிடித்துக் காட்டுகிறார்.

“அரிவினில் முற்றிய நெற்கதிர்
அகற்றலில் அவனோர் செங்கதிர்
பொறுமையில் தாங்கிடும் மாநிலம்- புதுமைப்
புரட்சியில் அவனோர் போர்க்களம் (பக்:181)

மகாகவி பாரதியைப் பாட வந்த கவிஞர் பாரதி தன்னிடம் கூறுவது போன்றே பாடி இன்றைய கவிஞர் நிலையைப் பாடுகிறார்.

என்னைநீ பார்த்த பின்னும்
இன்னுமா கவிதை தீட்டி
உன்னுடல் அழித்துக் கொண்டாய்?
ஊரினுக் குழைக்க வந்தாய்? (பக்:185)
இதனால்தான் கவிஞர் சில காலம் கவிதைத் துறையைத் துறந்திருந்தாரோ.

பாவெந்தனைப் பாட வந்த கவிஞர் அவரும் புரட்சிக் கவிஞரின் வழித்தோன்றல் என நிருபிக்கிறார்.

புரட்டுப் பொய்மை தம்மைப்
புரட்டித் புரட்டித் தாக்கி
விரட்டி யடித்த வேந்து
வெடிகுண் டான பாட்டு (பக்:189)

இலக்கணத் தாத்தா மே,வி.வே அவர்களைப்படும்போது

இலக்கணம் தன்னில் ஈடில் புலமை
முதிர்ச்சி பெற்ற முற்றிய செந்நெல்
அதிர்ச்சி வைத்தியம் அளித்திடும் மருத்துவர். (பக்:231)
என மனமொன்றிப் பாடுகிறார்.

அண்ணன் கவிச்சிங்கம் அவர்களைப் பற்றி யான் என் சிந்தையில் தோன்றியதை அவரே தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

முறைப்படி தமிழ்கற்ற யானோர் புலவன்
மூண்டகொடுஞ் செயலெதிர்க்கும் யானோர் தலைவன்
அறிஞர்தம் ஏவலுக்கு யானோர் இளவல்
அன்பென்னும் உறவுக்கு யானோர் உரைகல்
விதியென்று உரைப்பார்க்கு யானோர் பகைவன்! (பக்:207)

நூறு திருக்குறளுக்கு வெண்பா பாடி குறளமுதம் தந்துள்ள கவிஞர்

சொல்லுதல் யாவர்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

என்ற குறளுக்கு ஒப்ப சொல்லிய வண்ணம் தம் வாழ்க்கை வாழும் அண்ணன் கண்மதியன் அவர்கள் வாழ்வாங்கு வாழ எம் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தினர் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

Saturday, September 3, 2011

தமிழன்னை மகுடம் சூட்டப்பட்ட செய்தி


தந்தையார் கெனொசா உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்கு பெற்றதை அமெரிக்கப் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டுளன.

ஒரு தமிழ்க் கவிஞனை அமெரிக்காவில் பத்திரிக்கைகள் உலகக் கவிஞர்களுடன் இணைத்துப் பெருமைப் படுத்துவது கட்டுரையாக வெளியிடுவது சிறப்பாக அமையும்.

தமிழன்னை மகுடம் சூட்டப்பட்ட செய்தியை தங்கள் பத்திரிக்கை உலக நண்பர்களுக்கும் தங்கள் பதிவிலும் வெளியிடுவது தமிழன்னைக்கு நாம் செய்யும் சிறப்பு

மேலும், நிழற்படங்கள், செய்தி தேவைப்படின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

செய்தி உலக நண்பர்கள் மின்னஞ்சல் இருப்பின் எனக்கு அனுப்புங்கள், நானும் அவர்களைத் தொடர்பு கொள்கிறேன்.

நட்புடன்
.கவி.

Tuesday, July 12, 2011

வெல்க சமச்சீர் கல்வி


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னை 23-6-2011அன்று பூவிருந்தவல்லியில் நடைபெற்ற கவியரங்கை
தொடங்கி வைத்த தொடக்கப் பா]

மூத்த தமிழ் வாழ்வின்
முதன்மை மண்ணின் மக்காள்
காத்த தமிழ் நாட்டின்
கனிந்த கண்மணி மக்காள்
பூத்த தமிழ் நெஞ்சம்
புலர்ந்த தமிழ் நூல்கள்
ஏத்தும் எம்மொழியின் பேறே
ஏற்க என்றன் வணக்கம்|

பாக்கம் தமிழன் இவன்
பண்பார்ந்த தமிழ் அன்பன்
ஊக்கத் தமிழ் வார்ப்பின்
உயர்ந்த கவி நெஞ்சன்
பூக்கும் தமிழ்ப் பூங்கா
பூவைத் தமிழ் அங்கம்
காக்கும் தமிழர் மானம்
கவிஞனுக்கு என் வணக்கம்|

தேக்கும் மரபு வானம்
தேர்ந்த கவி ஊற்று
ஆக்கும் புயல் காற்றாம்
அரவணைக்கும் தலைமை நெல்லை
போக்கித் தமிழ்ப் பகையை
பொழிவாய் தமிழ் ஆளும்
காக்கும் இராமச் சந்திரர்
கவிவாணர்க்கு என் வணக்கம்.

வந்தோரை ஆள வைத்து
வறியாராய் தினம் நிற்கும்
சொந்தமதை உதறித் தள்ளி
சுகமாகக் கைகள் ஏந்தும்
விந்தைக் குணம் என்றால்
வின்வளர்ச்சி வரும் எங்கே
மந்திக் குணம் ஏற்று
மானமின்றி நிலம் வாழ்வோ

பெரியார் கொள்கை தம்மை
பேணியே ஏற்கா தன்மை
உரியாரை உணராப் போக்கால்
உள்ளதை இழந்து நின்றான்
பொரியை ஊதுதல் போன்றே
பொல்லாதார் கையில் உள்ளான்
நெறிமறந்த நம் மக்கள்
நிலையாதல் என் நாளோ

பாவேந்தன் தோன்றி நம்மின்
பகுத்தறிவு பாவைத் தந்தார்
நாவேந்தும் கலைஞர் நன்றாய்
நயத்தகு சமச்சீர் கண்டார்
பூவேந்தும் மழலைச் செல்வம்
புகழேந்தும் கல்வி ஒன்றாய்
சாவேந்தல் முறையோ தானா
சிந்திப்பீர் செயலாய்க் காண்பீர்

கோபுரத்து வாழும் பிள்ளை
கொட்டடியில் வாழும் கிள்ளை
மாபுகழின் கல்வி தம்மை
மாசமச் சீராய் கற்றல்
நாபுகழ் கலைஞர் சிந்தை
நசுக்குதல் முறையோ சொல்வீர்
பாபுகழ் அறிஞர் கண்ட
பயன்சமச்சீர் வீழ்தல் நன்றோ

சாத்திரம் சடங்கு மாயம்
சலிக்காமல் காணும் ஆட்சி
கோத்திரம் கோயிலில் வீணாய்
கோடிகோடி கொட்டும் ஆட்சி
காத்திடும் மழலைச் செல்வம்
கல்வியில் தடைதான் ஏனோ
மாத்திறக் கல்வி தன்னை
மதியாமல் மாய்த்தல் நன்றோ

கல்வி நிலையம் எல்லாம்
கயமைக் கீழோர் கையில்
கொள்ளை நிலையம் என்றே
கோடிகோடி சேர்க்கும் நாளில்
பள்ளீச் சமச்சீர் சாய்த்து
பருவத்தே பம்மாத்து காட்டி
கல்விப் பயனை ஏழ்மை
கிட்டாமல் செய்யும் மோசம்

எதுதமிழர் உரிமை என்றே
எழுச்சிக் கவிஞர் மக்காள்
முதுகு தெறித்து ஓடும்
முத்தமிழ்க் கவியைத் தருக
சதிவலை தகர்த்து எரிய
சமத்துவ சமச்சீர் காண்க
ஆதித்தமிழர் கவிய ரங்கை
ஆர்தெழுந்தே தொடங்கு கின்றேன்

தொடங்கிய முழக்க நாதம்
தொடர்ந்திடும் செயலாய்க் காண்க
முடங்கிய நம்மின் வீரம்
மூர்க்கமாய் கிளர்ந்து எழுக
அடக்கிய கூட்டம் ஓய
ஆவேச எழுச்சி கொள்க
தொடங்கிய சமச்சீர் காண
தொழரே வெற்றி காண்போம்|

Friday, July 1, 2011

மண்ணில் உன்நிலை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்


மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில் புதைவது மாற்றமா
சீற்றம்இன்றிதோழா
சிறுமை ஏற்பது மாற்றமா
நாற்றம்இன்றிதோழா
நலமாய் மகிழ்வது மாற்றமா
தேற்றுவோர்தம்மைத்தோழா
தெருவில் தள்ளுதல் மாற்றமா


வெற்றுக்கூச்சலைத்தோழா
வெறியாய்க் கொள்வது மாற்றமா
உற்றஉன்மொழிதோழா
உதறத் துடிப்பது மாற்றமா
கற்றஉன்வழிதோழா
கதற வைப்பது மாற்றமா
முற்றும்முழுமதிதோழா
மூடியே வைப்பது மாற்றமா

பற்றிலான்வாழ்வைத்தோழா
பகடியம்செய்வதுமாற்றமா
வெற்றியின்மாளிகைதோழா
வேரோடுசாய்ப்பதுமாற்றமா
கற்றவர்கல்வியைத்தோழா
கடிந்து முடிப்பது மாற்றமா
உற்றவர்உரிமையைத்தோழா
உலகில் மாய்ப்பது மாற்றமா

கூற்றுவன்மடமைமூடம்
குனிந்து ஏற்றதன் சோகம்
வேற்றுமைசோதிடக்கயமை
வேதனைதந்தமாயம்
நாற்றங்கால் பகுத்தறிவுக் கொள்கை
நயத்தகு பெரியார் எங்கே
மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில்உன்நிலைஎன்ன?

Thursday, June 30, 2011

தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்தியமணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(28-6-2011 அன்று தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல், தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தலும் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கமும் இன்று தலைநகர்த்ததமிழ்ச் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் நடைபெறுவதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். விழாவிற்குத் தலைமை தாங்கும் வெள்ளைச்சாமி அவர்களே பேராசிரியர் அவர்களின் திருமகன் அவரது பணியை தொடர்ந்து செய்து வரும் மெ.மீனாட்சிசுந்தரம் அவர்களே, புலவர் என்றால் பெருமை சேர்ப்பவர் என் அருமைத் தந்தையார் வரிசையில் புலவர் சுந்தரராசனும் ஆவார்கள். தன் அயராத முயற்சியால் தலைநகரில் இந்தக் கட்டிடத்த்தைக் கட்டி இங்கு தமிழ் நிகழ்வுகளை நடத்திவரும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்த ஆட்சியானாலும் ஆய 64 தமிழ்க்கவலைகளை எழுதும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் ஆறு. அழகப்பனார் அவர்களே, தமிழன் தொலைக்காட்சி இயகுநர் கலைக்கோட்டுதயம் அவர்களே,சமச்சீர் கல்விக்காகா அன்றும் இன்றும்போராடி வரும் கசேந்திரன் அவர்களே, மணிவாசகர் பதிப்பக பொறுப்பாளர் குருமூர்த்தி அவர்களே சங்கத்தை மிகச் சிறப்பாக இயக்கி வரும் செயலாளர் பாவலர் கணபதி, புலவர் புஞ்ஞையரசன், அழகியநம்பி கவிஞர் இளங்கண்ணன் உள்ளிட்ட பெருமக்களே உங்களை வணங்கி மகிழ்கிறேன்.

பேராசிரியர் ச.மெய்யப்பன் அவர்கள் சிறந்த பேராசிரியர், நுண்ணிய ஆய்வறிஞர், தலைசிறந்த்த பதிப்பாளர், தமிழுக்காகப் போராடியவர், மனிதநேய மாமணி.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி மிகச் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியவர். தாம் பேராசிரியராக இருந்தபோது பல்வேறு தமிழ் நூல்களை எழுதியும் எழுத்தாளர்களையும் மாணவர்களையும் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர். தலைசிறந்த பதிப்பாளர். வெற்றி என்ற உரை நூலை வெளியிட்டுத் தமிழகம் முழுமையும் புகழ் பெற்றவர். மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாக தலைசிறந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். அனைத்துத் துறைகளிலும் தமிழுக்கு அணி சேர்க்கும் நூலை வெளியிட்டவர். அவரது வழியில் அவரது திருமகன் பல்வேறு பதிப்புகளை வெளியிட்டு வருகிறார். அண்மையில் தமிழ் அறிஞர்களுக்கும், சிறந்த நூல் ஆசிரியர்களுக்கும் பதிப்பாளருக்கும் விருது வழங்கி தந்தையின் புகழை மங்காமல் காத்துவருகிறார்
.
பேராசிரியர் மெய்யப்பனார் ஒரு தமிழ்ப் போராளி. மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கனார் அவர்கள் எங்கும் தமிழ் எதிலும் என்ற கொள்கைக்கு சென்னையில் பேரணி நடத்தியபோது தன்னுடைய கனத்த உடலோடு வியர்க்க வியர்க்க முழக்கத்தோடு நடந்த நடை என் மனக்கண் முன் தோன்றுகிறது.

பேராசிரியர் அவர்கள் சிறந்த மனித நேயமாமணி. 30 வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் உள்ள எங்களது புத்தகக் கடை வழியாகச் மெய்யப்பனார் சென்றபோது கடைக்குள் வந்து கண்டு தனது பத்தாயிரம் ரூபாய் உரைகளை அளித்தது தொழிலைப் பெருக்குங்கள் எனக் கூறிய பெருமனத்தர்.

செருமணியிலிருந்து நண்பர் கணேசலிங்கம் வந்திருந்தபோது ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம் அப்போது செருமனி வாழ் தமிழர்களுக்கு தன் பதிப்பக நூல்களைக் கொண்டுவந்து வழங்கிய அவரது வள்ளல் தன்மை எண்ணி போற்றத்தக்கதாகும்.
ஒருமுறை என் தங்கை எம்.எசி தேர்வுக்குச் சிதம்பரம் சென்றபோது தங்குவதற்கு தன் இல்லத்தை வழங்கீயதும் அவர்தம் துணைவியார் ஆச்சி காட்டிய பரிவும் நெஞ்சை விட்டு நீங்காதது.

இதையெல்லாம் குறிப்பிடுவதற்குக் காரணம் யாம் மட்டும் அல்ல அவரோடு பழகிய தமிழ் அறிஞர்கள் அணைவரும் அறிந்த ஒன்றாகும்.

தமிழைப் பயிற்று மொழியாக்க, அனைத்து நிலைகளில் தமிழ் அரியணையில் அமர 1993 ஆன் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத் தந்தையார் தலைமையில் தமிழ் அறிஞர்கள் நடைப் பயணமாக வந்தோம். பின் தொடர்ந்து 18 ஆண்டுகளாக ஊர்திப்பயணமாக வந்து மக்களை தெளிவித்தும் அரசையும் வலியுறுத்தியும் வருகிறோம்.
மேலும் தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழை பயிற்றுமொழியாகவும் இந்தியாவின் ஆட்சிமொழியாகவும் ஆக்கப் போராடுவோம்.

கம்பராமாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தசரதனைக் குறிப்பிடும்போது

‘ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்இல் நூல்நூல் ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் காய்ந்தே கடந்தான் பகைவேலை கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பெளவம்”

எனக் குறிப்பிடுகிறார். அதைப் போன்றே மெய்யப்பனார் அறிவுக்கடலை ஆய்ந்து கடந்தார். தம் வாழ்வில் பகைக் கடலை காய்ந்து கடந்தார். இரப்போர்கடலை ஈந்து கடந்தார்.

வாழ்க மெய்யப்பனார் புகழ். சாகோதரர் மீனாட்சி சுந்த்ரம் வழி அவரது தொண்டு தொடர்க எனக் கூறி விடைபெறுகிறேன்.

Saturday, June 18, 2011

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழா


(சென்னை கன்னிமாரா நூலகத்தில் 8-6-2011 அன்று நடைபெற்ற கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் விழாவும் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவும் அறிஞர்களுக்கு விருதளிப்பு விழாவுமாக முப்பெரும் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விழாவிற்கு தலைமைதாங்கும் நீதியரசர் பெரியார் சிந்தனையாளர் பரஞ்சோதி அவர்கள் பெரியார் அண்ணா கலைஞர் கொள்கைகள் தாங்கி பழுத்த பழமாக வாழும் செங்ட்டுவனார் உணர்வுக்கு ஏற்ற தலமையாகும். வாழ்த்துரை வழங்கிய பெருமக்கள் பேராசிரியர் இராசகோபாலன், கவிவேந்தர் வேழவேந்தன்,பெரியார் பேருரையாளர் தென்மொழி ஞானபண்டிதன்,கவிதைஉறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், தமிழ்வள்ளல் சந்திரசேகர் பொன்ற பெருமக்களெல்லாம் நெஞ்சாரப் போற்றியுள்ளனர்

பேரறிஞர் அண்ணாவின் இறப்பின் போது சென்னையில் அண்ணாசாலையில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் என்னைத் தோள் மீது இருத்தியவாறு அண்ணாவின் திரூஉடலைக் கண்டேன். தமிழகமே திறண்டுவந்து அஞ்சலி செலுத்திய,தமிழகத்தையே தமிழர்கள் கையில் வழங்கிய பேரறிஞருடன் இருந்து அண்ணாவின் எழுத்துக்களை எழுதி அண்ணாவின் உணர்வுகளை இன்றும் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் பாதுகாத்து வரும் கவிக்கொண்டல் விழாவில் பன்கேற்பது யான் பெற்ற பேறு.

யான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரை ஐயா அவர்க்ளின் மீது அன்பும் ஈடுபாடும் உண்டு. என் அருமைத் தந்தையாரும் ஐயா அவர்களும் இணைந்து பல்வேறு செயல்பாடுகளுக்கு வித்தூன்றியவர்கள். அக்காலகட்டங்களில் புரட்சிக்கவிஞர் பாவெந்தரை இருட்டடிப்பு செய்ய ஒரு கூட்டமே இருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்றங்கள் ஒன்றியப்பேரவை என்ற அமைப்பின் மூலம் தமிழ் மன்றங்களை ஒன்றிணைத்து மாதம் முழுமையும் பாவேந்தருக்கு விழா நடத்திய பெருமைகுரியவர்கள்.

பாவேந்தரின் சிலையை பிறந்தநாளின்பொது ஏணி போட்டு ஏறி கழுவி மாலை சூட்டி விழாநடத்திய பெருமைக்குரியவர்கள். பாவேந்தரின் சிலை அருகே கவிஞர் குழாத்தே கூடி யிருந்தது இன்றும் நிழலாடுகிறது. பாவெந்தரின் புகழ்பாடும் இதழாகவே இன்றும் கவிக்கொண்டலை நடத்தி பாவேந்தர் பாசறைக் கவிஞர்களுக்கு ஆசானாகவே உள்ளார்.

நெஞசம் மறவா நிகழ்ச்சிகள் தம் கவிக்கொண்டலில் தொடர்ச்சியாக வெளியிட்டு நூலாகவும் வெளிக் கொணர்ந்துள்ளார்.அவரது நூலைப் படிக்கும் போது திராவிட இயக்க வரலாற்றை அறியக் கூடிய பேழையாக உள்ளது. தொடர்ந்து ஐயா அவர்கள் தன் அனுபவங்களைப் பதிவு செய்ய அன்போடு வேண்டுகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் எளிமையும் மக்கள் நேயப் பண்பையும் ஐயாவின் எழுத்தில் படிக்கும்போது கண்கள் பணீக்கின்றது. ஐயாவின் எழுத்துக்கள் திராவிட இயக்கத்தின் ஆவணமாகவே உள்ளது.

கவிக்கொண்டல் மா.செ தலைசிறந்த இதழாளர் பதிப்பாளர். தலைசிறந்த தமிழகத்து மலர்களை தொகுத்து வழங்கிய பெருமைகுரியவர். தந்தைபெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இனமானப் பேராசிரியர் போன்ற பெருந்தலைவர்களுடன் இதழ்ப் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மூத்த பத்திரிக்கையாளர். இதழியல் கல்வி படிப்போரெல்லாம் மா.செ. அவர்களுடன் பயிற்சி மேற்கொண்டால் இதழாலர்களுக்கு பகுத்தறிவு உணர்வு செழிக்கும். தமிழினம் தழைக்கும்.

கவிகொண்டல் இதழில் வெண்பா விருந்து மூலம் எண்ணற்ற எழுத்தாளர்களை இலக்கண வரம்புக்கு உட்பட்ட கவிஞர்களை உருவாக்கியவர். ஒரு கவிஞர் கவிக்கொண்டலில் எழுதினால் மரபுவழிப் பாவலர் என்ற பெருமையைப் பெறும் பல்கலைக் கழகமாக கவிகொண்டல் இதழ் உள்ளது

கவிகொண்டல் மாசெ அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து தமிழ் தமிழரின் அடையளங்களையும் நெஞ்சம் மறவா நிகழ்சிகளின் மூலம் பெரியார் அண்ணா கலைஞரோடு உள்ள திராவிட போராட்ட உணர்வுகளையும் பதிவு செய்ய வேண்டி விழைகிறேன்.

மருத்துவமணையில் உள்ள அம்மையார் தாமரைச்செல்வி அம்மையார் நலம் பெற்று ஐயா அவர்களின் பணி சிறக்க எனது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.