
பொன்மன நல்லி வாழ்க
பத்மசிறீ நல்லி குப்புசாமிசெட்டியார் அவர்களின் 70ஆம்
அகவையை முன்னிட்டு கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பாடியது
பட்டுவை நெய்து நம்மின்
பெருமையை நிலைக்கச் செய்தோன்
மட்டிலா நல்லி மேன்மை
மண்புகழ் பரவச் செய்தார்
எட்டிடும் சிகரம் நோக்கி
ஏறுபோல் உயர்ந்து வென்றார்
பட்டென உடலின் பொட்டாய்
பொன்மன நல்லி வாழ்க!
புன்னகை மன்னன் பாரில்
புன்னகை பூக்கச் செய்வோன்
கண்ணென தொழிலைப் போற்றி
கண்டிட்டார் வணிக ஏற்றம்
தன்னரும் வாழ்வின் மேன்மை
தகுதியாய் நூலாய்த் தந்தோன்
புண்ணியப் பணிகள் ஆற்றும்
புண்ணிய நல்லி வாழ்க!
உலகெலாம் பறந்து நம்மின்
உயர்தொழில் உயர்த்தும் நல்லி
பலமெலாம் பகிர்ந்து நல்கும்
பண்புள நெஞ்சர் நல்லி
நிலமெலாம் கருணை ஊற்றை
நிகழ்த்திடும் தூயோன் நல்லி
நலமெலாம் இணைந்தே பாரில்
நனிபுகழ் நல்லி வாழ்க!
எழுபதைக் கண்டார் நம்மின்
எழுச்சியாய் வாழ்வில் நின்றார்
தொழுதிடும் சேவை வாழ்வில்
தொண்டராய் என்றும் உள்ளார்
பழுதிலா நல்லி மேன்மை
பார்புகழ் மென்மேல் ஏற்று
விழுதுபோல் அறங்கள் தாங்கும்
வியத்தகு நல்லி வாழ்க!
No comments:
Post a Comment