
சென்னை அருள்மிகு ஓம்சக்தி இசக்கி அம்மன் திருவிழாவில் 23-7-210 அன்று நடைபெற்ற கவியரங்கில் கவிமுரசு வா.மு,சே,திருவள்ளுவர் வழங்கிய நிறைவுக் கவிதை
தொன்மை என்று என்றே
தொடங்க மறுத லிக்கும்
உண்மை மொழியாம் எங்கள்
உயிராம் மெய்மொழித் தாயே
தன்மையால் செம்மொழிப் பேறாய்
தமிழர் தவத்தால் தோன்றி
தோன்றிய முன்னோர் எண்ணி
தொடர்ந்தே வணங்கு கின்றேன்
எண்ணிய முடிக்கும் ஆற்றல்
எழில்ஆறு முகனார் வாழ்க
திண்ணிய நெஞ்சம் கொண்ட
தெளிந்தநல் முருகேசன் வாழ்க
கண்ணிய கடமை நெஞ்சர்
கவின் பஞ்சநாதம் வாழ்க
புண்ணியப் பணிக்கு வந்த
புகழ்மிகு மக்காள் வாழ்க
வான்புகழ் கலைஞர் கோமான்
வழியினில் என்றும் வாழும்
வண்டமிழ் கவிஞர் எங்கள்
வள்ளியின் மைந்தன் வாழ்க
ஊனினை மறந்து எம்கோ
உலகிடை நடந்த போதே
தோணியாய் வந்த எங்கள்
தொண்டர் கலையரசன் வாழ்க
எண்ணெயும் திரியும் போன்றே
எழில்மிகு கவிஞர் வாக்கை
நுண்ணிய மதியால் கேட்கும்
நுட்பநல் மக்காள் வாழ்க
அன்னையின் புகழைப் பாட
அறிந்துள அறிவை எல்லாம்
அன்பினால் ஒன்றாய்க் கூட்டும்
அரங்குள கவிஞர் வாழ்க
கோயிலைக் கட்டும் நம்மோர்
கருவறை வெளியில் தானே
நோயினை நீக்கிய நம்மின்
நிலைபுகழ் இசைக்கி அம்மன்
மாபுகழ் கோயில் கட்டி
மாட்சியாய் உள்ளே உள்ளான்
நாபுகழ் இசைக்கி அம்மன்
நன்நிலை அருளே போற்றி
தகுதியைக் கண்டு நாளும்
தக்கோரைத் திரட்டி நன்றாய்
மிகுதிநிலை உணர்ந்து எண்ணும்
மீட்டெழும் மக்கள் சக்தி
பகுதியென பக்கம் எல்லாம்
பக்தியெனும் பெரும் பேற்றால்
விகுதியென நற்பண்பு நாட்டி
விரிந்துஎழும் நற்றாயின் சக்தி
இல்லோர் இருப்போர் எலாம்
இன்றுலகில் இணைந்து வாழ
தொல்லைகள் மறந்து வாழ்க்கை
தடத்தினிலே காணும் சக்தி
பல்லக்குத் தூக்கும் மாந்தன்
பல்லிளித்து கீழே வீழா
தொல்லுலகம் நிமிர்ந்து வாழ
தோன்றிஎழும் உறவுச் சக்தி
நாட்டிலிளோர் ஒன்றாய்க் கூடி
நயத்தகு புகழும் வாழ்வை
போட்டியின்றி இணைந்து வாழ
பொன்னான அன்பு சக்தி
காட்டில்வாழ் மாக்கள் போன்றே
கருணையை மறந்து நம்மில்
கேட்டினை என்று,ம் நாடா
கேவலம் போக்கும் சக்தி
மீட்டெழும் நாதம் போன்றே
மிகுந்திடும் பொருளை ஈந்து
ஓட்டிடும் வறுமை நீக்கி
ஒற்றுமை நாட்டும் சக்தி
பாட்டுளநல் பொருளை எண்ணி
பண்புளநல் மாந்தர் ஆக்கும்
தோட்டமும் மலரும் பூவாய்
தோன்றிய மக்கள் சக்தி
வழிவழி நம்மின் முன்னோர்
வாஞ்சையாய் நம்மைக் கூட்ட
பழியிலா வாழ்க்கை வாழ்ந்து
பாண்மையை செப்பும் சக்தி
விழியது இமையைக் காக்கும்
விண்மீனை வானம் தாங்கும்
உளியது செதுக்கும் வாழ்க்கை
உள்ளொளி வழங்கும் சக்தி
நல்லதை நினைத்து என்றும்
நாளெலாம் உழைத்து வாழ்தல்
அல்லதை நீக்கி ஆன்றோர்
அறவழி ஆற்றும் சக்தி
முள்ளுமே மலரைக் காக்கும்
முறைவாழ்க்கை குடியைக் காக்கும்
சொல்லுமே பாவைக் காக்கும்
சொந்தமாய்க் காக்கும் சக்தி
GREAT MY DEAR FRIEND!! GREETINGS FROM NORWAY!!!
ReplyDelete