Saturday, March 29, 2014

சிலம்பு மேகலை – ஓர் ஆய்வு


சென்னை புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் 16-3-2014 அன்று சிலம்பு மேகலை – ஓர் ஆய்வு எனும் தலைப்பில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)


           தமிழ்நாடு தேர்வாணையத்தில் அதிர்காரியாகப் பணியாற்றி ஒய்வுக்குப் பின் தமிழ் இலக்கியமன்றம் அமைத்து செம்மையான கூட்டங்களை நடத்தும் ஐயா மகாராசன் அவர்களே ஐயாவோடு  இணைந்து தொண்டாற்றும்  கவிஞர் அ.வே.செல்லப்பனார் அவர்களே ஆய்ந்தறிந்த சான்றோர் பெருமககள் புலவர் கோ. பார்த்தசாரதி புலவர் தட்சனாமூர்த்தி பேராசிரியர் தங்கவேல் அண்மையில் அங்கொவாட் சென்று இப்பகுதிவாழும் அருமைச் சகோதரர் இலக்குவனார் திருவள்ளூவன்  நிகழ்வுக்குட் தலைமைதாங்கும் திருவை பாபு சிறப்பாக கவிதை பாடிய கவிஞர் பெருமக்களே மதிய வெலையில் இலக்கிய உரை கேட்க அமர்ந்திருக்கும் அன்பர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண்வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன்.மகாராசன் அவர்கள் என்னிடம்  தலைப்புக் கேட்டார் நான் உலகளாவிய தமிழர்கள் பற்றிப் பேசுகிறேன் என்றேன். அடுத்த நாள் சிலம்பு மணிமேகலை பற்றிப் பேசுங்கள் சரி என்று கூறி தங்கள் முன் உள்ளேன். நம் இலக்கியங்களை நாம் மீண்டும் மீண்டும் படிப்பதும் கேட்பதும் இன்பம்தானே.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்

       ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தமிழகத்தில் பகுத்தறிவுக்கு வித்திட்ட காப்பியம். நிமித்தகன் தம்பிக்கே அரசாளும் தகுதி உண்டு என கூறியவுடன் தம் அண்ணன் செங்குட்டுவனுக்கே தகுதி உண்டென துறவறம் மேற்கொண்டு இன்றும் தமிழர்களை அழிக்கும் மூடப் பழக்கமாம் சோதிடத்தை அன்றே புறம் தள்ளி இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம். கண்ணகிக்கு கற்கோவில் கட்டினார் தமையன் சேரன் செங்குட்டுவன் சொற்கோயில் கட்டினார் இளவல் இளங்கோவடிகள்.

        காப்பியத்தின் மாந்தர்கள் கோவலன் கண்ணகி மாதவி என இன்றும் படிப்போர் வியக்கும் வண்ணம் தமிழர்களின் கலை ஓவியமாக மிளிர்கிறது. கற்புக்கரசி கண்ணகி, இளங்கோவடிகள் புகழ்உருவச் சிலைகள் இன்றும் அழியா ஓவியமாக சென்னைக் ப்கடற்கரையில் தமிழரின் பெருமையை பறைசாற்றுகின்றன.

         நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றது இந்நூல்.ம கலைஞர் பூம்புகார் திரைப்படம் உருவாக்கி அனைத்து மக்களிடமும் கண்ணகியின் பெருமையைக் கொண்டு சென்றார் பூம்புகார் கடற்கரையில் சிலப்பதிகாரத்தின் அழியா ஓவியமாக சிலப்பதிகார காட்சிகளை உருவாக்கியுள்ளார்.இன்றும் அழியாக் காவியம் ஓவியமாக உள்ளது.

         காலத்தால் முற்பட்டதும் மிகவும் உலக இலக்கியங்களில் உயர்தரமான இலக்கியம் சிலப்பதிகாரம். அரண்மனைக் காப்பியங்களுக்கு மாறாக துன்பம் நிறைந்த சூழலில் சிக்கித் தவிக்கும் எளிய மக்களின் காப்பியமாக மக்கள் காப்பியமாக மிளிர்கிறது சிலப்பதிகாரம்.
பண்டைய தொல்காப்பிய காலஒழுக்கமும் சங்ககால ஒழுக்கமும் நீக்கம்ற நிறைந்த காப்பியம் சிலப்பதிகாரம்..

         சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் மூவேந்தர் காப்பியமாக உருவாக்கியுள்ளார். நடுகல்காதையில்

        அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து, செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலம் காவல் மன்னவர்க்கு அளித்து வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை வடதிசைமன்னவர் மருங்கின்அறியக்
குடதிசை வாழும் கொற்றவர்க்கு அளித்து” (207-217)

         செங்கோல் வழுவாது ஆண்டால்தான் கற்பு சிறக்கும் என சோழன் வாயிலாகவும்,செங்கோல் வழுவினால் உயிர் வாழமாட்டார்கள் என பாண்டியன் வாயிலாகவும், வேந்தர்கள் தாம் சொன்னசூளுரையை முடித்தாலன்றி சினம் நீங்கார் என்பதை வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாள் என்பது பாடல்.

          இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் புகார் நகரில் உள்ள மருவூர்ப்பாக்கம் பகுதியைப் பற்றிப் பாடியதை நோக்குங்காள் அந்நாளைய தமிழகத்தின் சிறப்பை உணரலாம்.

“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனார் இருக்கையும்,,
கலம்தரு திருவின்புலம்பெயர்மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் கண்ணமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வளர் திரிதரு நகரவீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண வினைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் (9-27)

         பாடலில் அழகிய யவனர் (சீனர்,அரபு நாடுகள் கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளிநாட்டவரை யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடுவர்) இருக்கைகள்,நறுமணப் பொருட்கள், பூவும் புகைகும் பொருளும் கூவி விற்கும் தெருக்கள்,பொன்னும். முத்தும்,மணியும், அலங்கார உடை வகைகள்,உண்ணும் பொருட்கள், மீன், இறைச்சி,உப்பு, வெற்றிலை என பல்வேறு பொருள்கள் விற்கும் பகுதிகள் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மருவூர்ப்பாக்கத்தில் இருககும் இடங்கள் என பாடியுள்ளார்.

     மனையறம் படுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை உச்சநிலையில் பாடியுள்ளார்.கோவலன் கண்ணகியை வாழ்த்தும் பாடலில்

”மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடப் பிறவா மணியே என்கோ அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி” (2.73-81)

         என இல்லறத்தில் கோவலன் தன் மனைவி கண்ணகியை பாடும் பாடல் இருவரின் அன்பின் பிணைப்பை இளங்கோவடிகள் நயம்படக் கூறியுள்ளார்.
கோவலனின் இசை ஆடற்கலையில் தேர்ச்சி பெற்றவன் என்பதை அழகொளிரப் பாடுகிறார்

கோவலன் கையாழ் நீட்ட அவனும                                                                    
காவிரியை  நோக்கினவுங் கடற்காணல் வரிப்பாணியும்
மாவிதன் மனம் மகிழ வாசித்தல் தொடங்குமன்
பாணரோடு பாணராகக் கலந்து பாடும் பண்பு  கோவல்னுடைய பரந்த உள்ளத்திற்கும் வேற்றுமை காணா கலைஉள்ளத்தையும்  தெரிவிக்கிறது.
மாதவியின் ஆடற்பண்பை மிகச்சிறப்பாகப் பாடுகிறார்.

தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழ்கும் என்றிக்
கூறிய முன்றின் ஒன்று குறை படாமல்
ஏழாண்டு இயற்றியோர் ஈராண்டில் சூழ்கழன் மன்னற்கு காட்டல் வேண்டி
 எனும் அடிகள் மாதவியின் ஆடல் பாடல் அழகு மூன்றிலும்  குறைபடாத அன்னமென் சாயல் மடந்தையை அனைவரும் அறிவர். இவ்வளவு சிறந்த மயிலின் ஆடலை காணாத காளையர் கலையுள்ளம் பெறாத ஏழையர். அரங்கேற்ற நாளில் கோவலன் காணச் சென்றதற்கு இதை விட் என்ன சிறப்பு வேண்டும்.

மாதவி எங்ஙனம் இன்பம் அளித்தால் என்பதை அடிகள் கூறுகிறார்.

இல்லார் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ்சேக்கைப் பள்ளியுட் பொலிந்து
செந்துகிர்க் கோவை வென்றேந்து அல்கூல்
அந்துகில் மேகலை அசைந்தன் வருந்த
நிலவுப் பயன்கொள்ளும் நெடு நிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதற்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலங் கொண்ட மாதவி

        முல்லையோடு மல்லிகையும் ஒழிந்த தாழிக் குவளை முதலிய பல பூவும் அவிழ்ந்த பள்ளியிடத்தே பொலிவு பெற்று அழகு ஏந்திய அல்குல் தன்னிடத்தில் துகில் செல்லப்பட்டுச் செந்துகிர்க் கோவையாகிய மேகலை அசைந்தனவாய் இரங்கா நிற்க நிலாவினது பயனைக் கொள்ளுதற்கு காரணாமாகிய உயர்ந்த நிலா முற்றத்தி கண்ணே தன் காதலனுக்கு ஒருகால் கலவியையும் மறுகால் புலவியையும் மாறி மாறி அளித்து எதிரேற்று முயங்கி அம் முயக்கத்தால் முன் குலைந்த ஒப்பனையைப் பின்னும்  வேட்கை விளைக்கும் கோலமாகத் திருத்திய மாதவி என்பது அடியார்க்கு நல்லார் உரையாகும்.

வேந்துறு சிறப்பின் விழுச் சீரெய்திய
மாந்தளிர்மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து
வாலாமை நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம் நல்லுரை நாட்டுதும்

கோவலனுக்கும் மாதவிக்கும் ஒரு பெண்குழந்தை பிறந்ததைக் கூறுகிறார்.
கோவலன் மாதவியை விட்டு பிரிந்த பின்னர் கண்ணகியை அவள் எவ்வாறு உயர்வாகக்  கருதினாள் தன் மகள் மணிமேகலையை மாபெரும்  பத்தினியின் மகள் கண்ண்கியின் மகள் என்று கூறுவதையும் கேட்கிறோம்.

     கண்ணகியுடன் இணயற்ற வாழ்க்கை வாழ்ந்த கோவலன் மாதவியிடம் சென்ற பிறகு கண்ணகியின் நிலையை அந்திமாலைச்சிற்ப்பு காதையில் வரும் பாடலில்

”அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை மூன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினல்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கெண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல்
நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி” (47-57)

என காலில் சிலம்பு, இடையில் மேகலை, மார்பில் குங்குமம்,காதில் குழை,கண்களில் மை,நெற்றியில் பொட்டு ஏதும் இல்லாமல் சிரிக்கும் அழகை இனிக் கோவலன் அகாணமுடியாத துயர நிலையில் இருந்ததை நயமாகப் பாடியுள்ளார். கணவனைத் தேடிச்செல்லும் கண்ணகி பற்றி ஆயர் குலப் பெண் மாதிரிக்கு கவுந்திஅடிகள் சொல்வதாக வரும் பாடலில்

”கற்க்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு”

என கண்ணகி போன்ற பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் ,வளம் கொழிக்கும் செங்கோலும் நீதிதவறாமல் இருக்கும் எனப் பாடியுள்ளார்.

குன்றக் குறவையில் வேங்கை மரத்தின் நின்று வானுலகம் சென்ற கண்ணகியைப் பாடுவதாக பாடும் பாடும் பாடலில்

”சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே நிறங்கினர் அருவிப் பறம்பின் தழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழழ் கீழ்ஓர் தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயங்குமின் குறிஞ்சிப் பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்மின் காப்புக்கடி நிறுமின் பரவலும் பரவுமின் விரைவுமலர் தூவுமின் ஒருமுலை இழந்த நங்கைக்கு[ப் பெருமழை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”

என கற்புக்கரசி கண்ணகியை தெய்வமாகவே குன்றவர் மொழியாக இளங்கோவடிகள் பாடிச் சிறப்பிக்கிறார்.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண்மாகச்
சிலப்திகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்
என்று இளங்கோவடிகள் கூற சாத்தனார்

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரிய
அடிகள் நீரே அருளுக

என ஊக்கமளிக்க காப்பியம் ஒப்பற்ற காப்பியமாக சிலப்பதிகாரம்  வாழ்கிறது.

சாத்தனாரின் மணிமேகலை

ஐம்பெரும்காப்பியங்களில் சிலப்பதிகாரம் சிந்தாமணி வளையாபதி இம்மூன்றும் சமணக் கொள்கையை வலியுறுத்தும் காப்பியங்கள். மணிமேகலை குண்டலகேசி புத்த சமய்அக் கொள்கைகளை வலியுறுத்தும் காப்பியங்களாகும். இன்று நமக்குக் கிடைத்திருப்பவை சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலையாகும். சிலப்பதிகாரம் பிறசமய வெறுப்பின்றி சமண சமய கொள்கையைக் கூறுகின்றது. மணிமேகலை பிறசமயங்களைச் சாடி புத்த சமயமே உயர்ந்ததெனக் கூறுகிறது.

மணிமேகலையில் உ:ள்ள கருத்துக்கள் கொள்கைகள் புத்தசமய தத்துவங்கள் தமிழ்கத்தின் நிலை தமிழரின் வாழ்க்கைமுறைகள் அரசியல் போன்றவற்றை காப்பியம் படிப்போர் உணரலாம்.

மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் அன்றே சாதிவேற்றுமையைக் கண்டிக்கிறார். அக்காலத்திலிருந்த வருண பேதத்தையும் காலக் கண்ணாடியாக காட்டுகிறார்.  மணிமேலையை 30 காதைகளாகத் தந்துள்ளார் சாத்தனார்.

அங்கைப் பாத்திறம் ஆபுத்திரன் பாற்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
மற்றப் பாத்திரம் மடக்கொடி ஏந்திப்
பிச்சைக் க்வ்வூர்ப்  பெருந்தொரு அடைந்த்தும்
பிச்சையேற்ற பெய்வளை கடிஞையிற்
பத்தினிப் பெண்டிற் பார்த்துனர் ஈத்த்ததும்
காரிகை நல்லாள் காய சண்டிகை வயிற்று
ஆனைத் தீக்கெடுத்து அம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே
கொங்கலர் நறுந்தார்க் கோமகள் சென்றதும்

அகங்கையிலிருந்து பிச்சைப் பாத்திரத்தை ஆபுத்திரன் கலைமகள் அளித்தவாறும் மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் அப்பாத்திரத்தை கையிலேந்தி பிச்சையேற்றர்க்கு அந்நகரின் பெருந்தெருவினை அடைந்ததும் பிச்சையேற்ற மணிமேகலையின் தெய்வக் கடிஞையிற் கற்பிற்சிறந்த ஆதிரை நல்லாள் பலருக்கும் பகுத்துண்ணும் உணவை இட்டதும் அழகின் மிக்க மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சைமகளின் வயிற்றிலுள்ள அனைத்தீ என்னும் தீராப் பசியை அழித்து உலகவறவி எனெனும் ஊரம் பலத்தையடைந்ததும் தேன் பொறுந்திய நறிய மலர் மாலையுடைய அரச குமரன் மணிமேகலை உஅல்கவறவியை அடைந்தாள் என்று அங்கு சென்ற்தும் கூறுகிறார்.

சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றியதும், அந்நாளைய தனிதனி சுடுகாட்டு சாமாதிகள் பற்றியும் காலக் கண்ணாடியாக விளக்குகிறார்.. காப்பியத்தில் அக்கால சுடுகாட்டை விளக்கும் சில வரிகள்

சுடுவோர் இடுவோர் தொடு-குழிப்படுவோர்
தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கழிப்போர்
இரவும் பகலும் இழிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சுமையும்
எஞியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி
நெஞ்சு நருக் குறூஉம் நெய்தல் ஓசையும்

பிணங்களைச் சுடுவோரும் வாளையிடுப் போவோரும் தோண்டப்பட்ட குழியில் இடுவோரும் தாழ்ந்த இடங்களி அடைத்து வைப்போரும் என  சக்கரவாட்டக் கோட்டத்தைப்பற்றிப் பாடுகிறார் .
முற்பிறப்பு நம்பிக்கை இருந்ததையும் மணிமேகலை படிப்போர் உணரலாம் சில வரிகள்

இன்னும் கேளாய் இலக்குமி  நீ நிம்
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்கநாட்டு அகவயின்
கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டணன்

என மணி மேகலா தெய்வம் தோன்றி இரகுலனே உதய குமாரனென்றும் தாரையும் வீரையுமே மாதவியும் சுதமதியும் என்று கூறி  மூன்று மந்திரங்களை கூறி மற்ந்தனள்.

அமுத சுரபி வரும் நாள் நட்சத்திர நம்பிக்கையும் அந்நாளில் உள்ளது அறியலாம்.

ஈங்கு இப்பெரும் பெயர்ப்பீடைகை முன்னது
மாலருக் குவளையும் நெய்த்லு மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி
இருதுஇள வேனிலில் எரிகதி இடபத்து
ஒருபதி மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போத்தித்த்லை வனோடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன் கை அமுத சுரபி எனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

இருபத்தி மீன்களுள் கார்த்திகை முத்லாகாக் தொடங்கும் பதின்மூன்றும் கழிந்தபின் பதிநான்காவது இருபத்தேழு நடுமீனுமாகிய விசாகையன்று அமுதசுரபி வெளிவரும் எனக் கூறுகிறார்

பொய்யாமொழியார் வள்ளுவர் குறளை சாத்தனார் தம் காப்பியத்தில் கையாளுகிறார். மருதி என்ற பெண்ணின் குரலாக வரும் வரிகள்

மாபெரும் பூதம்  தோன்றி மடக்கொடி
நீகேள் என்றே நேரிழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழா அவள் கொழுநன் தொழுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும்  பெருமழை என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்

மணிமேகலை அட்சயபாத்திரம் மூலம்உணவு வழங்குவதையே மையமாக வைத்து வைத்து உன்னதக் காப்பியம். ஆபுத்திரன் பிறப்பும் வறுமையும் வறுமையிலும் தாம் பெற்ற உணவை எழைஎளியோருக்கு வழங்கிய தன்மையும் பின் அட்சய பாதிரம் பெற்று பசித்தோர்க்கு  உணவு வழங்கி பின் மணிமேகலா தெய்வம் க்கூற்றுப்படி அட்சயபாத்திரம் மணிமேகலை பெற்று உலகப் பசியை நீக்கிய ஒப்பற்ற காப்பியம். சிறைக் கோட்டத்தையும் அறக்கோட்டமாக ஆக்கிய மாண்பை மணிமேகலையின் மாண்பை செப்புகிறது மணீமேகலை காப்பியம்.

அருமைப் பெருமக்களே காப்பியம் முழுமையும் உரை நிகழ்த்துவோர் முன்னிலையில் யான் கற்றவற்றை தங்கட்கு கூறியுள்ளேன் தமிழ் இலக்கியங்களைப் பயிலுங்கள் நம் தலைமுறை செழித்து வாழும் என்று கூறி விடை பெறுகிறேன்.

திருக்குறள் சான்றோன் திருக்குறள் பாட்கரன் அவர்கட்கு முத்துவிழா


(1-3-2014 அன்று சென்னையில் திருக்குறள் சான்றோன் திருக்குறள் பாட்கரன் அவர்களின் முத்துவிழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

           திருக்குறள் சான்றோன் திருக்குறள் பாட்கரன் அவர்கட்கு முத்துவிழா என்பது மகிழத்தக்க வாழ்க்கையாகும். கல்லூரித்துறை இணை இயக்குநராக இருந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய பெருமகன். தம் மகன் பொறிஞர் கருணாகரன் மறைவுக்குப் பின் தம் இல்லத்தையே திருக்குறள் நூலகமாக மாற்றி உலகத்திருக்குறள் தொண்டை திறம்பட ஆற்றுகிறார். இந்த நிகழ்வுக்கு நீதியரசர் அவர்கள் பங்கேற்று அவரை வாழ்த்தி வணங்கி பெருமைப் படுத்தியுள்ளார். தலைமைதாங்கும் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க இராமலிங்கம் அவர்கள் திருக்குறள் கருத்துக்களைக் கூறி நெகிழ வைத்துள்ளார். அழைப்பிதழ் யாருக்கும் கிடைக்கா நிலையிலும் பெருமக்கள் திரளாக கூடியுள்ளீர்கள் இதுவே அவரின் திருக்குறள் தொண்டிற்குக் கிடைத்த சிறப்பாகவே கருதுகிறேன்.

         இன்று நாம் நிற்கும் இந்த அண்ணாநகரில் உள்ள கட்டிடத்தின் மதிப்பு பல கோடியைத்தாண்டும் இருப்பினும் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் திருக்குறளுக்காக ஒப்புவித்த பெருமகனை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

         துன்பம் உறவரினும் துணிவாற்றி செய்க
        இன்பம் பயக்கும் வினை (669)

என்ற குறளுக்கு சான்றாக வாழ்பவர் திருக்குறள் சான்றோன் பாட்கரன் அவர்கள்.. யான் மலேசியா சென்றிருந்த பொழுது திருக்குறள் கருணாகரன் நூலகத்தை அறிந்த அருளாளர் ஈப்போ நடராசன் அவர்கள் சென்னை வந்து தம் துணைவியரோடு இந் நூலகத்தைக் கண்டு தம்மை மனமுவந்து உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர். ஐயா பாட்கரனின் பேருழைப்பு உலப் புகழ் பெற்றுவருவதை குறிப்பிடுவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் தமிழ்த்தொண்டுகளுக்கு ஊக்கமளிப்பதிலும் திருக்குறள் பாட்கரனார் முன்னணியில் உள்ளார். அருமைத் தொண்டர் பாவாணர் கோட்ட நெடுஞ்சேரலாதன் தந்தை பெரியாரைப் பற்றி ஐயா அவர்கள் உரையாற்ற முரம்புக்கு அழைத்தமையையும் அரிய பொழிவையும் போற்றி மகிழ்ந்தார். அவர் சென்னைவந்தபொழுது முரம்பு பாவாணர் கோட்டத்திற்கு பல பெருமக்களிடம் அழைத்துச் சென்று நிதிபெற்றுத் தந்தமையும் நன்றியுடன் குறிப்பிட்டார்.

ஐயா அவர்ளிடம் யார் வந்தாலும் திறம்பட உதவுவதில் தீரர். அண்மையில் யானும் பேராசிரியர் அவர்க்ளும் ஆற்காடு திருக்குறள் மண்டல மாநாட்டில் பங்கேற்றோம். திரும்பி வரும்போது இரவு நேரமாகையால் பேருந்து கிடைக்காமல் கடினப்பட்டு வந்தோம். தம் முதிய வயதிலும் பல்வேறு இன்னல்களுக்கிடையில் சொற்பொழிவாற்றி திருக்குறள் நெறிபரப்பும் சான்றோன் பேராசிரியர் பாட்கரன் அவர்கள்.

என் இளவல் முனைவர் ஆண்டவர் அவர்கட்கு சப்பானில் பங்கேற்க ஒரு அழைப்பு வந்தது. அந்த மாநாட்டில் ஆண்டவர் பங்கேற்க உற்றுழி உதவி இளைஞர்களை ஊக்குவிக்கும் பெருமகன் பேராசிரியர் பாட்கரன்.

சிங்கையிலே திருகுறள் சான்றோன் முனைவர் இ.வி, சிங்கன் அவர்கள் அரும்பெரும் தொண்டாற்றிய பெருமகன். உலகம் முழுமையும் திருக்குறள் உரை கதை மொழிபெயர்ப்பு என சாதனை புரிந்த பெருமகன். சிங்கை செராங்குன் பகுதியில் உள்ள அவர்து நிறுவனத்திற்கு சிங்கை செல்லும்போதெல்லாம் செல்வேன். அங்கு திருக்குறள் மொழியாக்க நூல்கள் பலவற்றைக் கண்டேன். சீனத்து மொழிபெயர்ப்பை கருணாகரன் நூலகத்தைக்கூறி கேட்டிருந்தேன். ஒரு படி உள்ளதாகவும் அடுத்து தமிழகம் வரும்போது தருவதாகக் கூறினார். அதற்குள் அவர் காலமாகிவிட்டார்.

நான் தமிழாகரர் ஆறு அழகப்பனாரோடு பர்மா சென்றிருந்தபோது அவர் திருக்குறள் பர்மீய மொழிபெயர்ப்பை வைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம் திரட்டி இந்நூலகத்தில் வைக்க ஒத்துழைப்பை நல்குவேன்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
        இடும்பை படாஅ தவர்    (623)

       என்ற குறளுக்கு சான்றாக இடும்பையை வென்று வாழும் பேராசரியர் பாட்கரனார் நூற்றாண்டைக் கடந்து வாழ நெஞ்சாரப் போற்றுகிறேன்.

Monday, February 3, 2014

சிங்கப்பூர் சூரோங்க் கிழக்கு நூலகத்தில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை


 சிங்கை  சூரோங்க் கிழக்கு நூலகத்தில் 15-12-2013 அன்று கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை

   மலெசியாவில் பாரதியார் விழாவிற்காக எனது  தலைமையில்  12 பெருமக்களை பெருமக்கள் பங்கேற்றனர். அதில் நாங்கள் இங்கு சிங்கப்பூரில் வந்து இந்நிகழ்வில்  பங்கேற்பது மகிழ்வைத் தருவதாகும். ஐயா அறிஞர செவ்வியன் அவர்களின் மருகர் பெருவை இளங்கோவன் அவர்களின் பேரன்பு பூரிப்பைத் தருகிறது. சென்னையில் செவ்வியன் ஐயா அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவை அண்ணாமலை பல்கலைக் கழக பழைய மாணவர் சஙகத்தில் மிகச்சிறப்பாக நடத்தினார்கள். அந்நிகழ்விலேயே மாமா அவர்களின் தமிழ்த் தொண்டிற்கு மருகர் இளங்கோ ஆற்றிய பணிகள் எம்மை வியப்பில் ஆழ்த்தின. கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் சென்னையில் பல காலம் இருந்து தற்போது சிங்கை வந்துள்ளார்கள் எந்த இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் சென்னையில் காண்பது வழக்கம். தற்போது சிங்கையில் பெரு இளங்கோ அவர்களோடு இணைந்து இந்கழ்வை நடத்துகிறார். பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அண்மையில் அவரது வலத்தளத்தில் ஒரு கவிதையை இரசித்து அக்கவிதையை தமிழ்ப்பணியில் வெளியிட கொடுத்து வந்துள்ளேன். அதில் ஒரு பகுதி

சிந்தனைத்தேன் ஊறுவதை
சிந்தித்தே  மாறுவதை
சந்தனம்போல் கமலவைத்துக் காட்டு – அதுவே
சந்ததியை மகிழவைக்கும் பாட்டு

என மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். அப்பெருமகனை இயல்பாகாவே இந்நிகழ்வில் காண்பது இரட்டிப்பு நிகழ்வு. பெருங்கவிஞர் கவிஞரேறு சிங்கையில் எழுத்தாளர் சங்கத்தை நிலைநாட்டிய அமலதாசனார்,, கவிஞர் இக்பால் யான் சில ஆண்டுகளுக்கு முன்புஎழுத்தாளர் சங்க நிகழ்வில் கவி பாடி என்னிடம்  கவிதைக்கு பரிசுபெற்ற சீர்காழி செல்வராசு போன்ற பெருமக்களை காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நிகழ்ச்சி நடைபெறும் சூரோங் கிழக்கு நூலகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. தமிழ் நிகழ்வு தகுதியான அரங்கில் ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களையும் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் திருமதி  நாயுடு அவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
நெடுஞ்சேரலாதன் அவர்கள் என்னை மறைமலையடிகள் விழாவிற்கு முரம்பு  அழைத்திருந்தார்கள் அதுபோது தாங்கள் அவசியம் மலேசியா வரவேண்டும் அங்கு வாழ் தமிழ் மக்களை சந்திக்க வேண்டும் என  வலியுறுத்தினேன். பாரதிவிழாவிற்கா  முடியாது அதானாலென்ன பாரதியின் சீடர்தானே பாவெந்தர் அவரைப்பற்றிப் பேசுங்கள் எனக் கூறி அவர்து துணைவியாரிடமும்  கூறி அவரை அழைத்துவந்துள்ளேன்.மலேசியாவில் மகாகவியைப் பற்றி அரியதொரு உரையாற்றினார். அதனுடைய பயண்தான் இன்று நாம் சிங்கையில் சந்திக்கும் சந்திப்பு.. சிங்கையில் அவரது அண்ணன மகன் மாரிமுத்து தன் சிற்றந்தையிடம் காட்டிய அன்பும் அர்வணைப்பும் இப்பயணத்தில் அவர் கண்ட சிறப்பாகும். உறவு வீழவில்லை என்பது மாரிமுத்து போன்ற பெருமக்களைக் காணும்போது பெருமைகொள்கிறோம். வில்லுப்பாட்டுக் கலைவித்தகர் அ. செல்லதுரை அவர்களும்  வருகைத்ந்துள்ளார். அவர் பாடல்களை கேட்டு மகிழ்ந்தீர்கள்.

பெருமக்களே உலகளவிய தமிழ் தமிழர் பற்றி பேச் பணித்துள்ளீர்கள். பிச்சினிக்காடு நேரம் மிகச் குறைவாக உள்ள காரணத்தால் விரைந்து முடிக்கக்கூறியுள்ளார். சிங்கையில் நேரத்தின் அருமையை அறிந்தவன் என்பதால் விரைந்து முடித்துவிடுகிறேன், இதோ என் கையில் உள்ள இந்நூல் யாதும் ஊரே உலகத்தமிழ் தமிழர் பற்றிய தொகுப்பாகும்ம். கற்றனைத்து ஊறும்  என்ற நூல் எழுதியுள்ளேன்  அதில் சிங்கையின் அருமை பெருமைகளெல்லாம் விவரித்துள்ளேன்.

மலேசியா தமிழ் தமிழர்களின் கொள்கலனாக உள்ளது, சிங்கை தமிழின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. கணினித் தமிழின் கோவிந்தசாமி  அவர்கள் தோன்றிய மண் சிங்கை மண்ணாகும். தமிழ் ஆட்சிமொழியாக எல்லா நிலைகளிலு,ம் உள்ளது மட்டற்ற மகிழ்சிக்குரிய ஒன்றாகும்.

மியான்மரில் தமிழர்களின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. தொழில் துறையிலும் ஆன்மீக கோவிலகளும் வளர்ச்சிபெற்றுவருகின்றன. பர்மா மண்ணிலே எனும் நூலில் விபரமாகத் தந்துள்ளேன்.

ஐரோபிய நாடுகளில்  ஈழத் தமிழர்களின் பேராற்றலால்  தமிழ் உலக மொழியாக வலம் வருகிறது, தொலைக்காட்சிகள் வானொலிகள் இதழ்கள் என தமிழிற்கு அணி  சேர்ப்பவை ஏராளம்.

அமெரிக்காவில் தமிழர்கள் செல்வச் செழிப்பாக உள்ளனர் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ச் சங்கங்கள் அமைத்து ஆண்டுதோரும் கூட்டுத் தமிழ்ச் சங்க மாநாடு நடத்திவருகின்றனர். சில ச்ங்கங்கள் மாத இதழ்கள் நடத்தி போட்டிகள் நடத்தி சிறப்பான பணிசெய்கின்றனர்.

கனடா தமிழர்களி பண்பட்டுக் களமாக உள்ளது. அண்மையில் சென்னைக்கு  வருகை தந்த துரைராசா அவர்கள் தமிழக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தோடு இணைந்து தமிழ் பட்ட வகுப்புகள் டொரோண்டோவில் பயில்கின்ற செய்தியைக் கூறினார். தமிழ் இதழ்கள் வானொலிகள் ஆலயங்கள் தொலைக்காட்சிகள் என தமிழ் சார்ந்த நிறுவனங்கள் கணக்கில.

நண்பர்களே காலம் கருதி  சுருக்கமாக முடிக்கிறேன். சிங்கையில் தங்களைக் கண்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். வணக்கம் 

Tuesday, January 28, 2014

மலேசியாவில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாமணி வா.மு. சே திருவள்ளுவர் ஆற்றிய உரை

(22-12-2013 அன்றுமலேசியாவில் ப்சிலாங்கூர் கிளப்பில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாமணி வா.மு. சே திருவள்ளுவர் ஆற்றிய உரை)

     மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வோரு அமைப்பின் சார்பில் பங்கேற்றுள்ள பெருமக்கள் அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். இந்நிகழ்வை பெரும் பொறுப்பேற்று நடத்தும்  மணிவிழா நாயகர் விக்டர் சுப்பையா அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பெருங்கொடை. நானும் என் தந்தையரும் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற மாநாட்டை நடத்தத் தத்தளித்தபோது எம்மோடு இருந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய பெருமகன். இப்பெருமகனை அறிமுகப் படுத்தி எங்களின் மன்றப் பணிகளுக்கு முதுகெலும்பாக செயல்படும் அண்ணன் டாக்டர் தருமலிங்கம் கொள்கிறேன்.

        மணிவிழாக் கண் ட நம் தலைவர் விக்டர் சுப்பையா அவர்கட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் உங்கள் கரவொலிகளுக்கிடையில் மாலையணிவித்து போர்த்தி மகிழ்ச்சியை தெருவித்துக் கொள்கிறேன்

இந்த நிகழ்வை  நடைபெற அரும்பாடுபட்ட அண்ணன் தருமலிங்கம் அவர்களின் பேருழைப்பை நேரில் கண்டவன். இந்நிகழ்வை பெரும் பொருளீந்து இந்த வெற்றிகரமாக நடத்தும் டாக்டர் சுப்பையா அவர்களும் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கியவர்கள். அருமைப் பெருமக்கள இராசாரத்தினம் ஐயா பெருமாள் மற்றும்  அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

தேர்தலை மிகச் சிறப்பாக நடத்திய தேர்தல் குழுத்தலைவர் இராமநாயகம் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கம்.  பொறுப்பேற்றுள்ள பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைப்புப் பேரவையை வழுப்படுத்தி தமிழ்மக்களின் வறுமையை நீக்கி தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் உணர்வையும் உருவாக்குங்கள் என்ற வேட்கையை தங்களிடம் பதிவு செய்கிறேன். பல்வேறு சங்கங்களைச் சார்ந்த உணர்வாளர்களைக் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன் இதுவல்லவோ வேற்றுமையில் ஒற்றுமை.

இந்நிகழ்வில் என்னுடைய யாதும் ஊரே நூலை அறிமுகம் செய்த ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.. மிகச் சிறப்பாக உலகமெங்கும் நான் கண்ட பெருமக்களையும் அவர்களின் அரிய தொண்டுகளையும் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட்டார்கள். ஒருங்கிணைந்த தமிழ் இயக்கங்களின் பேரவை சார்பில்  இந்நூல் வெளியிடுவது யாம் பெற்ற பேறு. வள்ளுவப் பெருமானின் ஒருகுறளை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.


பகச்சொல்லி கேளிர் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

நம்மில் உள்ள நன்மைகளைக் கூறி அனைவரையும் ஒன்றுபடுத்துங்கள். தீமைகளைக் கூறி பிளவுபடாதீர்கள். நட்பைப் பெருக்கி தமிழர் சக்தியை ஒன்று படுத்தி காலத்தை வெல்வோம். நன்றி வணக்கம்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றமும் நவரத்தினா குழுமமும் இணைந்து நடத்திய மகாகவி பாரதி விழா


பன்னாட்டுத் தமிழுறவு  மன்றமும் நவரத்தினா குழுமமும் இணைந்து நடதும் மகாகவி பாரதி விழா தமிழர்கள் தமிழ் உணர்வை நிலைநாட்டும் விழா. இவ் விழாவிற்கு அரும் பாடுபட்டு பெருங்கூட்டத்தைக் கூட்டியுள்ள ஆசிரியமணி மாணிக்கம் அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். ஒராண்டு காலத் திட்டம்.  தமிழ்கத்திலிருந்து யாரை அழைத்து வருவது என சிந்தித்து 11 பெருமக்களை அழைத்து வந்துள்ளேன். அனைவரும் தமிழ் தமிழருக்காக பாடுபடும் இயக்கவாதிகள்.தமிழ் தமிழர் மேம்பாட்டுக்காக பாடுபடும் அருந்தமிழ்ச் சான்றோர்கள்.

மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ
சென்றிடுவீரெட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

என்ற மகாகவி பாரதியின் பாடலுக்கு ஏற்ப தொண்டாற்றும் சிந்தனையாளர்கள்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்திற்கும் மலேசியாவிற்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. 1977 ஆம் ஆண்டு  தமிழகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஆசிரியமணி மாணிக்கம் தலைமையில் இங்கே அமர்ந்திருக்கும் கமலாட்சி ஆறுமுகம் இணையர் இராமநாயகம், மற்றும் பெருமக்கள் பலர் 36 ஆண்டுகளுக்கு முன்பு இளமைப்[ பொலிவோடு வந்திருந்த்தனர். நான் அப்போது 18 வயது வாலிபன். இப்பெருமக்களையெல்லாம் வரவேற்று உறவாடிய சிந்தனைகளெல்லாம் நெஞ்சில் நிழாலாடுகின்றன.

தற்போது தமிழ்கத்திலிருந்து மலேசியாவிற்கு வந்து நம் உறவுகள் பெருகி பன்னாட்டுத் தமிழுறவு மன்றப் பணி தழைத்தோங்குகிறது. சென்ற மாதம் இதே நட்சத்திர உணவகத்தில் தந்தையார் பெருங் கவிக்கோ அவர்கட்கு பேராக் மாநில தலைமையமைச்சர் 33ஆம் உலகக கவிஞர்கள் மாநாட்டில் உலகமாக் கவி வழங்கப்பட்டது. அதே மண்டபத்தில் மகாகவி பாரதி விழாவை நடத்தும் மாணிக்கம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மாண்பமை சாமிவேலு அவர்கள் உலகத்தமிழ்த் தலைவர்களில் தலைவர்களில் தலையானவர். இம் மாலேசியத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆற்றிய தொண்டு வராலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளது. அவருடைய தொண்டறத்தையும் கொடையறத்தையும் போற்றி மகிழ்கிறேன். சாமிவேலரின் சார்பில் பங்கேற்றுள்ள முன்னாள் துணையமைச்சர் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

மகாகவி பாரதி மனிதர்களை மட்டுமல்ல காக்கை குருவியையும் மற்ற அனைத்த உயிர்களையும் பாடிய பெருமான்.

காக்கை குருவி எங்கள் சாதி – நீள
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

இயற்கையையும்  சுதந்திர வேட்கையையும் பாடி களிப்புற்ற மகாகவி தமிழையும் தமிழர்களையும் வியந்து பாடியுள்ளார்.

 யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

தமிழுக்கு அணி சேர்த்த இலக்கியங்களையும் வள்ளுவர் கம்பர் இளங்கோ போற்றி தலைமுறைக்கு வழிகாட்டியுள்ளார் மகாகவி
..
பன்னாட்டுத் தமிழுறவு மன்றமோ நாங்கள் நடத்தும் இதழோ தொய்வின்றி நடைபெறுவதோ தங்களைப் போன்ற பெருமக்களே அரவணைப்பே என்று கூறி பங்கேற்ற பெருமக்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி காலம் கருதி விடைபெறுகிறேன்.


Sunday, December 8, 2013

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் தமிழ்மாமணி வா.மு.சே. .திருவள்ளுவர் தலைமையில் மலேசியாவில் ஈப்போ நகரில் மகாகவி பாரதியார் விழாவில் பங்கேற்கும் தமிழ்ச் சான்றோர்கள்.



1. தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.

42 காலமாக வெளிவரும் தமிழ்ப்பணி இதழின் ஆசிரியர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர். உலகளாவிய நிலையில் செருமணி, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஆறு மாநாடுகள் நடத்தி உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர்.உலகத் தமிழர்களின் சிந்தனைப்பெட்டகமாக மாநாட்டு மலர்களை தமிழுலகுக்கு வழங்கியவர். மிகச் சிறந்த கவிஞர் எழுத்தாளர் உரையாளர் பதிப்பாளர் இதழாளர். பயணம் கவிதை கட்டுரை ஆய்வு என 12 நூல்களின் நூலாசிரியர். தமிழ் தமிழர்  சிந்தனையில் தந்தையின் வழித்தடத்தில் உலகெங்கும் பயணித்த பண்பாளர். உலகெங்கும் இவர் பெற்ற விருதுகள் ஏராளம் இருப்பினும் தமிழ்த் தொண்டராக வாழ்வதையே பெரும் பேறாக எண்ணுபவர்.

2. புலவர் ஆ..நெடுஞ்சேரலாதன்.

தமிழாசிரியர் நெடுஞ்சேரலாதன் பாவாணர் கோட்டம் அமைத்தவர்.பாவாணருக்கு முழு உருவச்சிலை நுலகம் இதழ்ப்பணியகம் நூற்றாண்டுவளைவு அமைத்து ஆண்டுக்கு 23 கூட்டங்கள் நடத்தி வருபவர். தந்தைபெரியார்  பாவேந்தர் பாரதிதாசன் திருவள்ளுவர்  புகழ்பரப்ப அமைப்புகளை உள்ளடக்கி விழாக்களை நடத்தி வருபவர். பாவாணர் கண்ட உலகத்தமிழ்க் கழகத்தில் மாநிலப் பொருளாளார்.முதன்மொழி இதழ் ஆசிரியக்குழு உறுப்பினர். பாவாணரியல் எனும் முத்திங்களிதழின் ஆசிரியர். பாவலர் நூலாசிரியர் சொற்பொழிவாளர் கட்டுரையாளார் என பன்முக சிந்தனையாளர்.

3. கவிஞர் செம்பை சேவியர்

திராவிட இயக்கத்தின் தீரர். இலக்குவனார் இலகியப் பேரவை நிறுவி மாதம் தோறும் இலக்கியாவிழா நடத்தி ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் பொன்மனத்தர். மிகச் சிறந்த நூலாசிரியர் கவிதை கட்டுரை என 14 நூலகளை வெளியிட்டுள்ளார். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற   மலேசியா 6 ஆம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்கியவர். பெருந்தலைவர் காமராசரிடம் கவிதைக்கான முதற்பரிசு பெற்ற பெருமைக்குரியவர்.

4 புலவர். உ. தேவதாசு.

தமிழ் இலக்கியங்களைக் கற்று பெரும்புலவராக தமிழகத்தில் வலம் வருபவர். இலக்குவனார் இலக்கியப்பேரவையின் செயலர். மிகச் சிறந்த கவிஞர். கம்பராமயண தொடர் சொற்பொழிவு ஆற்றியவர். அம்பத்தூர் கம்பன்கழக ஆட்சிமன்ற உறுப்பினர். காரைக்குடி கம்பன் கழக பவள விழாவில் கட்டுரைப்போட்டியில் முதற்பரிசு பெற்றவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற   மலேசியா 6 ஆம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்கியவர்.

5. முனைவர் க. பன்னீர்செல்வம்

மாநில மத்திய அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பெருமைக்குரியவர். பொம்மலாட்டக் கலைஞர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொறுப்பாளர். அறி.வியல் இயக்கப் பொறுப்பாளர். 9 நூல்களின் நூலாசிரியர். . பன்னாட்டுத் தமிழுறவு மன்ற   மலேசியா 6 ஆம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்கியவர்.பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் பங்கேற்றவர். தாய்லாந்து பாரதியார் விழாவில் பங்கேற்று கவி பாடியவர். தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றும் தூய தொண்டர்.

6. கவிஞர் சுந்தரமூர்த்தி

பள்ளித்தலைமையாசிரியராகப் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கியர். தமிழ்கத்தின் பல்வேறு அமைப்ப்புகளில் சிறப்பு விருது பெற்ற வர். மிகச்சிறந்த கவிஞர் தமிழகத்தின் பல்வேறும் இதழ்களில் இவர் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சமூகப் பணிகளில் பணியாற்றி மனித நேயராகத் திகழ்பவர்
.
7. தலைமையாசிரியர் அ .செல்லதுரை

பாவாணர் கோட்ட அறக்கட்டளையின் அறங்காவலர். அறிவொளி இயக்கக்கருத்தாளர். கலைக்குழு தலைமையாளர்.கிராமிய கலைஞர்கள் சங்கச்செயலாளர். அறிவியல் இயக்கத் துணைத்தலைவர். நாட்டுப்புறப் பாடல்களை  இயற்றிப் பாடுபவர். நடிப்பு  பேச்சு வில்லிசைப் பாடும் திறன்மிக்கவர்.

8. புலவர் கு. துரைராசு

தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த பேச்சாளர் எழுத்தாளர்.. வானொலி உரை, பட்டிமன்றம் நாடகம் சொற்பொழிவு தொலைக்காட்சி நிகழ்வுகளில்  பங்கேற்றவர்.மும்மதமும் சம்மதம் எனும் தலைப்பில் 5 பாகங்கள் எழுதிய நூலாசிரியர். திருக்குறள்சீர்பரவுவார் பட்டம் பெற்றவர். தன் மகளை திருக்குறள் கவனகராக்கி திருக்குறள்மணி விருதுபெற பயிற்சி கொடுத்தவர். திருக்குறள் பேரவையின் திருக்குறள் பட்டம் பெற்றவர்.

9.  மனிதநேயமாமணி அ. சேதுராமன்.

இந்திய தொடர்வண்டித் துறையில் நிலைய அதிகாரியாகப் பணியாற்றி விருதுகள் பலபெற்றவர். தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகள் ஏற்று தொழிலாளர் நலம் பெணுபவர். மதுரையில் நடைபெற்ற பன்னாட்டுத் தழிழுறவு மன்ற வெள்ளிவிழா மாநாட்டில் பெரும்பங்காற்றியவர். சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் எனும் குறளுக்கு சான்றாக வாழ்பவர்.

10. இலக்கியத்தேனீ கவிஞர் சு. வாசு

இந்திய பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பாங்காக்கில் உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்றவர். இந்திய சமாசுவாடி கட்சியின் தமிழ்நாட்டின் மாநில பொதுச்செயலாளர்.தலைவர் முலாயாம் சிங் யாதவின் வாழ்கைவரலாற்று நூலை எழுதி உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேசு யாதவ் திருக்கரத்தால் வெளியிட்ட  பெருமைக்குரியவர். மலேசியாவில் 10 ஆம் உலகப் பண்பாட்டு மாநாட்டில் பங்கேற்று உலகப் பொருளாதாரம் பற்றி உரையாற்றியவர்.

11. நடிகர் வா. இராசு

  முன்பேர வர்த்தகத்தில் முன்னணி ஆலோசகராக பணியாற்றுபவர் செல்லமே, வால்மீகி போன்ற படங்களில் நடித்தவர். குறும்பட ஆலோசனைக் குழுவில் பொறுப்பு வகிப்பவர்.இவர் நடித்த ஸ்டேட்டஸ் என்ற குறும் படம் இந்திய சிறப்பு விறுது பெற்றுள்ளது.

12.  ஆசிரியை. து. அங்காள ஈசுவரி

நடுநிலைப்பள்ளி ஆசிரியர். முதுகலைப் பட்டம் பெற்றவர். வழக்காடு மன்றங்களில் தம் கணவருடன் சென்”று பேசுபவர். தன் கணவர் துரைராசுவின்  எழுத்துக்கும் பேச்சுக்கும் இலக்கியப் பணிகளுக்கும் துணைபுரிபவர். திருக்குறள் பேரவையின் உறுப்பினர்.

Thursday, December 5, 2013

விழிமின் எழுமின் விவேகாநந்தரின் உலகச் சிந்தனைகள்

(4-12-2013 அன்று பாரதிய வித்யாபவனில் விழிமின் எழுமின் விவேகாநந்தரின் உலகச் சிந்தனைகள் எனும் தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)


       மனத்துக்கண்  மாசிலன் ஆதல் அனைத்தறன்  
ஆகுல நீர பிற.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.   

   
தமிழகப் புலவர் குழுவும் பாரதிய வித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம் இணைந்து ஒராண்டு காலமாக  நடத்தும் விழிமின் எழுமின் விவேகாநந்தரின் சிந்தனைகள் தலைப்பில் 11 சிந்தனையாளர்கள் பேசியுள்ளனர். இதுநாள்வரை 11 சான்றோர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். விவேகானந்தரின் 150 அகவைத் திருவிழாவை அறிவுப்பூர்வமாக பெருமகனின் சிந்தனையை எண்ணி உணர்ந்து மகிழும் சூழலை உருவாக்கிய சகோதரி கி.ஆ.பெ.வி யின் திருமகள் மணிமேகலைக் கண்ணன் அவர்களையும் நினைத்தாலே இனிக்கும் கிருட்டிணா இனிப்பக உரிமையாளர் முரளி அவர்களையும் துணை நிற்கும் பெருமக்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தை தெருவித்துக் கொள்கிறேன்.

            நிறைவு மாதத்திற்கு விவேகாநந்தரின் உலகச் சிந்தனைகள் எனும் தலைப்பில் என்னைப் பேச அழைத்துள்ளீர்கள். விருது வழங்க பாவேந்தர் பரம்பரையை உருவாக்கி வரும் பெருங்கவிஞர் பொன்னடியார் அவர்களை அழைத்துள்ளீர்கள். நூற்றாண்டு விழாக்கண்ட பேரறிஞர் மு. வரதராசனாரின் பெயரில் வழங்குவது சாலப் பொருத்தமாகும்.

நிகழ்வுக்கு வாழ்த்துரை வழங்கிய மூத்த வழக்கறிஞர் காந்தி மிகச் சிறந்த புரவலர். அவர் தம்முடைய வரலாற்றை நூலாக எழுதியுள்ளார். தம் இளமைக்காலத்தில் மிகச்சாதரண மாணவனாக  இருந்து உயர்ந்துள்ளதை பதிவு செய்துள்ளார்.இளைஞர்கள் அனைவரும்  படிக்கவேண்டிய நூல். முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் இன்றைய சமச்சீர் கல்விக்கு மூல காரணமானவர். பெருமக்களின் வருகையெல்லாம் மன மகிழ்வைத் தருகிறது. வருகை தந்திருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

நரேந்திரர்
                அருள்ஞானி நரேந்திர தத்தா 12-1-1863 அன்று விசுவனாத தத்தா புவனேசுவரி இணையருக்கு மேற்கு வங்கத்தில் கல்கத்தாநகரில் செல்வச்செழிப்பான குடும்பத்தில்  பிறந்தார். கொல்கத்தா மாநிலக்  கல்லூரியின் நுழைவுத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்வு பெற்றார்.  1884 ஆம் ஆண்டில் சுகாட்டிசு சர்ச் கலலூரி  உயர் கல்வி பயின்று தத்துவத்தில் இளங்கலை  பட்டம் பெற்றார்.. தந்தையாரின் தொழில் நலிவால் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த நாரேந்திரர் கல்லூரியின் ஏழைமாணவர்களில் ஒருவராகப் பயின்றார்.

குருநாதர்
1881 பிற்பகுதி 1882 முற்பகுதி  காலங்களில் தம் குருநாதர் இராமகிருட்டிண பரமகம்சர் அவர்களை தக்சனேசுவரத்தில் சந்தித்தார். இந்த அருட் சந்திப்பே நாரேந்திரரின் வாழ்கையின் திருப்பும்னையானது. குருநாதரிடம் தொடக்கத்தில் சாதாரணமாகச் சென்றவர் இராமகிருட்டிண பரமகம்சரின் தலைசிறந்த சீடரானார். நான்கு ஆண்டுகள் இராமகி ருட்டிணரின் தொடர்ந்து சென்று அருட்பணிஆற்றினார். 1895 இல் குருநாதருக்கு புற்றுநோய் தொண்டையில் தாக்க மருதுத்வதிற்கு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார். அந்தக் காலக கட்டங்களில் இராமகிருட்டிணரின் சீடர்கள் அருளுரைகள் வழங்கினர். நரேந்திரர் குருநாதரின் தொண்டினை சிறப்புறச் செய்தார். 1886ஆம் ஆண்டு இராமகிருட்டிணர் காலமானார்.

இந்தியப் பயணம்
      குருநாதரின் மறைவுக்குப் பின் நான்கு ஆண்டுகள்  இந்தியா முழுமையும் பயணம் செய்து அருளுரை ஆற்றி ஆண்மீகத் தொண்டாற்றினார். .1892 1893 ஆம் ஆண்டுகளில் கன்னியாகுமரி மதுரை கும்பகோணம் சென்னை தமிழகத்தின் பகுதிகட்கு வந்தார். மதுரையில் இராமனாதபுரம் அரசர் பாற்கர சேதுபதி அவர்களைச் சந்தித்தார். இராமநாதபுரம் அரசர் தனக்கு வந்த அமெரிக்கா அழைப்பை நரேந்திரரை செல்லுமாறு வேண்டினார். தென்னகத்துப் பெருமக்களும் தமிழக ஆன்மீக சிந்தனையாளர்களும், சென்னையைச் சேர்ந்த பெருமாள் என்ற பெருமகன் வீடு வீடாகச் சென்று நரேந்திரரின் பயணத்திற்கு பொருள்சேர்த்தனர்

விவேகாநந்தர் உலகப் பயணம்
உலகச் சமய  மாநாட்டிற்கு 31 – 5 - 1893  மும்பையிலிருந்து அமெரிக்கா செல்லும்போது சுவாமி.  விவேகாநந்தராக செல்கிறார். சப்பானின் (நாகசாகி, கோபே, யோக்கோமா, ஒசாகா,) சினா கனடா வழியாக   30 – 7 -1893 அன்று சிகாக்கோ அடைந்தார். சுவாமி விவேகாநந்தர்  கார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கென்றி ரைட் அவர்களைத் தொடர்பு கொண்டு  பலகலைக்கழகத்தில்  உரையாற்றினார். சிக்காக்கோ பாராளுமன்றத்தில் பேசுவதற்கு முறையான அனுமதி இன்மையறிந்து தங்களிடம் அனுமதி கேட்பது என்பது சூரியனிடம் தன் அருளொளியை வழங்க அனுமதி கேட்பதைப் போன்றது என்கிறார். பேராசிரியர் ரைட்.("To ask for your credentials is like asking the sun to state its right to shine in the heavens" )

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் 11 – 09 – 1893 அன்று உலகச் சமய மாநாட்டில் அரியதொரு உரையாற்றினார் தொடக்கத்திலேயே அமெரிக்கா சகோதர சகோதரிகளே என முங்கிய முழக்கம் அரங்கமே எழுந்துநின்று கரவொலி எழுப்பியது. சுவாமி விவேகாநந்தரின் 150  அகவை நிறைவின்பொதும் உலகமே போற்றும் முழ்க்கமாக உள்ளது

இங்கிலாந்தில் நவம்பர் 1895ல் மார்க்கெட் எலிச்பத் என்ற புனித் ஐரிசு மங்கையை சந்தித்தார். இவர்தான் அருட்சகோதரி நிவேதிதா. 1896ல் இந்தியவரலாற்று அறிஞர்  அக்ச்போர்டு பல்கலைக்கழக மாக்சுமுல்லரை சந்தித்தார். தம் குருநாதர் இராமகிருட்டிணர் வரலாற்றை பதிவு செய்தார். செருமணியில் இந்திய வரலாற்று அறிஞர் பவுல் டூயுசன் அவர்களைச் சந்தித்தார்.

தமிழக வரவேற்பு
சுவாமி  விவேகாநந்தர் 15-1-1897 அன்’று கொலம்போ வழியாக பாம்பன் குந்துக்கால் பகுதிக்கு வந்தடைந்தார். பாம்பனில் மிகச்சிறப்பான வரவேற்பளித்தார் இராமநாதபுரம் அரசர் பாட்கர சேதுபதி. பின் இராமேசுவரம் இராமநாதபுரம் மதுரை கும்பகோணம் சென்னை வழியாக சென்னை வந்தடைந்தார். 1 – 5- 1897 அன்று கல்கத்தாவில் இராமகிருட்டிண மடத்தைத் தொடங்கினார்.

சுவாமி விவேகாநந்தர் மீண்டும் 1899 – 1892 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வேதாந்த கருத்துக்களை உலகம் முழுமையும் பரப்பினார்.

ஆசை
”ஆசைகள் இருந்து அவற்றை நிறைவேற்றும் வழி  கிடைக்காமல் போகும்போதுதான் துன்பம் எனற வினோதமான் பிரதிச்செயல் உண்டாகிறது. ஆசைக்குக் காரணம் யார்? நான்,  நானே எனவே இப்போது நான் படும் துன்பங்களுக்கெல்லாம் நானே காரணம்.” 11 12 1895

வண்ணத்துப்புழு தன் உடலிலிருந்து சுரக்கின்றபொருளால் தன்னைச் சுற்றி தானே கூடமைத்துக் கொண்டு அதில் தானே சிறைப்படுகிறது அங்கே அதன் உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் இறுதில் அதுவே ஞானம் பெறுகிறதது அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது

மனிதனே கடவுள்
 மனிதன் இயல்பிலேயே கொடியவன் அல்ல அவன் தூயவன் முற்றிலும் புனிதமானவன்  தெய்வீகமாணவன் நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் கடவுள்தான். 11 12 1895
 சோலனும் குரோசனும் பற்றியகதை  ஆசியாமைனர் மகிழ்ச்சி நிறைந்த இடம் என்று அரசன் குரோசசு முனிவர் சொலனிடம் கூறுகிறான்.உங்கள் வாழ்வின் இறுதிவரை  பொறுங்கள் என கூறிகிறார். என்ன உளறிகிறீர்கள்  என கோபமுறுகிறான். நாளடைவில் பாரசீகர்கள் குரோசனை வென்று அவனை உயிருடன் எரிக்குமாறு கட்டளையிட்டனர் சிதை அடுக்கப்பட்டவுடன் சோலன் சோலன் என்று கத்தினான். யாரை நினைத்துக் கத்துகிறாய் என பாரசீகமன்னன் கேட்டபோது தனக்கும் சோலனுக்கும் நடந்த உரையாடலைக் கூறியவுடன் மன்னன் இரக்கம் கொண்டு விடுவித்தான். 18 – 12-  1895.
      இன்பம் எங்கிருக்கிறதோ ஆனந்தம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் இறைவனாகிய சக்தி இருக்கிறது. 8 – 1 – 1896
மாயை
மாயையை இன்னொறு மாயையால் முறியடிக்கலாம். அதுதான சாதனைப் பயிற்சி என்கிறார் சுவாமி நெருப்பு நெருப்பையே தின்றுவிடும். ஒருமேகம் பழைய மேகத்தைத் துரத்தும் பிறகு இரண்டுமே மறைந்து விடும். முகமதியர்கள் இந்துக்கள் நரி நாயை அமங்களமான மிருகங்களாகவே காண்கிறார்கள் நாய் முகர்ந்துவிட்டாலே உண்ணத் தகுதியற்றதாகிவிடுகிறது. ஒரு ஏழை முகமதியன் வீட்டில்  உணவில்  ஒரு நரி சிறுபகுதியை தின்று விடுகிறதுன. தனக்காக சிரமப்பட்டு செய்த உணவை திண்ண முடியவில்லையே என்ற கவலையில்  முல்லாவிடம் நரி என் ஆசையில்  மண்ணைப் போட்டுவிட்டது என முறையிட்டான்.முல்லா ஒரு பரிகாரம் கூறினார் ஒரு நாயைப் பிடித்து சிறிது உணவை சாப்பிடச் செய்துவிடு. நாயும் நரியும் பிறவிப் பகைவர்கள் ஒன்றின் அசுத்தத்தை மற்றொன்று மாற்றிவிடும். முள்ளை  முள்ளால்  எடுத்துவிட்டு எறிந்துவிடுவது போன்றது. 22 – 1 – 1896

இருப்பது ஒன்றே
 பிரபஞ்சத்தில் மூன்றும் இல்லை இரண்டும் இல்லை இருப்பது ஒன்றே. மாயையால் பலவாகத் தெரிகிறது. நெடுந்தூரத்தில் உங்கள் நண்பன் வருவதாக வைத்துக் கொள்வோம் இருவருக்கும் இடையே உள்ள இருள் மூடுபணி புகை காரணமாக யாரோ என நினைக்கிறீர்ககள். நண்பனை வேறு ஒருவராக நிணைக்கும்போது அவன் வேறொருவனாகத் தெரிகிறான். நண்பனைக் காணும்போது அ அவன் மறைகிறான். இரண்டு நிலையிலும் நீங்கள் பார்ப்பது ஒருவரைத்தான்.
சுவாமி அவர்கள் விந்தை உலகில் ஆலிசி(Alice in woderland) சிறுவர் கதைகளில் தாம் படித்தவற்றை கூறுகிறார்கள். ஒன்றிற்கும் மன்றொன்றிற்கும்  தொடர்பு இல்லாத நிகழ்ச்சி வரும் ஒரு சம்பந்தமும் இல்லாத அடுத்த சம்பவத்தில் அது முடியும் சிறுவர்களாக இருக்கும்போது அதில் பெரியதொடர்பு இருப்பது போல் தோன்றியது. கனவு காணும்போது தொடர்பு உடையதாகத்தான் தோன்றும் விழித்தபின்பு அதன் தொடர்பிண்மை புரிகிறது.
“ மாயை வான்வெளியில்  ஓடும் மேகக் கூட்டங்களைப்போல் தோன்றி மறைபவை. மா/றாத அந்தக் கதிரவன் நீங்களே இரண்டும் ஒன்றே. அதனை வெளியில் நின்று பார்க்கும்போது கடவுள் என்கிறீர்கள் உள்ளிருந்து பார்க்கும்போது அது நீங்களே.இரண்டும் ஒன்றே உங்களிருந்து வேறான இறைவன் இல்லை. உங்களைவிட  உயர்ந்த உண்மையான இறைவனும் இல்லை.” 29 – 1 - 1896 

மதத்தின் தோற்றம்
      மதங்கள் தோன்றியதைப் பற்றி சுவாமிகள் கூறுகிறார். தற்கால அறிஞர்கள் இரண்டு கொள்கைகளை ஒப்புகின்றனர். ஒன்று இறந்தமுன்னோர்களை வழிபடுதல் மற்றொன்று எலலையற்ற பரம்பொருள் கருத்தின் பரிணாம வளர்ச்சி இயற்கைச் சக்திகளை உருவகப்படுத்தி  வழிபடத் தொடங்கியதிலிருந்துதான் மதம் தோன்றியது. எகிப்தியர் , பாபிலோனியர்,சீனர்கள் அமெரிக்கர்கள் மற்று பல இடங்களில் முன்னோர் வழிபாடே மதங்களாக தோன்றியுள்ளன. பண்டைய இந்துக்களும்  முன்னோர் வழிபாடே மதத்திற்கு அடிப்படையாக இருந்தது (7 – 6 – 1896)
      புலன்களின் மூலம் எல்லையற்ற சக்தியையும் ஆனந்தத்தையும்  அடைய முயலும்போது  அவன் விடாது பிடித்துக்கொண்டிருக்கும் தனித்துவத்தைப் பற்றிய கருத்துக்களைத் துறந்துவிடவேண்டும். நான்தான் முதலில் என்று புலன்கள் கூற்கின்றன அறநெறியோ நான்தான் கடைசி என்று கூறுகிறது.
      பழைய ஏற்பாட்டில்  உள்ள பிரளயக் கதையையும் பழங்கால எகிப்தியர் , பாபிலோனியர்,சீனர்கள் இந்துக்கள் இவர்களிடையேயும் இக் கதை நிலவுவதை சுவாமி  கூறுகிறார்.  மனு என்ற பண்டைய முனிவர் கங்கைக் கரையில்  தவம் செய்யும்போது ஒரு சிறிய  மீன் தன்னை பெரியமீன் துரத்துவதாகவும்  அடைக்களம் புகுந்தது. அதைத் தம்மின் கமண்டலத்தில் விட்டார். பெரிதாக வளர்ந்ததால் கமண்டலத்தில் வாழமுடியாது  என்றது மனு குளத்தில் விட்டார். அது குளத்தளவு வளர்ந்த்தால் குளத்தில் வாழமுடியாது என்றது மனு அதை ஆற்றில் விட்டார். ஆறளவு வளர்ந்துவிட்டதால் மனு அதை கடலில் விட்டார். அப்போது அந்த மீன் ஓ மனௌ நான்தான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததவன் நான் இந்த உலகத்தை பெருவெள்ளத்தால் நிரப்பப் போகிறேன்.  நீ ஒரு பெரிய கப்பல் செய்து  ஒவ்வொரு மிருகத்திலும் ஒரு ஆண் ஒரு பெண் பாதுகாத்து வை. உன்  குடும்பத்தையும்  ஏற்றிக்கொள் என் கொம்பு தண்ணீரில்  நீட்டிக் கொண்டிருக்கும் கப்பலை அந்தக் கொம்பில் கட்டி விடுபிரளயம் நின்றவுடன் கப்பலை விட்டு வெளியே வந்து உலகில  மனித இனத்தைப் பெருக்கு என நீரில் மூழ்கியது. அது கூறியபடியே செய்தார். மனுவிலிருந்து தோன்றியதால் மனிதன் ஆனோம் என்று சுவாமி கூறுகிறார் (21-6-1896)

ஆன்மா
      ”தன்னைத் தேடும்படியும் உணரும்படியும் உங்களைத் தூண்டுவது உங்களுக்கு உள்ளே இருக்கும் கடவுள்தான்.கோயில்களிலும் சர்ச்சுகளிலும் மண்ணிலுக்  விண்ணிலும் மற்றெல்லா  இடங்களிலும் தேடிவிட்டு பலகாலமாக கட்வுளைத் தேடிவிட்டு ஆரம்பித்த இடத்திற்கே அதாவது உங்கள் ஆன்மாவிற்கே  வந்து சேறுகிறீர்கள்.” (21-6-1896)
இருள்
      சுவாமி அவர்கள் முதலில் இருளே எங்கும் இருந்த்து. மூன்று பெரிய கவிஞர்கள் கவிதையில் மில்டன் “வெளிச்சம் இல்லை கண்ணுக்கு புலனாகிற இருள் உண்டு. “ஊசியாள் துளைக்கக்கூடிய இருள் என்கிறார் காளிதசர்.ஆனால் வேதத்தில் இருளில் மறைந்து கிடக்கும் இருள்” சிறிது நேரத்தில் வானம் முழுதும் பரவுகின்றது  இருண்டமேகங்கள் ஒன்றன்மேல் ஒன்று வந்து குவிந்து வெள்ளமாய் பொழிகின்றன(13-10-1896).
      மிருகங்கள் தாவரத்தை அழித்து வாழ்கின்றன.மனிதர்கள் மிருகங்களை அழித்து வாழ்கிறார்கள்.மிக மோசமானது என்னவென்றால் வலியவர் எளியவரை அழித்து வாழ்வதுதான் இது உலகம் முழுதும் நடைபெறுகிறது. இதுதான் மாயை   (13-10-1896)


கற்புநெறி.
ஒருநாட்டின் வீழ்ச்சிக்கு முதல் அறிகுறி கற்புநெறி பிறழ்வதே. கற்புநெறி நிலைபிறழத் தொடங்கிவிட்டால் அந்த இனத்தின் அழிவு அழிவு ஆரம்பித்துவிட்டது.இந்த துன்பங்ளூக்கு எங்கே போய் தீர்வு காண்பது, (13-10-1896).

சண்டைக்கு காரணம்
பிறருடைய தெய்வங்களை நமது தெய்வங்களை வைத்தும் பிறருடைய இலட்சியங்களை நமது லட்சியங்களை வைத்தும் பிறருடைய நோக்கங்களை நமது நோக்கங்களை வைத்தும் எடைபோடுவதுதான் பெருமளவு சண்டைகளுக்கு காராணம் என்கிறார் சுவாமி. (20 – 10 – 1896)

கருணைகாட்டுங்கள்
கருணையே இல்லாமல் அறிவுமட்டும்  நிறைய இருப்பதைவிட அறிவே சிறிதும் இல்லாமல் கருணை சிறிதேனும் இருப்பதையே விரும்புகிறேன் என்கிறார் சுவாமி. (27 – 10 – 1896)
இதயமும் அறிவும் இணைந்த ஒரு நிலையே நமக்குத்தேவை எல்லையற்ற பரந்த இதயமும்  உணர்ச்சியும் அதேவேளையில் எல்லையற்ற  அறிவும் நமக்கு இருக்க வேண்டும். (27 – 10 – 1896)

விடாமுயற்சி
      ஈசாப்பின் கதை ஒன்றை சுவாமிகள் கூறி ஆசை என்ற மாயை பற்றிக் கூறுகிறார்.ஒரு கலைமான் தன் குட்டியிடம் தன் அழகு வலிமை ஆற்றல் அனைத்தையும் கூறி பெருமைபட்டுக்கொண்டிருந்தது. அப்போது தொலைவில் வேட்டை நாயின் குரைக்கும்  சப்தம் கேட்டவுடன் அவ்வளவுதான் எடுத்தது ஓட்டம் பின் மூச்சுத்திணர வந்தது. குட்டி சக்திவாய்ந்தவன் என்று கூறினாயே நாய் குரைத்த்தும் இப்படி ஓடி விட்டாயே அது எப்படி. தைரியமானவந்தான் ஆனால் நாய் குறைக்கு சப்தம் கேட்டால் தைரியமெல்லாம் பறந்து விடுகிறது. நம் மனித குலம்   பலமும்  தைரியமும் வாய்ந்தவர்கள் என்று கருதுகிறோம். துன்பம் ஆசைகளாகிய நாய்கள் நம்மைப் குரைக்கும்போது மானைப் போலவே நடந்துகொள்கிறோம் நிலைமை இதுவானால் அறிவுரைகளால் என்ன பயன். விடாமுயற்சி முடிவில் வெற்றிதரும். ஒருநாளில் எதையும் சாதிக்க முடியாது. (27-10-1896)

குறிக்கோள்
      இலட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகளைச் செய்வானால் இலட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான். எனவே இலட்சியம் நமது இதயத்தில் மூளையில் நாடிநரம்புகளில் புகும் வரை நமது இரத்தத் துளிகளில் கலந்து துடிக்கும்வரை உடலில் அனுக்கள்தோறும் ஊடுறுவும் வரை நாம் அதைப் பற்றியே  பேச சிந்திக்க வேண்டும் உள்ளம் நிறையும்போது வாய் பேசுகிறது உள்ளத்தின் நிறைவுதான் கைகளை வேலைசெய்யத் தூண்டுகிறது என சுவாமி அருளுரை வழங்கியுள்ளார். (27-10-1896)

அறியாமை
      சுவாமிகள் ரோமாபுரி பணக்காரனைப் பற்றிக் கூறுகிறார். தன்சொத்தில் 10 இலட்சம் பவுண்ட்தான் எஞ்சியிருந்தன என்பதை ஒரு நாள் கண்டான். நாளைகு என்ன செய்வது என்று திகைத்துபோய் தற்கொலை செய்துகொண்டான்.10 இலட்சம் பவுண்ட்கூட அவனு ஏழ்மைதான். தன் இளமையில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதுதான் இன்பத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லும் இப்போது அப்படி நினைக்கவில்லை இறுதியில்  அகன்று செல்லும் மூட நம்பிக்கையாகும். என சுவாமிகள் அறியாமையைக் கூறுகிறார். (29-10-1896)
      பழங்காலத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று தின்றார்கள். ஆனால் இன்று ஒருவரை ஒருவர் சாப்பிடுவதில்லை. ஆனால் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.இதனால் நாடுகளும்  நகரங்களுமே அழிந்து போகின்றன. (29-10-1896)
      நாம் எல்லோரு நாத்திகர்களே. ஆனாலும் நான் நாத்திகன் என்பவனோடு சண்டை போடுகிறோம் நாம் எல்லோரும்  அஞ்ஞான் இருளில் மூழ்கி இருக்கிறோம். நம்மைப் பொறுதுவரை ஆன்மீக என்பதெல்லாம்  வெறு சாத்திர அறிவு வாய் சம்பம் வெறும்  வெறுமை மட்டுமே. ஒருவனுக்கு நன்றாகப் பேசத்தெரிந்தால் போதும் அவனை ஆன்மீகவாதி  என்று கூறிவிடுகிறோம் இதுவெல்லாம் ஆன்மீகம் அல்ல என்று சுவாமி கூறுகிறார்.

இன்பமும் துன்பமும்

      தீமை நன்மை இரண்டுமே தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போவதாக உலக வரலாறு கூறுகிறது. காட்டில் வசிக்கும் மானிடனுக்கு இன்பமனுபவிக்கும்  சக்தி மிகக் குறைவு. வயிற்றுக்கு உணவு கிடைக்காவிட்டால் துன்பமடைகிறான். காட்டில் அவன் விருப்பம்போல் சுற்றி விருப்பம்போல் வேட்டையாடும் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அவனைப் போல் இன்பம் அடைபவர்கள் யாரும் கிடையாது.அதே மனிதன் அறிவை வளர்த்துக் கொண்டால் அவனுக்கு இன்பனுபவம் அதிகரிக்கிறது. ஓர் அழகிய கவிதையை படிப்பதில் இன்பம் காண்கிறான்.கணிதப்பிரச்சனையில் அவன் தன்னை மறந்துவிடுகிறான் அதன் கூடவே நுட்பமடைந்த நரம்புகள் மனத்துன்பத்திற்கு அடிமைப் படுகின்றன். காட்டுமனிதனுகு மனத் துன்பம் என்பதே இல்லை. (3-11-1896)
      உலகின் பணக்காரநாடான உங்கள் நாட்டையே எடுத்துக்  கொள்வோம்.உங்கள் நாடு மற்ற நாடுகளைவிட போகம் மிகுந்தது. அதே நேரத்தில் இங்கே உள்ள துன்பத்தின் தீவிரத்தையும் நோக்குங்கள்.உங்கள் நாட்டில்தான் பைத்தியக்காரர்கள்   அதிகம். உங்களைவிட இன்பம் குறைவாக  அனுபவிப்பவர்களுக்கு துன்பமும் குறைவாகவே இருக்கிறது.

மூடநம்பிக்கை

      சுவாமிகள் இளைஞனாக இருந்த போது ஒரு நிகழ்ச்சியை நினைவுப்டுத்துகிறார்.ஒரு வாலிபனின் தந்தை சொத்தில்லாத நிலையில் பெரிய குடும்பத்தை அவன் தலையில் கட்டிவிட்டு .இறந்துவிடுகிறார்.தந்தையின் நன்பர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. ஒரு மதவாதியிடம் சென்று துன்பத்தைக் கூறியபோது அவர் எல்லாம் நண்மைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே என அறிவுரை வழங்கினார். பழுத்த புண்ணின் மீது தங்க இலையை வைத்து மறைப்பது போன்ற செயல் இதெல்லாம் மிகப் பழைமையான் பரிகாரம். ஆறு மாத்திற்குப் பின்னால் மதவாதிக்கு ஒரு குழந்தை பிறந்து ஒரு விருந்து வைத்தார். அந்த வாலிபரையும் அழைத்திருந்தார்.கடவுளின் கருனைக்கு நன்றி என வழிபட்டார். உடனே வாலிபன் எழுந்து நின்று நிறுத்துங்கள் இதெல்லாம் துன்பம் என்று கூறினார் .என் தந்தை வெளிப்படையாக் இறந்ததை நன்மை என்று கூறினீர்கள் அதன்படி உங்களுக்கு குழந்தை பிறந்திருப்பது தீமைதானே என்று கூறினான்.இதுதான் துன்பத்தைத் துடைக்கும் வழியா நல்லவர்களாக இருங்கள். அதிமூடி மறைக்க முயலாதீர்கள். துன்புறுவோருக்கு அன்பு காட்டுங்கள் என சுவாமி அருளுரை வழங்குகிறார். (3-11-1896)
கவிதைகளின் அருளுணர்வு
      கவிதைகள் வாயிலாக மக்களுக்கு அருளுணர்வு உண்டாகிறது என்கிறார் பிளாட்டோ.. உண்மையை உணர்ந்தவர்களாகிய பழங்கால கவிகள் சாதரன மனித் நிலையிலிருந்து உயர் நிலைக்குச் சென்று கவிதைவடிவமாக  எடுத்துக் காட்டினார்கள்.(11-12-1896) என்று சுவாமி கூறுகிறார்.
      சுவாமி கூறிய வண்ணம் அவர் வழங்கிய கவிதையை கேளுங்கள். சௌந்திர கைலாசம் அம்மையார் மொழிபெயர்த்தது.
அனைத்தும் ஆகி அன்பாகி
   அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
   உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
   இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
   இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
   மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்தில் எல்லாம் உளன்

        என்ற குறளுக்கு சான்றாக இலக்கணமாக வாழ்ந்த பெருமகன். உலகமக்கள் உள்ளதில் எல்லாம் வாழ்கிறர். விழாவிற்கு வருகை தந்த பெருமக்கட்கும் நடதிய பெருமக்கட்கு நன்றி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.