Friday, April 30, 2010

காவியச் சான்றோன் தி.க.ச புகழ் வாழ்க!

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆசிரியர், தமிழ்ப்பணி

திராவிட இயக்கத் தோன்றல்
தீந்தமிழ் வளர்த்த தென்றல்
போராடும் குணமோ சொந்தம்
பொங்கிடும் அன்புச் சந்தம்
நேரான பார்வைச் சான்றோன்
நேர்நிறை காணும் மூத்தோன்
வேராகக் கழகம் காககும்
வேந்தர் அன்பழகர் வாழி!

நிமிர்ந்த நன்நடையின் ஆற்றல்
நிகரிலா அரிமா நோக்கு
பூமியின் சுழற்சி போன்றே
புவியுள தமிழர் காத்தார்
எழுந்துள அறவோர் தம்மை
ஏற்றியே போற்றும் நெஞ்சம்
தொழுதிடும் குணங்கள் கொண்ட
தொல்புகழ் அன்பழகர் முன்னே

வணங்கியே வணக்கம் சொன்னேன்!

வான்புகழ் திகச எண்ணி
வந்துள அருமைச் சாண்றோர்
சொந்தமாய் திகச போற்றும்
சார்ந்துள நடிக வேள்கள்
முந்திடும் தமிழை ஏந்தும்
முத்தமிழ் அறிஞர் மக்காள்
வந்துமே வணக்கம் சொன்னேன்
வாழிய உங்கள் கொற்றம்
.

நாடகக் கலையை நன்றாய்
நாட்டிய கொள்கைக் கோமான்
தேடரும் கலையின் வித்தாய்
தோன்றிய அறத்தின் சான்றோன்
பீடுறு அவ்வைப் பாட்டி
பெற்றிமை வாழ்க்கை காட்டி
பாடிடும் வாழ்வாய் வாழ்ந்த
பார்புகழ் திகச அன்றோ!

நாட்டையே இன்றும் ஆளும்
நாயகர் கலைஞர் எம்மான்
நாடகக் கலையில் வேந்தை
நல்தொல் காப்பியர் என்றார்!
காட்டிடும் திரையில் இன்றும்
காவியச் சான்றோன் பேரால்
கேட்டிடும் அவ்வை சண்முகி
கேண்மையின் சிறப்பு அன்றோ!

தமிழரின் ஆட்சிப் பேற்றை
தலைமையாய் முதலாய் வென்ற
எமின்இன ஏந்தல் அண்ணா
ஏற்றாமாய் மேலவை மன்றம்
நமின்அவ்வை நாடக மேதை
நாட்டமாய் கலைக்குத் தந்தார்
தமிழரின் கலைவாழ்வுச் செம்மல்
தகுதியாம் அவ்வை அன்றோ!

மலேசியா சிங்கை சென்றார்
மாசிலா கலையால் வென்றார்!
தலம்புகழ் நாடகச் செல்வர்
தக்கநல் மாட்சி அன்றோ!
உலகெலாம் விரிந்து நிற்கும்
உன்னதக் கலையின் வேந்தர்
தலமெலாம் இன்றும் பேசும்
தவநெறி அவ்வைச் சான்றோன்!

இந்திய நாட்டில் எங்கும்
இணையிலா நாடகக் காட்சி
சிந்தனைக் கலைஞர் எல்லாம்
சீர்மிகு வாழ்வைப் பெற்றார்
செந்தமிழ் மக்கள் நாவில்
செந்தேனைப் போன்றே நன்று
நம்தமிழ் காத்த மேலோன்
திகச புகழே வாழி!

பாரத நாட்டின் மேன்மைப்
பத்மசிறி பட்டம் பெற்றார்
சீர்மிகு நடிகர் காக்க
சிந்தனை இதழைக் கண்டார்!
வேரதாம் தம்மின் வாழ்க்கை
வியத்தகு நூலை யாத்தார்
வரலாறு காக்கும் வாழ்வாய்
வாழ்ந்த நம்அவ்வைச் சான்றோன்


வழிவழி மக்கள் பெற்றார்
வாஞ்சையாய் கலையும் தந்தார்
பொழிவுடன் தமிழை ஏந்தி
புகழ், கலைவாணன் சேர்ந்தே
தெளிவுடை அமெரிக்கா மண்ணில்
தேர்ந்தநல் நாடக காட்சி
களிப்புடன் தந்தை போற்றும்
கலைவழி மக்கள் வாழ்க!

தந்தையின் பெயரைத் தாங்கி
தனித்தமிழ் காக்கும் பிள்ளை
செந்தமிழ் இசையைப் பாரில்
செழுமையாய்ப் பாடும் பாடல்
சிந்தனைச் சங்கரதாசு மன்றம்
சீர்மிகு சான்றோன் வழியில்
செந்தமிழ்க் கலைவாணண் காக்கும்
செயலறம் வாழி! வாழி!

பத்மசிறீ தி.க.சண்முகம் 98ஆம் அகவை விழாவில் 26-04-2010 அன்று மாண்பமை பேராசிரியர்.க.அன்பழகனார் தலைமையில் சென்னை இராணி சீதை மன்றத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பாடிய கவிதை.

No comments:

Post a Comment