
நோபல் தமிழன் இராமகிருட்டிணன்
புத்தொளி புகுந்து நம்மின்
புதுமைகள் கண்டு மாட்சி
வித்தக விருதாம் நோபல்
வியத்தகு தமிழன் பெற்றான்
எத்திக்கும் புகழைப் பாய்ச்சும்
ஏற்றமாய் நம்மின் மைந்தன்
புத்தியின் திறத்தால் பாரில்
புகழேணி கண்டான் வாழி !
தில்லையில் பிறந்த செல்வன்
திருமிகு நாட்டின் பற்றால்
எல்லையில் ஆவல் பொங்க
ஏங்கிய வீட்டைக் கண்டான்
பல்புகழ் வளர்ச்சி எல்லாம்
பல்கிடும் வாழ்வில் கண்டும்
தொல்புகழ் தாயின் மண்ணை
தொழுதிடும் மைந்தன் வாழி!
இயற்பியல் தேர்ந்த நல்லோன்
இன்றைய உயர்வைக் கண்டோன்
முயற்சியில் அமெரிக்க மண்ணில்
முழுமையாய் உழைத்தே வென்றான்
அயர்விலா ஆற்றல் பேற்றால்
அகிலத்து விருதாம் நோபல்
உயர்வுடன் இணைந்து பெற்றான்
உன்னத பேற்றைத் தந்தான்!
வெங்கட் ராமன் பெற்ற
வெல்புகழ் இராம கிருட்டிணன்
தங்கத்தின் திறத்தைப் போன்றே
தலத்திலே புகழைப் பெற்றான்
சஙகங்கள் கூடிக் கூடி
சாதனைத் தமிழன் போற்ற
பொங்கிடும் அன்பால் நம்மின்
வாழ்துக்கள் சொல்வோம் நன்றே!