இருநூறு ஆண்டு காணும் அருட்பேரொளி வள்ளலார்
அருட்பெருஞ் சோதி வள்ளல்
அன்பினால் உலகை ஈர்த்தார்
நெறியிலா வஞ்ச நெஞ்சர்
நிந்தனை செய்தே மாய்த்தார்
வறுமையின் பிடியில் மக்கள்
வெந்திடும் துயரை சாய்க்க
கருவறை காக்கும் தாயாய்
கருணையாய் உணவை ஈந்தார்
உருவமே இல்லா ஒளியை
உன்னத இறையாய்த் தந்தார்
மறுவிடும் சாதி மதத்தை
மண்ணிலே புதைத்த நேயர்
தெருவெலாம் அருட்பா பாடி
திக்கெலாம் நிலையாய் உள்ளார்
அருளொளி அண்ணல் எம்மான்
அணிபுகழ் பேறே வாழ்க
தமையன் வாரா நிலையால்
தளிராக உரையைத் தந்தார்
எமைஆளும் பேறு பெற்ற
எண்ணிலாப் பாக்கள் யாத்தார்
சமற்கிரு தம்தாய் மொழி
சங்கரர் சொன்ன போது
இமைபோல தமிழைக் காக்க
இனியதந் தைமொழி என்றார்
இருநூறு ஆண்டு காணும்
இன்னலைப் போக்கும் வள்ளல்
தருமம் காக்கும் சென்னை
தகுதியாய் மொழிந்தார் அன்றே
பெருமையாம் முதல்வர் ஸ்டாலின்
பெற்றிமை விழாவைக் கண்டார்
அருள்நெறி காக்கும் பாதை
அருட்சன் மார்க்கம் வாழ்க